முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், “வெளிப்படையாக செயல்படுவேன்” என்று கூறியுள்ளார்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (மே 10) முதல்வராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றார்.
இதைத்தொடர்ந்து 200 யூனிட் இலவச மின்சாரம், போதைப்பொருள் தடுப்பு படை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்குதல் ஆகிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து விழாவில் பேசிய விஜய், “நான் ஒன்னும் தேவ தூதன் கிடையாது. நானும் சாதாரண மனிதன்தான். இதை செய்வேன், அதை செய்வேன் என பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றமாட்டேன். எது சாத்தியமோ, அதை மட்டும் தான் செய்வேன். உடனே உங்கள் மனதில் ஒரு கேள்வி வரும். அப்போது சாத்தியமில்லாததை செய்யமாட்டார்களா என்பதுதான். ஆனால் இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும் போது, எதுவாக இருந்தாலும் பார்த்துகொள்ளலாம்.
இன்றைக்கு நம்ம அரசின் நிலைமையை பற்றி உங்களிடம் சொல்ல வேண்டும். 10 லட்சம் கோடிக்கு மேல கடனை வாங்கி வைத்துவிட்டு போயிருக்கிறார்கள். கஜானாவை சுத்தமாக காலி செய்துவிட்டு போயிருக்கிறார்கள். தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டு போயிருக்கிறார்கள்.
இப்படிபட்ட நிலைமையில் இந்த பொறுப்பை கையில் எடுத்திருக்கிறோம். நான் பொறி வைத்து பேசவில்லை. எது இருக்கு, எது இல்லை என உள்ளே போய் பார்த்தால் தான் தெரியும். இதையெல்லாம் பார்த்துவிட்டு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென நினைக்கிறேன். வெளிப்படைத்தன்மை அரசாங்கமாக இருக்க வேண்டும். அதைத்தான் முதலில் செய்வேன்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை யாரையாவது போய் சந்திக்க வேண்டுமென்றால், இந்த முகத்தை மூடிக்கொண்டு போய் சந்திப்பதையோ மறைமுகமாக சந்திப்பதையோ நான் செய்யமாட்டேன். எதுவாக இருந்தாலும் ஒளிவு மறைவு இல்லாமல்தான் நடக்கும்.
இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள். நான் சொன்னதெல்லாம் படி படியாக செய்வேன். அதேசமயம் எனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும். இது உங்களுடைய ஆட்சி.
என்னை அவமானப்படுத்தியவர்களாக இருந்தாலும், கஷ்டப்படுத்தியவர்களாக இருந்தாலும் அவர்களும் என் மக்கள்தான். நண்பர்களாக இருந்தாலும், எதிரிகளாக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்கள்தான்.
அடிப்படை வசதிகளான கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், சாலை மற்றும் பஸ் வசதி போன்றவற்றில்தான் முழு கவனமும் இருக்கும்.
மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட நான் தொட மாட்டேன்; எனக்கு அது அவசியமும் இல்லை. இந்த விஜய் தப்பு பண்ண மாட்டான், தப்பு பண்ணவும் விடமாட்டான். என்னுடைய ஆட்சியில் யாராக இருந்தாலும் சரி விடமாட்டான்.
தனது அரசாங்கத்தில் இருப்பவர்கள் யாராவது “நாம ஜெயிச்சிட்டோம், ஒரு ஆட்டம் ஆடி பார்க்கலாம்” என்று நினைத்தால் அதை இப்போதே மனதிலிருந்து நீக்கிவிடுங்கள்.
இங்க ஒரே சென்டர்தான், என் தலைமையில் உண்டான சென்டர். வேற பவர் சென்டர்கள் கிடையாது.
பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள் என அனைவரும் டிவிகே ஆட்சியில் நன்றாக இருப்பார்கள்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதுதான் அடிப்படை கோட்பாடு. சிறுபான்மையினருக்குத் தனது அரசு எப்போதும் துணை நிற்கும்.
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான முகம்தான் இந்த விஜயினுடைய முகம். நூறு சதவிகிதம் மக்கள் நம்பலாம்.
தனக்கு ஆதரவளித்த தமிழக மக்களுக்கு நன்றி. குறிப்பாக இந்த விஜய் மாமாவின் குட்டி நண்பா நண்பீஸ்… உங்களால் தான் இது நடந்திருக்கிறது.
உங்களுக்காக, உங்க பியூச்சர மைண்ட்ல வச்சுக்கிட்டு எல்லா நல்ல விஷயங்களையும் உங்களுக்காக இந்த விஜய் மாமா செஞ்சு கொடுப்பான்.
அதே மாதிரி இன்னொருத்தவங்களுக்கும் நான் முக்கியமா நன்றி சொல்லணும். உங்களை எப்படி நான் மறப்பேன்? நீங்கதான் என்னுடைய உயிர். தமிழக வெற்றி கழக தோழர்களே….
என்னோட கழக தோழர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், வாக்குச்சாவடி முகவர்களுக்கும், மை டியர் வர்சுவல் வாரியர்ஸ்… உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். வாங்க எல்லாருமா சேர்ந்து ஒரு பிரெஷ் கவர்னன்ஸ் ஒரு நியூ கவர்னன்ஸ் கொடுப்போம்.
இது புதிய ஆரம்பம்…உண்மையான மதச்சார்பற்ற சமூக நீதியின் ஒரு புதிய சகாப்தம் இப்போது தொடங்குகிறது.
மக்கள் நலன்களை மட்டுமே லட்சியமாக கொண்ட நமது அரசுக்கு பக்கபலமாக நின்று ஆதரவை வழங்கியுள்ள காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மை பிரதர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, என்னுடைய நண்பர் பிரவீன் சக்கரவர்த்தி.
சிபிஐ(எம்) கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, மாநில செயலாளர் பெ. சண்முகம், அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்,
நமது அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ள விடுதலை சிறுத்தைகள் தலைவர் அண்ணன் திருமாவளவன் எம்பி, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சட்டமன்ற குழு தலைவர் வன்னி அரசு,
சிபிஐ கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி. ராஜா, மாநில செயலாளர் மதிப்புக்குரிய தோழர் எம். வீரபாண்டியன், முன்னாள் தமிழ்நாடு மாநில செயலாளர் ரா. முத்தரசன் அவர்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொயதீன், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி உங்க எல்லாரையும் வருக வருக என்று வரவேற்கிறேன்.
முக்கியமா இந்த மாதிரி நேரத்துல எனக்காக நீங்க குரல் கொடுத்ததுக்கும், எனக்காக நீங்க சப்போர்ட் பண்ணி கூடவே நின்னதுக்கும் உங்க எல்லாருக்கும் இந்த நேரத்தில என்னுடைய நன்றியை தெரிவிச்சுக்கிறேன். கான்பிடெண்டா இருங்க, நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை… இல்லை மீண்டும் மீண்டும் சந்திப்போம்” என்று கூறினார்.
