திமுகவுடன் 25, 30 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அரசியல் லாபங்களுக்காக திமுகவின் முதுகிலேயே குத்திவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.
பெங்களூருவில் இன்று மே 10-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: தமிழ்நாட்டின் நிலைமையைப் பாருங்கள். 25,30 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி திமுகவுடன் நெருக்கமான கூட்டணி கட்சியாக இருந்தது காங்கிரஸ். பலமுறை திமுகவுடனான இந்தக் கூட்டணி காங்கிரஸைச் சிக்கல்களிலிருந்து மீட்டெடுத்தது; சொல்லப்போனால், 2014-க்கு முன்பு 10 ஆண்டுகள் நீடித்த காங்கிரஸ் தலைமையிலான அரசு, பெரும்பாலும் திமுகவின் ஆதரவால்தான் தப்பிப் பிழைத்தது.
இருப்பினும், காங்கிரஸின் நலனுக்காகத் தொடர்ந்து உழைத்த அதே திமுகவிற்கு, அரசியல் சூழல் மாறியவுடன் துரோகம் செய்துவிட்டது காங்கிரஸ். அதிகாரப் பசியால் காங்கிரஸ், தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே திமுகவின் முதுகில் குத்தியது. இப்போது, காங்கிரஸ் தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள மற்றொரு கட்சியின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
