டிஜிட்டல் செய்தி இணையதளங்களின் செயல்பாடுகளுக்கும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கும் மத்திய அரசின் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் (DPDP Act) அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, இந்தியாவின் 21 முன்னணி செய்தி நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தனிநபர்களின் தகவல்களைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு கொண்டுவந்த டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் (DPDP Act), பத்திரிகைச் சுதந்திரத்துக்கே அச்சுறுத்தலாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தச் சட்டத்தின் முக்கியப் பிரிவுகளை எதிர்த்து இந்தியாவின் 21 முன்னணி செய்தி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம் (Digital News Publishers Association – DNPA) உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 698 பக்க மனுவில், பத்திரிகைச் செயல்பாடுகளுக்குச் சட்டப்பூர்வமான விதிவிலக்கு வழங்கப்படாதது, அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள கருத்து சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் 7, 17(2), 18, 19, 27, 29, 36, 37, 44(3) ஆகிய பிரிவுகளையும், அதன் கீழ் உருவாக்கப்பட்ட 16, 17, 23 ஆகிய விதிகளையும் DNPA எதிர்த்துள்ளது.
இந்தச் சட்டப் பிரிவுகள், அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவு வழங்கும் சமத்துவ உரிமைக்கும், 19(1)(a) பிரிவு வழங்கும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கும் முரணாக இருக்கிறது என்பது DNPA வாதம்.
எனவே, அடிப்படை உரிமைகளுக்கு முரணாக உள்ள இந்தப் பிரிவுகளைச் செல்லாதவை என அறிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
இந்தச் சட்டத்தின் பல முக்கியமான விதிகள் 2027-ஆம் ஆண்டு மே மாதம் அமலுக்கு வரவுள்ள நிலையில், அதற்கு முன்பே உச்ச நீதிமன்றத்தை DNPA நாடியுள்ளது.
இந்த வழக்கு இன்று (அக்டோபர் 27) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழலை அம்பலப்படுத்த அனுமதி கேட்க வேண்டுமா?
டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஆனால், செய்திகளைச் சேகரித்து மக்களுக்கு உண்மைகளைத் தெரிவிக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இதே கட்டுப்பாடுகளை விதிப்பது சரியல்ல என்று DNPA வாதிடுகிறது.
உதாரணமாக, ஒரு அமைச்சர் அல்லது உயர் அதிகாரி மீது ஊழல் புகார் எழுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தப் புகாரின் உண்மைத்தன்மையை ஆராயும் பத்திரிகையாளர், சம்பந்தப்பட்ட நபரின் சொத்து விவரங்கள், பணப் பரிமாற்றங்கள் மற்றும் ஆவணங்களைச் சேகரிக்க வேண்டியிருக்கும். இத்தகைய தகவல்களைச் சேகரிப்பதற்கு முன்பே சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதலைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டால் என்ன நடக்கும்?
தம்மைப் பற்றிய விசாரணை நடைபெறுவதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் அந்த நபர், ஆதாரங்களை அழிக்கவோ, சாட்சிகளைத் திசைதிருப்பவோ, விசாரணையில் குறுக்கிடவோ வாய்ப்பு ஏற்படும் என்று DNPA எச்சரித்துள்ளது.
பொதுநலன் சார்ந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களிடமே முன்கூட்டியே அனுமதி கேட்க வேண்டிய நிலை உருவாகக் கூடாது என்பதே DNPA-வின் வாதம்.
வெளியான ஊழல் செய்திகளை அழிக்கச் சொல்ல முடியுமா?
இந்தச் சட்டத்தின்படி, ஒருவர் தனது தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதற்கு அளித்த அனுமதியைத் திரும்பப் பெறலாம். அந்தத் தகவல்களை அழிக்குமாறும் சில சூழ்நிலைகளில் கோரலாம். இது செய்தி நிறுவனங்களுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று DNPA தெரிவித்துள்ளது.
உதாரணமாக, ஒரு பெரிய நிறுவனத்தில் நடந்த ஊழல் குறித்து ஆதாரங்களுடன் செய்தி வெளியாகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த செய்தியில் தனது தனிப்பட்ட தகவல்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி, அவற்றை நீக்குமாறு சம்பந்தப்பட்ட நபர் கோரலாம்.
இதனால் உண்மையான ஊழல் செய்திகளைக்கூட நீக்க வேண்டிய நெருக்கடி செய்தி நிறுவனங்களுக்கு ஏற்படலாம் என்று DNPA எச்சரித்துள்ளது.
ஏனெனில், இணையத்தில் வெளியாகும் செய்திகள் அன்றைய நிகழ்வுகளை மட்டும் சொல்வதில்லை. அரசியல் முடிவுகள், ஊழல்கள், முறைகேடுகள் போன்றவற்றை எதிர்காலத் தலைமுறையினரும் தெரிந்துகொள்ள உதவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருக்கின்றன.
எனவே, தனிநபர்களின் தகவல்களைப் பாதுகாக்கும் அதே நேரத்தில், பொதுமக்கள் உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் உரிமையும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று DNPA வலியுறுத்தியுள்ளது.
ரகசியத் தகவல் அளிப்பவர்களின் நிலை என்ன?
புலனாய்வுப் பத்திரிகைகளின் முக்கியமான ஆதாரங்களில் ஒன்று, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குள் நடைபெறும் முறைகேடுகளை ரகசியமாகத் தெரிவிக்கும் ‘சோர்ஸ்’கள். இவர்களின் அடையாளங்களைப் பாதுகாப்பது பத்திரிகையாளர்களின் அடிப்படையான கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஆனால், டிஜிட்டல் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தகவல்களைக் கோரும் அரசின் அதிகாரம், செய்தி நிறுவனங்களிடம் இருக்கும் ரகசியத் தகவல்களையும் பெறுவதற்குப் பயன்படுத்தப்படலாம் என்று DNPA அச்சம் தெரிவித்துள்ளது.
இதனால் ஊழல், பெருநிறுவன முறைகேடுகள், தேர்தல் முறைகேடுகள் போன்றவற்றுக்கான ஆதாரங்களை வழங்கும் சோர்ஸ்களின் அடையாளங்கள் வெளிப்படும் அபாயம் இருக்கிறது.
தங்களது அடையாளம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டால், முறைகேடுகள் குறித்து பத்திரிகையாளர்களுக்குத் தகவல் அளிக்கவே பலரும் தயங்கக்கூடும் என்பதும் மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கியமான வாதமாகும்.
செய்தி இணையதளங்களை முடக்கவும் அதிகாரமா?
பொதுமக்களின் நலன் என்ற பெயரில் இணையத்தில் உள்ள சில தகவல்களைப் பார்க்க முடியாதபடி தடுக்க அரசுக்கு இந்தச் சட்டம் அதிகாரம் வழங்குகிறது. இதையும் DNPA எதிர்த்துள்ளது.
இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்தி இணையதளங்களை முடக்கவோ, குறிப்பிட்ட செய்திகளை மக்கள் படிக்க முடியாதபடி தடுக்கவோ வாய்ப்பு இருப்பதாக DNPA அச்சம் தெரிவித்துள்ளது.
இதனால் பத்திரிகைச் சுதந்திரம் பாதிக்கப்படுவதுடன், ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து செய்தியாளர்களுக்குத் தகவல் அளிக்க முன்வருபவர்களும் அச்சப்படக்கூடும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு விலக்கு.. பத்திரிகைகளுக்கு இல்லையா?
தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அரசின் சில நடவடிக்கைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்களின் நலனுக்காகச் செய்திகளைச் சேகரித்து வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு அத்தகைய விலக்கு வழங்கப்படவில்லை என்று DNPA குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் மாதமே மத்திய அரசுக்கு DNPA கடிதம் எழுதியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், சிங்கப்பூர், பிரிட்டன் போன்ற நாடுகளில் பத்திரிகையாளர்களின் பணிகளைப் பாதுகாக்கச் சட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் உள்ளன.
இதை உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ள DNPA, இந்தியாவிலும் பத்திரிகையாளர்களுக்குத் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து உரிய விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
தனியுரிமையா? பத்திரிகைச் சுதந்திரமா?
தனிநபர்களின் தகவல்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை DNPA மறுக்கவில்லை. ஆனால், அந்தப் பாதுகாப்பு பொதுநலன் சார்ந்த செய்திகளைச் சேகரிப்பதற்கும் வெளியிடுவதற்கும் தடையாக மாறக்கூடாது என்பதே அதன் நிலைப்பாடு.
தனிநபரின் தனியுரிமையைப் பாதுகாப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்குப் பொதுநலன் சார்ந்த உண்மைகளை அறிந்துகொள்ளும் மக்களின் உரிமையையும் பாதுகாக்க வேண்டும் என்று சங்கம் வலியுறுத்துகிறது.
பத்திரிகையாளர்கள், களச் செய்தியாளர்கள், முறைகேடுகளை அம்பலப்படுத்துபவர்கள் மற்றும் பொதுநலன் சார்ந்த தகவல்களை வெளியிடுபவர்கள் எனப் பல்வேறு தரப்பினரின் செயல்பாடுகளை இந்தச் சட்டம் பாதிக்கக்கூடும் என்பதே மனுவின் முதன்மை வாதம்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு, இந்தியாவில் தனியுரிமைக்கும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கும் இடையிலான சட்டரீதியான எல்லைகளை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் பெறும்.
