ஜெம் வீரமணி வழக்கை முடிக்க லஞ்சமாக வாங்கிய பணத்தில் ஐபிஎஸ் அதிகாரி அருண் 24 கோடி ரூபாய்க்கு தங்கம் வாங்கியதாக கூறப்படுவது தொடர்பாக விசாரணையை முடுக்கி விட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் , கண்ணன் ஐபிஎஸ் ஆகியோரிடமும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக புதிதாக ஒரு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வாராகி என்பவர் தாக்கல் செய்த மனுவில், நீதிமன்ற உத்தரவுப்படி அக்டோபர் 1 மற்றும் அக்டோபர் 6 ஆகிய தேதிகளில் சிறப்பு புலனாய்வு விசாரணை அதிகாரியின் முன் ஆஜராகி ஜெம் வீரமணி வழக்கு தொடர்பான ஆதாரங்களையும் தகவல்களையும் கொடுத்துள்ளேன்.
வீரமணி மீதான வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 147.87 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கை மாறியுள்ளது. குறிப்பாக இந்த வழக்கை முடிப்பதற்கு வாங்கிய லஞ்சப் பணத்தில் பிரபல நகைக்கடையில் இருந்து சுமார் 24 கோடி ரூபாய்க்கு ஐபிஎஸ் அதிகாரி அருண் தங்கம் வாங்கியதாக தகவல் கிடைத்திருக்கிறது.
இந்த பணம் பிரகாஷ் கண்ணையன் என்பவர் மூலமாக கை மாறி இருக்கிறது. இந்த வழக்கில் விசாரணை தொடங்கியதும் அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி உள்ளார்.
எனவே லஞ்ச பணத்தை மறைக்கவே இந்த தங்கம் வாங்கப்பட்டுள்ளதா என்பதை அறிய ரசீதுகள், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
