வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 16,) மாநிலத்தின் நிதி நிலை மேலாண்மை குறித்த முக்கியமான “வெள்ளை அறிக்கையை” வெளியிட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நிதி அமைச்சர் மரிய வில்சன் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
தமிழக அரசின் மொத்த நிலுவைக் கடன் 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடன் பொறுப்புகளையும் சேர்த்தால், தமிழ்நாட்டின் உண்மையான கடன் அளவு 13.18 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில், ” தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும், “ ஆழம் தெரியாமல் காலைவிட்டு” அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் “புஸ்வானமாக” மாறிவிட்டதை மறைக்க, “ஹைப்” ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு , அதனையும் “ஃப்ளாப்” ஆக்கியிருக்கிறது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக (Escapism) தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.
