தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், சொந்த ஊருக்குச் செல்ல ரயில் டிக்கெட் கிடைப்பது பலருக்கும் பெரும் சவாலாக மாறிவிடுகிறது.
முன்கூட்டியே திட்டமிட்டுப் பயணம் செய்ய முடியாதவர்கள் கடைசி நேரத்தில் தட்கல் டிக்கெட்டுகளை நம்ப வேண்டியிருக்கிறது. ஆனால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இருக்கைகள் நிரம்பிவிடுவதால், பலர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
இத்தகைய சூழலில், இந்திய ரயில்வேயின் IRCTC இணையதளத்தில் உள்ள Master List (மாஸ்டர் லிஸ்ட்) வசதியைப் பயன்படுத்துவது முன்பதிவின்போது நேரத்தை மிச்சப்படுத்த உதவும். பயணிகளின் விவரங்களை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்வதன் மூலம், ஒவ்வொரு முறையும் பெயர், வயது உள்ளிட்ட தகவல்களைப் புதிதாக உள்ளிட வேண்டிய அவசியம் குறைகிறது.
மாஸ்டர் லிஸ்ட் வசதியை உருவாக்குவது எப்படி?
முதலில் IRCTC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்களுடைய கணக்கில் உள்நுழைய வேண்டும். பின்னர், ‘My Account’ பகுதிக்குச் சென்று ‘My Master List’ என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
அதில் பயணிகளின் பெயர், வயது, பாலினம் உள்ளிட்ட தேவையான விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்து சேமிக்கலாம். ஆதார் சரிபார்ப்பு தொடர்பான விவரங்களையும் முறையாகப் பூர்த்தி செய்வது அவசியம்.
தட்கல் முன்பதிவு தொடங்கும் நேரத்தில் இந்த விவரங்களை மீண்டும் உள்ளிடுவதில் செலவாகும் நேரத்தைக் குறைக்க இந்த வசதி உதவும்.
தட்கல் முன்பதிவு நேரம்: எப்போது தயாராக இருக்க வேண்டும்?
தட்கல் டிக்கெட் முன்பதிவு, பயணத் தேதிக்கு முந்தைய நாள் நடைபெறும். ஏசி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் முன்பதிவு தொடங்குகிறது.
முன்பதிவு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே IRCTC கணக்கில் உள்நுழைந்து, பயண விவரங்களையும் ரயில் தேர்வையும் தயாராக வைத்திருப்பது உதவும்.
வேகமான பணப்பரிவர்த்தனை முக்கியம்!
டிக்கெட் தேர்வு செய்த பிறகு பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலும் முன்பதிவு வாய்ப்பை இழக்க நேரிடலாம். எனவே, IRCTC eWallet வசதியைப் பயன்படுத்துபவர்கள் முன்கூட்டியே அதில் பணம் வைத்திருக்கலாம். மாற்றாக, UPI மூலம் பணம் செலுத்தத் தயாராக இருக்கலாம்.
மேலும், ஆன்லைன் தட்கல் முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் என்பதால், IRCTC கணக்கில் அது முறையாக முடிக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மாஸ்டர் லிஸ்ட், சரியான நேரத்தில் உள்நுழைதல், விரைவான பணப்பரிவர்த்தனை ஆகியவை முன்பதிவை எளிதாக்க உதவும். இருப்பினும், பண்டிகைக் காலங்களில் டிக்கெட் கிடைப்பதை இவை உறுதி செய்யாது.
