வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் இன்று (அக்டோபர் 26) நள்ளிரவு தீவிர புயலாகவும், நாளை அதிதீவிர புயலாகவும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அர்னாப் புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் மேற்கு திசையில் நகர்ந்துள்ளது.
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, ஒடிசாவின் கோபால்பூரில் இருந்து 580 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து 610 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. மேலும், காக்கிநாடாவில் இருந்து 690 கி.மீ., மச்சிலிப்பட்டினத்தில் இருந்து 790 கி.மீ., பாபட்லாவில் இருந்து 860 கி.மீ. தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளது.
எப்போது கரையைக் கடக்கும்?
அர்னாப் புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவுக்குள் தீவிர புயலாக வலுப்பெறும். நாளை (அக்டோபர் 27) அதிதீவிர புயலாக மாறும். இதனைத் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் அக்டோபர் 28-ந் தேதி முற்பகலில் ஆந்திராவின் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே ஏனாம் அருகே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா- ஒடிஷா கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட்
அர்னாப் புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும். அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும். இதனால் ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
