வங்கக்கடலில் இன்று புயல் உருவாகிறது.. நாளை மறுநாள் கரையை கடக்கும்!

Published On:

| By Mathi

Bay of Bengal- Cyclone- Today

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (அக்டோபர் 26) புயலாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் அக்டோபர் 28-ந் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாலை வெளியிட்ட அறிக்கையில், வங்கக்கடலின் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்குப் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.

ADVERTISEMENT

நேற்று (அக்டோபர் 25) இரவு 11.30 மணி நிலவரப்படி, இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு அட்சரேகை 15.3 டிகிரி, கிழக்கு தீர்க்கரேகை 89.7 டிகிரி பகுதியில் மையம் கொண்டிருந்தது.

இது அந்தமான் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்திலிருந்து வடக்கு – வடமேற்கே 520 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்திலிருந்து கிழக்கு – தென்கிழக்கே 730 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

ADVERTISEMENT

மேலும், காக்கிநாடாவிலிருந்து 820 கிலோமீட்டர், மச்சிலிப்பட்டினத்திலிருந்து 920 கிலோமீட்டர், பாபட்லாவிலிருந்து 990 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து, இன்று (அக்டோபர் 26) அதிகாலையில் புயலாக வலுப்பெறக்கூடும். தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக்டோபர் 27) காலை மத்திய மேற்கு வங்கக்கடலில் தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

அதன்பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 28 காலை ஆந்திரப் பிரதேசக் கடற்கரைக்கு அருகே மத்திய மேற்கு வங்கக்கடலில் அதிதீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும்.

அக்டோபர் 28-ல் கரையைக் கடக்கும்

இந்தப் புயல் அக்டோபர் 28-ந் தேதி முற்பகலில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே அதிதீவிரப் புயலாகக் கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அப்போது மணிக்கு 115 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 140 கிலோமீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share