தேனி மாவட்ட சிறையிலிருந்து ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் சிறைகளிலிருந்து கைதிகள் கூட்டமாகத் தப்பியோடுவது இது முதல்முறையல்ல.
தமிழகத்தையே அதிரவைத்த ‘கிரேட் எஸ்கேப்’ சம்பவங்கள் சில..

ஆட்டோ சங்கர் தப்பிய சென்னை சிறை
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் தூக்கு தண்டனை கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் ஆட்டோ சங்கர். 1989-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ந் தேதி ஆட்டோ சங்கர், சென்னை சிறையில் இருந்து தப்பி ஓடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் ஆட்டோ சங்கர் பிடிபட்டார்.
ஆட்டோ சங்கர் சிறையிலிருந்து தப்பிய சம்பவம், சிறை நிர்வாகத்தின் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட நீதிபதி இஸ்மாயில் ஆணையம், சிறை நிர்வாகத்தில் இருந்த குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்தது. சென்னை மத்திய சிறையை நகருக்கு வெளியே மாற்ற வேண்டும் என்ற பரிந்துரையும் அப்போது முன்வைக்கப்பட்டது.

வேலூர்: 8 ஆயுள் கைதிகள் தப்பியது எப்படி?
1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் நிகழ்ந்த சில மாதங்களில் நவம்பர் மாதத்தில் வேலூர் மத்திய சிறையில் அதிர்ச்சி சம்பவம் நடந்தது. சிறையின் 6-வது ப்ளாக்கில் அடைக்கப்பட்டிருந்த 8 ஆயுள் தண்டனைக் கைதிகள் தப்பியோடினர். அவர்களில் இருவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.
சிறை அறையின் மேற்கூரை ஓடுகளை அகற்றி வெளியேறிய கைதிகள், அருகிலிருந்த பொருட்களைக் கொண்டு ஏணி தயாரித்தனர். பின்னர் அந்த ஏணியைப் பயன்படுத்திச் சிறையின் சுற்றுச்சுவரைத் தாண்டித் தப்பினர்.
இந்தச் சம்பவத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறைக் காவலர்களின் அலட்சியம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கத்தை எதிர்த்து சிறைக் காவலர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், 2007 அக்டோபர் 26-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், 8 ஆயுள் கைதிகள் தப்பிய சம்பவம் திடீரென நடந்திருக்க முடியாது என்றும், கைதிகள் முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட்டிருப்பது தெரியவருவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. சிறைக் காவலர்களின் கடுமையான அலட்சியமே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக அமைந்ததாகக் கூறி, பணிநீக்க நடவடிக்கையை நீதிமன்றம் உறுதி செய்தது.

சென்னை மத்திய சிறையில் 9 பேர் எஸ்கேப்
1995-ம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி இரவு, சென்னை மத்திய சிறையில் தடா சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் 9 பேர் தப்பியோடினர்.
அப்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே மத்திய சிறை செயல்பட்டு வந்தது. சிறையில் இருந்தவர்கள் காவலர்களைத் தாக்கி, துணிகளால் கட்டிப்போட்டனர். பின்னர் போர்வைகள், துணிகளால் தயாரிக்கப்பட்ட கயிறுகள், இரும்புக் கம்பிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பிரமாண்ட சிறையின் சுவரைத் தாண்டித் தப்பினர்.
மொத்தம் 15 பேர் தப்பிக்க முயன்றதாகவும், அவர்களில் 9 பேர் மட்டுமே தப்பியதாகவும் அப்போது செய்திகள் வெளியாகின.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிறைக் காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. காவலர்களின் அலட்சியம் மற்றும் உடந்தை குறித்த குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

வேலூர் கோட்டையில் 153 அடி நீள சுரங்கம்.. 43 பேர் தப்பிய ‘கிரேட் எஸ்கேப்’
தமிழக சிறையில் இருந்து கைதிகள் தப்பி ஓடிய சம்பவங்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று 1995-ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் நடந்தது.
வேலூர் கோட்டைக்குள் உள்ள திப்பு மஹால் வளாகத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட 43 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் உரிய பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்கு வந்ததாகத் தடுத்து வைக்கப்பட்டவர்கள். இது வழக்கமான சிறைச்சாலை அல்ல. வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்புத் தடுப்பு முகாம். 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி இந்த முகாமிலிருந்து 43 பேரும் தப்பியோடினர்.
முகாமுக்குள் இருந்தவர்கள் சுமார் 153 அடி நீளத்துக்குச் சுரங்கம் தோண்டியிருந்தனர். தரைமட்டத்திலிருந்து சுமார் 10 அடி ஆழத்தில் இந்தச் சுரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. குளியலறைகளில் இருந்த குழாய்கள், சாப்பிட பயன்படுத்தப்பட்ட தட்டுகள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சுரங்கம் தோண்டுவதற்கான கருவிகளைத் தயாரித்திருந்தனர். சுரங்கத்தின் வழியாக வெளியேறியவர்கள், கோட்டையைச் சுற்றியிருந்த அகழியையும் கடந்து தப்பினர்.
இந்தச் சம்பவம் தமிழக காவல்துறையை அதிரவைத்தது. தப்பிய 43 பேரில் 11 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் இலங்கைக்குத் தப்பிச் சென்றதாகச் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. சம்பவம் குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதுடன், தப்பியவர்களைப் பிடிக்க மாநிலம் முழுவதும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வேலூரில் 7 சிறார்கள் தப்பினர்.. 2 மாதங்களில் 3-வது சம்பவம்
2023-ம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி இரவு, வேலூர் காகிதப்பட்டறை ஆற்காடு சாலையில் உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 7 சிறார்கள் தப்பியோடினர். கழிவறையின் ஜன்னலை உடைத்த சிறார்கள், தாங்கள் பயன்படுத்திய போர்வைகளைக் கயிறாக மாற்றி, ஒருவர் மீது ஒருவர் ஏறி வெளியேறித் தப்பினர். இதில் அதிர்ச்சியளிக்கும் தகவல் என்னவென்றால், 2 மாதங்களில் அதே பாதுகாப்பு இல்லத்திலிருந்து சிறார்கள் தப்பியது 3-வது முறை என்பதுதான்.

புழல் சிறையில் அடுத்தடுத்து 2 கைதிகள் எஸ்கேப்
கடந்த அக்டோபர் 20, 21 தேதிகளில் சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து அடுத்தடுத்து 2 கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த 21 வயதான சுதீப் போகாதி, அக்டோபர் 20-ஆம் தேதி சிறையிலிருந்து தப்பினார்.
சிறை மருத்துவமனைக்குச் செல்வதாக அனுமதி பெற்ற அவர், காவலர்கள் பணிமாறும் நேரத்தைப் பயன்படுத்தி, சோலார் மின்கம்பிகளைப் பிடித்தபடி 23 அடி உயரச் சிறைச் சுவரைத் தாண்டித் தப்பினார். அப்போது மழையால் மின்வேலி பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
மறுநாள் அக்டோபர் 21-ஆம் தேதி, போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சுரேஷ் என்பவரும் தப்பினார். சிறை வளாகத்திற்கு வெளியே செயல்படும் ‘ஃப்ரீடம் பஜார்’ அங்காடியில் பணியாற்றிய அவர், வாடிக்கையாளர்கள் கூட்டத்துடன் கலந்து தப்பிச் சென்றார்.
இருவரையும் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அக்டோபர் 22-ஆம் தேதி அண்ணாநகர் திருமங்கலம் பகுதியில் உள்ள தேநீர்க் கடையில் சுதீப் போகாதி பிடிபட்டார். குன்றத்தூர் பகுதியில் சுரேஷும் பிடிபட்டார்.
இந்த இரண்டு சம்பவங்களிலும் பாதுகாப்புப் பணியில் அலட்சியமாக இருந்ததாக உதவி சிறை அலுவலர் உட்பட 7 சிறைத்துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தேனியில் 17 கைதிகள் தப்பி ஓட்டம்
தற்போது தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர். முந்தைய சம்பவங்களில் சுரங்கம் தோண்டுவது, மேற்கூரையை உடைப்பது, காவலர்களைக் கட்டிப்போடுவது போன்ற முறைகள் பயன்படுத்தப்பட்டன.
ஆனால் தேனியில் கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக நாடகமாடி, சிறைக் காவலரைத் தாக்கிவிட்டுத் தப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரே அறையில் இருந்த 17 கைதிகளும் ஒரே நேரத்தில் எப்படித் தப்பினர்? சிறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்தனவா? இந்தத் தப்பிப்புக்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் காவல்துறை மற்றும் சிறைத்துறை விசாரணையில் தெரியவரும்.
