Tamilnadu Election Results 2026: தமிழகம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது

Published On:

| By Pandeeswari Gurusamy

Counting

தமிழகத்தில் 17வது சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 4) காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் களம் கண்டன. 4 முனைப் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. அன்றைய நாளின் இறுதியில் வாக்குப்பதிவு சதவீதம் 85.15% எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இரு நாட்களுக்குப் பிறகு, மறுசரிபார்ப்புக்குப் பின் இந்தத் தற்காலிக சதவீதத்தை 85.10% ஆகத் தேர்தல் ஆணையம் திருத்தியது.

ADVERTISEMENT

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்று அனைத்துத் தரப்பு மக்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், இன்று (மே 4) சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 234 வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே வளாகங்களில் தபால் வாக்குகளை எண்ணுவதற்காகக் கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்கு 3,324 மேஜைகள் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்கு எண்ணும் பணிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

வாக்கு எண்ணும் பணிக்காக மொத்தம் 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதில் திமுக 48 தொகுதிகளிலும், அதிமுக 20 தொகுதிகளிலும் தவெக 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இதைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி உள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று வாக்குகள் எண்ணப்படும் நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சம் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இ.சி.ஐ. நெட் (ECINET) செயலி வாயிலாகவும், results.eci.gov.in என்ற இணைய தளம் வாயிலாகவும் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share