வைஃபை ஆன் செய்ததும் ஜெய்பீம் படத்தின் “நம்பினால் நாளை உண்டு” வரியை மட்டும் உரக்க ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். tamilnadu survey shocked to bjp
பிரதமர் மோடியின் தமிழகம் வருகை பற்றிய செய்தி பரபரப்பாக இருக்கிறதே..
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி அல்லது பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் என்ற பெயரில் விசிட் அடிப்பதுதான் பிரதமர் மோடியின் ‘எலக்ஷன் ஸ்டைல்’. அந்த வகையில்தான் தேர்தலை சந்திக்க போகும் தமிழ்நாட்டுக்கும் வருகிறார் மோடி. அதுவும் பாஜக- அதிமுக கூட்டணி உறுதியான பின்னர் முதல் முறையாக விசிட் அடிக்கிறார் மோடி. இதனால் ரொம்பவே எதிர்பார்ப்பு இருக்கிறது.

தூத்துக்குடியில் ஜூலை 26-ல் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ4,500 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, ஜூலை 27-ல் அரியலூர் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
தமிழகத்துக்கு வரும் போது மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார் என நாம் மின்னம்பலத்தில் எழுதி இருந்தோம்.. இதன் பின்னணியில் முக்கியமான காரணம் இருக்கிறதாம்..
அப்படி என்ன காரணம்?
சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இருக்கும் பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அமைச்சர் அமித்ஷா தரப்பில் ‘களத்தை ஆய்வு’ செய்வதற்காக ‘டீம்’கள் இறக்கிவிடப்பட்டிருக்கின்றன.
அந்த ‘டீம்’களில் ஒன்று அண்மையில், தமிழக சட்டமன்ற தேர்தல் நிலவரம் தொடர்பாக விரிவான ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. அதில், திமுக கூட்டணிக்கு 140 இடங்களும் அதிமுக- பாஜக கூட்டணிக்கு 90 இடங்களும் இதர கட்சிகளுக்கு 4 இடங்களும் கிடைக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது. பாஜக தலைவர்களை இந்த ரிப்போர்ட் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
அப்படியே, இந்த ரிப்போர்ட் விவரங்கள், எடப்பாடி பழனிசாமிக்கும் வந்து சேர்ந்துள்ளது.. இந்த ரிப்போர்ட்டை பார்த்தபடியே, “பாஜகவுடன் கூட்டணி வைத்தும் திமுக ஆட்சி தொடருவதை தடுக்க முடியாதோ?” என தவித்தாராம் எடப்பாடி.
இதற்கு பின்னர்தான், பாஜகவிடம் இருந்து எஸ்கேப் ஆக வாய்ப்பிருக்கிறதா என நூல்விட்டுப் பார்க்கும் வகையில், “கூட்டணி ஆட்சியில் பாஜகவுக்கு பங்கு இல்லை; தனித்துதான் ஆட்சி; திமுகவை வீழ்த்த ஒத்த கருத்துள்ள நடிகர் விஜய்- சீமான் வர வேண்டும்” என பொதுக் கூட்டங்களிலும் பேட்டிகளிலும் இடைவிடாமல் அழைப்பு விடுத்தார் எடப்பாடி.
“அதிமுக ஆட்சியில் பாஜகவுக்கு பங்கு தர ஏமாளிகள் அல்ல.. அதிமுக தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும்” என்று பகிரங்கமாக எடப்பாடி பேசியது உள்ளூர் முதல் டெல்லி வரையிலான பாஜக ‘தலை’களை அப்செட் ஆக்கியிருக்கிறது.

இன்னொரு பக்கம், சீமானும் நடிகர் விஜய்யின் தவெகவும் எடப்பாடி பழனிசாமிக்கு கறாராகவே நோ சொல்லிவிட்டனர். எடப்பாடியின் அழைப்பு பற்றிய கேள்விக்கு, “தீமைக்கு மாற்று தீமை கிடையாது.. நெருப்பை, நெருப்பை வைத்து அணைப்பது கடினம்” தமக்கே உரிய பாணியில் பதிலளித்துவிட்டார் சீமான்.
தவெக ஆதவ் அர்ஜூனாவும், “கூட்டணிக்கு தலைமை யார் என்றே தெரியவில்லை. முதல்வர் வேட்பாளர் யார் எனக் கேட்டால் அதை அமித்ஷாதான் சொல்ல வேண்டும் என்கிறார்கள். அதிமுகவின் தலைமை வலுவிழந்துவிட்டது. அதிமுக தொண்டர்கள் தவெகவில் எப்போதோ இணைந்துவிட்டார்கள். அதனால்தான் அதிமுகவை நாங்கள் எதிர்க்கவில்லை” என எடப்பாடி பழனிசாமிக்கு செம்ம நோஸ் கட் கொடுத்துவிட்டார்.
இதனால் எடப்பாடி பழனிசாமியின் ‘அங்கிட்டு இங்கிட்டு’ என நூல்விட்டு பார்க்கும் வியூகம் எடுபடாமல் போனது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல.. சீனியர் ‘தலை’களும் கூட ரொம்பவே புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இது பற்றி அதிமுக மூத்த தலைவர்கள் சிலரிடம் பேசிய போது “பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் திமுக கூட்டணியில் உள்ள எந்த ஒரு கட்சியும் எங்களுடன் சேர முன்வரல.. இப்போதைக்கு எங்களால பாஜகவை விட்டும் விலக முடியவில்லை.. அங்கிட்டு விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம்னு நினைச்சா 50:50 சீட் கேட்கிறாங்க.. விஜய்யை நம்பி பாஜகவை கழற்றியும் விட முடியலை.. நாளைக்கு விஜய் எங்களை கழற்றிவிட்டுவிட்டால் எங்க நிலைமை என்னவாகும்?” என புலம்புகின்றனர்.
இப்படியான சூழ்நிலையில்தான், பிரதமர் மோடியின் டெல்லி பயணம் குறித்த தகவல் எடப்பாடிக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாஜகவைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகளையும் இணைத்து கூட்டணியை மிகவும் ‘வலிமையாக்க’ வேண்டும் என விரும்புகிறது. இதனைத்தான் தமிழகம் வரும் போது, தம்மை சந்திக்க இருக்கும் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி திட்டவட்டமாக சொல்ல இருக்கிறாராம்.
மோடியுடனான சந்திப்புக்குப் பின்னர், எடப்பாடியின் வியூகமும் பேச்சும் எப்படி மாறப் போகிறது பாருங்க என கண்சிமிட்டுகின்றன கமலாலய வட்டாரங்கள்.
ஓஹோ.. அன்புமணி சுற்றுப் பயணம் திட்டமிட்டபடி நடக்குமா?

ஜூலை 25ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாள். அன்றைய தினம்தான் 100 நாட்கள் பயணத்தை தொடங்குகிறார் அன்புமணி. அப்பா ராமதாஸோ, மகன் அன்புமணியின் பயணத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும்; பாமக கொடி, பெயரை பயன்படுத்தக் கூடாது என டிஜிபியிடம் மனு கொடுத்த கையோடு பிரஸ் மீட்டை கூட்டி வழக்கம் போல கொந்தளிப்பை கொட்டிவிட்டார்.
இந்த பிரஸ் மீட்டில் முக்கியமான ‘சம்பவம்’ ஒன்றையும் செய்திருக்கிறாரே ராமதாஸ்..
ஆமாம், பாமகவின் ‘செயல் தலைவர்’ அன்புமணி என்ற விவரத்தை தேர்தல் ஆணையத்துக்கு சொல்லி இருக்கிறாராம் ராமதாஸ். அதாவது ‘செயல் தலைவர்’ பதவியை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியைக் காட்டி இருக்கிறார் ராமதாஸ்.
அன்புமணி தரப்போ, ஆகட்டும் பார்க்கலாம்.. திட்டமிட்டபடி பயணத்தை தொடங்குவோம் என ஜரூராக தயாராகிவிட்டது.
அன்புமணி சுற்று பயணத்துக்கு எதிராக டிஜிபியிடம் ராமதாஸ் மனு கொடுத்திருந்தாரே? போலீஸ் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என விசாரித்த போது, “அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கவில்லை ராமதாஸ். அன்புமணியின் கட்சித் ‘தலைவர்’ பதவியை மட்டும் பறித்துவிட்டு ‘செயல் தலைவர்’ பதவி கொடுத்துள்ளார். ராமதாஸ் சொல்வதைப் போலவே பாமகவின் செயல் தலைவரான அன்புமணியை அந்த கட்சி பெயர், கொடியை பயன்படுத்தக் கூடாது என போலீஸ் எப்படி சொல்ல முடியும்? அதை தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும்தானே முடிவு செய்ய முடியும்.. முதல்வரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்கிறார்.. அதனால் இப்போதைக்கு டிஜிபியிடம் ராமதாஸ் கொடுத்த மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது” என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.

மேலும், “முதலில் அன்புமணி பயணம் போகட்டும் சார்.. ராமதாஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து ஏதாவது செய்கிறதா? என பார்ப்போம்.. அப்படி வன்முறை அல்லது சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் நடந்தால் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுப்போம்” என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.
இதனால் வடதமிழக மாவட்டங்களில் இப்போதே ‘திக்.. திக்..’ பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிறது என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப். tamilnadu survey shocked to bjp
