‘நீதி பரவட்டும்’ தடைகளை கடந்து திரைக்கு வந்த சிவகார்த்திகேயனின் பராசக்தி

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் பொங்கல் சிறப்பு திரைப்படங்களாக ஜனநாயகன் மற்றும் பராசக்தி ஆகிய திரைப்படங்கள் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் பிரச்சினை காரணமாக ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று (ஜனவரி 10) திட்டமிட்டபடி பராசக்தி திரைப்படம் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமாகவும், ஜி.வி. பிரகாஷின் 100வது படமாகவும் அமைந்துள்ள பராசக்தி திரைப்படம், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது.

இந்தப் படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், சென்சார் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால், திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற பரபரப்பு எழுந்தது. இந்நிலையில், நேற்று (ஜனவரி 9) சென்சார் வாரியம் U/A சான்றிதழ் வழங்கியதால், திரைப்படம் இன்று (ஜனவரி 10 ) தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

கேரளாவில் காலை 6 மணிக்கே திரையிடப்பட்டது. தமிழக-கேரள எல்லையில் உள்ள சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கேரளாவுக்குச் சென்று படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர்.1965இல் தமிழகத்தில் நடந்த மொழிப்போர் வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில், சென்சார் பரிந்துரையின்படி சுமார் 25-க்கும் மேற்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில், பல இடங்களில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளன; சில வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, “தீ பரவட்டும்” என்ற வார்த்தை “நீதி பரவட்டும்” என மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், “யார் ஆட்சி செய்தாலும் அண்ணாதுரைதான் ஆள்கிறான்” என்று பொருள்படும் 22 வினாடி வசனம் நீக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நேற்று வரை வெளியீட்டில் குழப்பம் நிலவிய நிலையில், இன்று பராசக்தி படம் சுமார் 700 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று காலை 9மணிக்கு படம் திரையிடப்பட்டுள்ளது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் பராசக்திக்கு 400 முதல் 450 திரையரங்கங்கள் மட்டுமே இருந்த சூழலில் தற்பொழுது சுமார் 700 திரையரங்கங்களில் வெளியாகி உள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share