புதிய பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 12) பதவியேற்ற நிலையில், அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. annamalai get new post in bjp when nainar become bjp president
தமிழக பாஜக மாநிலத் தலைவருக்கான தேர்தலில், நயினார் நாகேந்திரன் மட்டுமே நேற்று மனுதாக்கல் செய்தார். இதனை தமிழகம் வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில், “தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடமிருந்து மட்டுமே வேட்புமனு பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக பிரிவின் தலைவராக இருந்த அண்ணாமலை பாராட்டத் தக்க சாதனைகளைச் செய்துள்ளார். அவரை கட்சியின் தேசிய கட்டமைப்பில் பாஜக பயன்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று சென்னை வானகரத்தில் நடந்த விழாவில், பாஜக மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி மற்றும் கட்சியினர் முன்னிலையில் புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து தேசிய பொதுக் குழு உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை கிஷன் ரெட்டி மேடையில் அறிவித்தார்.
அதன்படி, ’தென் சென்னை தொகுதியில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன், கன்னியாகுமரியில் இருந்து பொன்.ராதாகிருஷ்ணன், திருப்பூரில் இருந்து வானதி சீனிவாசன், நீலகிரியில் இருந்து எல்.முருகன், கோவையில் இருந்து அண்ணாமலை, அரக்கோணத்தில் இருந்து நாராயணன் திருப்பதி, கடலூரில் இருந்து பால் கனகராஜ், திருச்சியில் இருந்து வினோஜ் பி செல்வம் ஆகியோர் தேசிய பொதுக் குழு உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்’ என்று கிஷன் ரெட்டி அறிவித்தார்.