முதல்வர் விஜய்யின் நம்பிக்கையை பெற்ற 9 அமைச்சர்களின் பின்னணி!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியது.

விஜய் ஆட்சி அமைக்க திமுக கூட்டணியில் இப்போதும் நீடிக்கிற சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் 13 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதனையடுத்து விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் நேற்று விஜய்க்கு அழைப்பு விடுத்தார்.

ADVERTISEMENT

இதனடிப்படையில் இன்று மே 10-ந் தேதி காலை சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் முதலமைச்சராக விஜய் (சி. ஜோசப் விஜய்) பதவி ஏற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.

விஜய் அமைச்சரையில் முதல் முறையாக பதவியேற்கும் அமைச்சர்கள் அதிமுக, திமுக கட்சிகளின் எந்த வேட்பாளர்கள் தோல்வியடையச் செய்துள்ளனர் என்பது குறித்த விபரங்கள்.

ADVERTISEMENT

முதல்வராக பதவியேற்ற தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் 1,20,365 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

விஜயை எதிர்த்து போட்டியிட்ட ஆர்.டி.சேகர் 53,715 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அதிமுக கூட்டணியில் இருந்து பாமகவின் திலகபாமா 8,561 வாக்குகளை பெற்றிருந்தார்.

ADVERTISEMENT

அதேபோல் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் 91,381 வாக்குகள் பெற்று விஜய் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் 63,965 வாக்குகளை பெற்று 27,416 வாக்குவித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜ சேகரன் 19,715 வாக்குகளை பெற்றார்.

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்

புதுச்சேரியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த், கடந்த 2006-ல் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் (PMC) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். விஜய்யின் ரசிகர் மன்றக் கட்டமைப்பை அரசியல் உள்கட்டமைப்பாக மாற்றியதில் பங்காற்றினார். விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2026 தேர்தலில், டி.நகரில் 51,632 வாக்குகளை பெற்று அதிமுகவின் சத்திய நாராயணனை 13,027 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தி.நகர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் 37,017 வாக்குகளை பெற்றார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர் ஆதவ் அர்ஜூனா. பிரபல லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மருமகன்.விளையாட்டு வீரர், தேர்தல் வியூக வகுப்பாளர், அரசியல்வாதி எனப் பன்முகத்தன்மை கொண்டவர் ஆதவ் அர்ஜூனா. இவர், இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து சம்மேளனம் ஆகியவற்றின் தலைவராகவும் தமிழ்நாடு ஒலிம்பிக் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

இவர் கடந்த 2015ல் இருந்து 2021 வரை திமுகவிற்காக தேர்தல் வியூக பணிகளில் ஈடுபட்டிருந்தார். பின்னர் வாய்ஸ் ஆப் காமன்ஸ் என்ற தேர்தல் வியூக நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் 2024ல் திருச்சியில் விடுதலை சிறுத்தைகளின் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டை நடத்தியது. பிப்ரவரி 15ம் தேதி கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விசிகவில் கருத்து முரண் நிலவிய நிலையில் வி.சி.க.வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்தார். இதைதொடர்ந்நது தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட இவர் 66,445 வாக்குகளை பெற்ற இவர் 17,302 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் கார்த்தி மோகனை தோற்கடித்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட விஜயகுமார் 19338 வாக்குகளை பெற்றார்.

அமைச்சர் அருண்ராஜ்

சேலத்தைச் சேர்ந்த மருத்துவரான அருண் ராஜ், 2010-11 ல் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஆர்.எஸ் ஆன நிலையில் பதவியேற்பதற்கு முன்பான பயிற்சி காலத்தில் நடிகர் விஜய்யைச் சந்தித்தார். அப்போதிருந்தே விஜய்யுடனான நட்பைத் தொடங்கினார். விஜய் அரசியலுக்கு வருவதில் முக்கிய ஆலோசனைகளை வழங்கியவராக பார்க்கப்படுகிறார். இதையடுத்து தவெகவில் இணைந்த அவர் கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்ட அருண்ராஜ் 79,500 வாக்குகளை பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் சந்திரசேகர் 51,328 வாக்குகளை பெற்றார். திமுகவின் கூட்டணி கட்சியான கொமதேக தலைவர் ஈஸ்வரன் 49465 வாக்குகளை பெற்றார்.

அமைச்சர் நிர்மல் குமார்

சி.டி.ஆர் நிர்மல் குமார் 2019ஆம் ஆண்டு பா.ஜ.கவில் இணைந்து செயல்பட்டு வந்தார். அண்ணாமலை மாநிலத் தலைவரான பிறகு, அவருடன் நிர்மல்குமாருக்கு கருத்து வேறுபாடு நிலையில் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.கவில் இணைந்தார். அவருக்கு ஐ.டி. பிரிவின் மாநில இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விஜய்யின் தவெக வில் இணைந்தார் சி.டி நிர்மல் குமார். அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு 1,14,316 வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர் கிருத்திகாவை 41,553 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவரை எதிர்த்து களம் கண்ட அதிமுகவின் ராஜன் செல்லப்பா 49865 வாக்குகளை பெற்றார்.

அமைச்சர் செங்கோட்டையன்

எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் பயணித்து வந்தவர் செங்கோட்டைய்ன். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள சிறிய கிராமம் குள்ளம்பாளையம். இந்த கிராமத்தில் பிறந்து 9 முதறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் . அதிமுகவில் 1977-ல் சத்தியமங்கலம் தொகுதியிலும் பின்னர் 8 முறை கோபி செட்டி பாளையம் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிந்திருந்தபோது ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிச்செட்டி பாளையத்தில் வெற்றி பெற்றார். முன்னாள் அமைச்சராகவும், அதிமுகவின் முக்கிய முகமாகவும் பார்க்கப்பட்ட செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியுடன் முரண்பட்டார். இதைத்தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய் தலைமையில் தவெகவில் இணைந்தார். தவெக அமைச்சரவையில் அனுபவம் வாய்ந்தவராக பார்க்கப்பட்ட செங்கோட்டையன் 2026 தேர்தலில் 82612 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் நல்ல சிவத்தை 16,620 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். கோபியில் அதிமுக வேட்பாளர் பிரபு 56232 வாக்குகளை பெற்றார்.

அமைச்சர் வெங்கடரமணன்

பிராமண சமூகத்தைச் சேர்ந்த வெங்கட்ரமணன், 2000-ம் ஆண்டு முதல் விஜய்யின் அரசியல் செயல்பாடுகளில் செயல்பட்டு வருகிறார். விஜய் கட்சி தொடங்கிய பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி, தமிழ்நாடு சைதாப்பேட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார்.

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட இவர் 70,070 வாக்குகளை பெற்று 28972 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வேலுவை தோற்கடித்தார். அதே தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் 32,328 வாக்குகளை பெற்றார்.

அமைச்சர் ராஜ் மோகன்

ஊடகவியலாளரான ராஜ் மோகன் விக்கிரவாண்டி மாநாட்டுக்கு முன்பே தவெகவுடன் இணைந்து பயணிக்கத் தொடங்கினார். விக்கிரவாண்டி மாநாட்டுக்கு முன்பாக சேலத்தில் பயிற்சி பட்டறை தவெக நிர்வாகிகளுக்காக நடத்தப்பட்டிருந்தது.

அந்த நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக ராஜ் மோகன் அழைக்கப்பட்டிருந்தார். அந்தச் சமயத்தில் ராஜ் மோகனின் தந்தை உடல்நிலை சரியாக இல்லாமல் மருத்துவமனையில் இருந்தார். எனினும் ராஜ்மோகன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது விஜயின் கவனத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து விஜய்யுடன் தொடர்ந்து பயணித்த ராஜ்மோகன் எழும்பூர் தொகுதியில் பேட்டியிட்டு 53,901 வாக்குகளை பெற்றார். இவரை எதிர்த்து களம் கண்ட தமிழன் பிரசன்னா 43,097 வாக்குகளை பெற்றார். அதிமுகவின் வேட்பாளர் அபிஷேக் 18191 வாக்குகளை பெற்றார்.

அமைச்சர் டி.கே. பிரபு,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர்ல டாக்டர் டி.கே. பிரபு. இவர் ஒரு பல் மருத்துவத் துறையில் உயர்கல்வி பெற்ற இவர், இலங்கையின் கொழும்பு மற்றும் ஜெர்மனியின் கோதே பல்கலைக்கழகம் (Goethe University) ஆகியவற்றில் உயர்கல்வி மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டவர். சமூகத்தின் மீது கொண்ட அக்கறை காரணமாக த.வெ.க தலைவர் விஜய்யின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டும் அரசியலில் தடம் பதித்தார். இவரது தந்தை துரை கருணாநிதி காரைக்குடி பகுதியில் நற்பெயர் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 2026 சட்டமன்ற தொகுதியில் 1,01,358 வாக்குகளை பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை 55,284 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தொகுதியில் அதிமுக கூட்டயில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி 33,352 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 30,793 வாக்குகளை பெற்றார்.

அமைச்சர் கீர்த்தனா

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டவர் கீர்த்தனா. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணிதம் படித்தவர். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை புள்ளியியல் படித்திருக்கிறார். இன்னும் திருமணம் ஆகாதவர். இவரது ஆண்டு வருமானம் என்பது 2025-26ஆம் நிதியாண்டின் படி 6.3 லட்ச ரூபாய் ஆகும். சமீபத்தில் கூட தேசிய ஊடகத்திற்கு பேட்டியளிக்கும் போது ஹிந்தியில் பேசி ஆச்சரியப்படுத்தினார். இது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு என்னுடைய கட்சி பிரதிநிதித்துவத்தை இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகளில் இருப்பவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கீர்த்தனா தெரிவித்திருந்தார்.
சிவகாசி தொகுதியில் 68,709 வாக்குகளை பெற்ற இவர் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் அசோகனை 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி 51078 வாக்குகளை பெற்றார். சிவகாசி தொகுதியின் முதல் பெண் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share