கானா முதல் கமலாலயம் வரை! யார் இந்த நயினார் நாகேந்திரன்?

Published On:

| By Aara

the background of tn bjp president nainar nagendran

பாஜகவின் புதிய மாநில தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன். ஏப்ரல் 12 ம் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்வில், பாஜகவின் புதிய மாநில தலைவராக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பொறுப்பேற்றிருக்கிறார் நயினார் நாகேந்திரன். the background of tn bjp president nainar nagendran

தற்போதைய தமிழ்நாடு பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்திருக்கும், இந்த முக்கியமான கால கட்டத்தில் மாநிலத் தலைவராகியிருக்கிறார். ஏற்கனவே மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை அதிரடியாக செயல்பட்டு வந்த நிலையில் நயினார் இயல்பாகவே சாந்தமான பேச்சுக்கு சொந்தக்காரர்.

சட்டமன்றத்திலும் சரி, வெளியேயும் சரி அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் நல்ல உறவை பேணி வருபவர். குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்துக்கே உரிய பண்புகள் இவரிடம் சற்று அதிகமாகவே உண்டு. பதவியேற்ற பிறகு பேசிய நயினார் நாகேந்திரன், “இனி தமிழ்நாடு எங்கும் தாமரைக் கொடி பறக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார். அண்ணாமலை ஒரு புயல், நான் ஒரு தென்றல் என்றும் பேசியிருக்கிறார்.

திருநெல்வேலியின் தண்டையார் குளம் என்ற கிராமத்தில் இருந்து இப்போது கமலாலயம் வரை வந்திருக்கும் இந்த தென்றலின் பின்னணி என்ன?

யார் இந்த நயினார் நாகேந்திரன்? the background of tn bjp president nainar nagendran

திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அருகே உள்ள தண்டையார் குளம் கிராமத்தில் 1960 இல் பிறந்தவர் நாகேந்திரன். இவரது தந்தையார் பெயர் நயினார். பார், பார்க்கிங் குத்தகை என பல பிசினஸ் செய்தவர் நயினார். அதனால் வசதியான குடும்பம்தான். நாகேந்திரன் பள்ளிப்படிப்பு முடித்து ஆரல்வாய்மொழி கல்லூரியில் பிஏ பட்டப்படிப்பு படித்தார்.

கானாவிடம் கற்ற அரசியல்! the background of tn bjp president nainar nagendran

அப்போது அவருடைய தந்தை நாகேந்திரனை அதிமுகவின் முக்கிய புள்ளியாக அந்த காலத்தில் திகழ்ந்த கருப்பசாமி பாண்டியனிடம் அழைத்துச் சென்றார். கருப்பசாமி பாண்டியன் எம்,.ஜி.,ஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்,

‘பையனுக்கு ஜாதகம் பார்த்தேன். அரசியல் தான் நல்லா வரும்னு சொல்றாங்க. அதனால உங்கள நம்பி ஒப்படைக்கிறேன்’ என்று சொல்லி கருப்பசாமி பாண்டியனிடம் தனது மகன் நாகேந்திரனை ஒப்படைத்தார் அவருடைய தந்தை.

கருப்பசாமி பாண்டியனுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் சால்வைகள் அணிவிப்பார்கள். இந்த சால்வைகளை எடுத்து மடித்து வைக்கும் வேலைதான் நாகேந்திரனுக்கு. அரசியலுக்காக தன் தந்தை பெயரையும் சேர்த்து நயினார் நாகேந்திரன் ஆனார்.

கொஞ்சம் கொஞ்சமாக கருப்பசாமி பாண்டியன் அருகே இருந்து திருநெல்வேலியின் அரசியல் களங்களை அறியத் தொடங்கினார். கானா எங்கே சென்றாலும் அங்கே நயினாரும் இருப்பார். கானாவை பார்க்க வருகிறவர்களிடத்திலெல்லாம் தன் அன்பாலும், தன்மையான பேச்சாலும் தனி இடம் பிடித்தார் நயினார் நாகேந்திரன்.

வளர்ச்சியில் துணை நின்ற சமுதாய பலம்! the background of tn bjp president nainar nagendran

அரசியலுக்கு எப்போதுமே சமுதாய பலம் மிக முக்கியம். இந்த வகையில் கள்ளர், மறவர், அகமுடையோர் என்ற மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கிய முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவருடைய சமுதாயம் நயினார் நாகேந்திரன் அரசியலுக்கு பெரும் பலமாக இருந்தது.

மறவர் சமுதாயத்தை சேர்ந்த நயினார் நாகேந்திரன், ஆப்பநாட்டு கொண்டையன் கோட்டை மறவர் என்ற மெஜாரிட்டி பிரிவை சேர்ந்தவர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் இதே பிரிவைத்தான் சேர்ந்தவர்.

கருப்பசாமி பாண்டியனுடைய அன்பும் ஆதரவும் பெற்று வளர்ந்து கொண்டிருந்தார் நாகேந்திரன். அப்போது திருநெல்வேலி மாவட்ட அதிமுகவின் இலக்கிய அணியில் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு பணகுடி நகர செயலாளர் பதவியை பெற்றார். தனது சமுதாயத்தின் பலத்தோடு சசிகலா டிடிவி தினகரன் ஆகியோர் வரை நெருங்கினார் நயினார் நாகேந்திரன்.

அவர் ஒரு கட்டத்தில் தினகரனின் பரிபூரண ஆதரவோடு மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளராக உயர்ந்தார்.

அதிமுகவில் முக்கியமான சக்தியாக இருந்த கருப்பசாமி பாண்டியன் 2000 ஆண்டு வாக்கில் திமுகவுக்கு சென்று விட்ட நிலையில்… அந்த இடத்தை தனது சமுதாய பலம் காரணமாக கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் நயினார் நாகேந்திரன்.

இதன் காரணமாக 2001 சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி அதிமுக வேட்பாளராக களம் இறங்கினார். முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரனுக்கு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர் பதவி கிடைத்தது.

அதுவும் தொழில்துறை , மின்சாரம் போக்குவரத்து துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை அந்த காலகட்டத்தில் அவர் வகித்தார்.

நயினார் நாகேந்திரன் அண்ணன் வீர பெருமாள் திமுக இளைஞரணியில் மாவட்ட அமைப்பாளராக இருந்தவர். அதிமுகவில் நயினார் நாகேந்திரன், திமுகவில் அவரது அண்ணன் என இருவரும் நெல்லை மாவட்ட அரசியலில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். அதன் பின் வீரபெருமாளும் அதிமுகவுக்கு வந்துவிட்டார். இப்போது நயினார் நாகேந்திரனின் அண்ணன் வீரபெருமாள் அதிமுகவில் மாநில பொறுப்பில் இருக்கிறார்.

முதல்வர் ரேஸில் இடம்பெற்ற நயினார் the background of tn bjp president nainar nagendran

2001- 2006 காலகட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சட்டரீதியான நெருக்கடி ஏற்பட்டு அவர் பதவி விலகியபோது… யாரை இடைக்கால முதலமைச்சராக நியமிக்கலாம் என்று பரிசளிக்கப்பட்ட பெயர்களில் ஓபிஎஸ் இன் பெயரோடு நயினார் நாகேந்திரன் பெயரும் இடம் பெற்றிருந்தது.

இது பற்றி விவரம் அறிந்த அதிமுகவினர் நம்மிடம் பேசும்போது, “அம்மாவுக்கு பதில் யாரை முதலமைச்சராக போடலாம் என்ற ஆலோசனையில் அப்போது ஜாதகம் முக்கியமான பங்கு வகித்தது. அந்த வகையில் நயினார் நாகேந்திரனின் ஜாதகமும் போயஸ் கார்டனில் ஆராயப்பட்டது. நயினார் நாகேந்திரன் ஜாதகப்படி அப்போது அந்த பொறுப்பை அவரிடம் கொடுத்தால் திரும்ப பெற முடியாது என்று ஜோதிடர்கள் சொல்லியிருக்கிறார்கள்

அப்போதே சசிகலாவின் கடைக் கண் கடுமைப் பார்வைக்கு இலக்காக ஆரம்பித்தார் நயினார் நாகேந்திரன். இதையடுத்து அதிமுகவில் அவரது செல்வாக்கு மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது.

2006 சட்டமன்ற தேர்தலில் நெல்லை தொகுதி மாலைராஜாவிடம் வெறும் 600 ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்.

அதன் பிறகு 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் அவர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர் ஆக்கப்படவில்லை.

பாஜகவில் ஐக்கியம்! the background of tn bjp president nainar nagendran

தொடர்ந்து அதிமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் இருந்தவர் 2016 ஜெயலலிதா மறைவுக்கு பிறகு… 2017 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் மாநில தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அப்பதவி அளிக்கப்படவில்லை. 2021 சட்டமன்ற த் தேர்தலில் நெல்லை சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார்.

பாஜக மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்தவருக்கு பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியே கிடைத்தது. தனது கட்சி தலைவர்கள் உடனும் மற்ற கட்சி தலைவர்களுடனும் தனக்கே உரிய சுமுகமான அமைதியான பணிவான அணுகு முறையில் தொடர்ந்து நல்லுறவோடு இருந்தார் நயினார் நாகேந்திரன். காரணம் கருப்பசாமி பாண்டியனிடம் அவர் கற்ற அரசியல்.
இவருடைய பழகும் தன்மைக்கு ஓர் உதாரணம் அரசியல் வட்டாரத்தில் சொல்வார்கள்.

நயினார் நாகேந்திரன் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கால கட்டம்… கலைஞர் அப்போது எதிர்க்கட்சி. தேர்தல் பிரச்சாரத்துக்காக கலைஞரின் வாகனம் தயாரானது. எல்லா ஏற்பாடுகளையும் செய்தவர்கள், அந்த பிரசார வாகனத்தின் பதிவு விவகாரத்தில் சற்று மறந்துவிட்டார்கள். பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டுவிட்டது. உடனடியாக வாகனத்தை பயன்படுத்த வேண்டிய சூழல். அப்போது திமுகவில் இருந்து போக்குவரதுத்துத் துறை அமைச்சர் நயினார் நாகேந்திரனை அணுகியுள்ளனர். சில மணி நேரங்களில் அப்பிரச்சினையை முடித்துக் கொடுத்திருக்கிறார் நயினார். இதுபோல் மாற்றுக் கட்சியினருக்கும் தனது கட்சியினருக்கும் பல உதவிகளை சத்தமில்லாமல் செய்திருக்கிறார் நயினார்.

சர்ச்சையில் நயினார் the background of tn bjp president nainar nagendran

அரசியல் வாழ்விலேயே அவர் அதிரடியாக பேசியது என்றால், 2018 காலகட்டத்தில் வைரமுத்து ஆண்டாளை இழிவுபடுத்தி பேசியதாக சர்ச்சை எழுந்ததல்லவா? அப்போது வைரமுத்துவை கண்டித்து பாஜக பல ஆர்பாட்டங்களை நடத்தியது. நெல்லையில் நடந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவராக இருந்த நயினார் நாகேந்திரன் பேசும்போது, வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி தர ரெடியாக இருப்பதாகவும் கூறினார். நயினார் நாகேந்திரனா இப்படி பேசுவது என்று பலரும் ஆச்சரியப்பட்டனர்.

நயினார் நாகேந்திரன் சந்தித்த லேட்டஸ்ட் சர்ச்சை…கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் சந்தித்த நான்கு கோடி ரூபாய் சர்ச்சைதான்.

நயினார் நாகேந்திரன் நெல்லை நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். 2024 ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 4 கோடி ரூபாய் பணத்தை தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தனர்.
இது தொடர்பாக வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இப்போதும் இருக்கிறது. அந்த பணம் நயினார் நாகேந்திரனுடைய பணம்தான் என்று அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு எழுந்தது. இந்த வழக்கு இன்னும் சிபிசிஐடி விசாரணையில் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

இன்னமும் நெல்லை வட்டாரத்தில் நயினார் நாகேந்திரனை பண்ணையார் என்று அழைக்கும் பழக்கம் அரசியல் வட்டாரத்தில் உள்ளது.

அதென்ன பண்ணையார்? the background of tn bjp president nainar nagendran

நெல்லை கிராமங்களில் ரெட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்த நிலக்கிழார்களை பண்ணையார் என்று அழைத்து வருகின்றனர். நயினார் நாகேந்திரன் ரெட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து ஹோட்டல் பிசினசில் ஈடுபட்டார். அப்போது நயினாரையும் பண்ணையார் என்று அழைக்கத் தொடங்கி, அதுவே அவரது நெல்லை அரசியலில் அடையாளப் பெயராகவும் மாறிவிட்டது.

இப்படிப்பட்ட நிலையில் தான் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தேவை என முடிவெடுத்த அமித்ஷா அதற்கு ஏற்ற மாநில தலைவர் வேண்டும் என்ற அடிப்படையில் நயினார் நாகேந்திரன் இப்போது பாஜகவின் புதிய மாநில தலைவராக பதவி ஏற்றிருக்கிறார்.

விசாகப்பட்டினம் பெல்லாரி வரைக்கும் இவருக்கு கிரானைட் குவாரி பிசினஸ் பெருமளவில் இருக்கிறது. இதனால் பணத்துக்கு பஞ்சம் இல்லாதவர்.

மறவர் என்ற சமுதாய பலம் நயினாருக்கு பெரும் சாதகமாக இருக்கிறது. இவர்தான் அடுத்த பாஜக தலைவர் என்ற தகவல் உறுதியான உடனேயே திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து முக்குலத்து அரசியல் புள்ளிகள் நயினாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

நயினார் இதுவரை தலைவர்களுக்கு கீழே செயல்பட்டவராகத்தான் இருந்துள்ளார். இப்போதுதான் தேசிய கட்சியில் மாநில தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக எப்படி நகர்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share