ADVERTISEMENT

ஓயாத ‘கூட்டணி ஆட்சி’ பஞ்சாயத்து.. ஜூலை 27-ல் பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி!

Published On:

| By Mathi

PM Modi Edappadi Palaniswami

அதிமுக- பாஜக கூட்டணியில் ‘ கூட்டணி ஆட்சி’ குறித்த விவாதம் களைகட்டியிருக்கும் நிலையில் ஜூலை 27-ந் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச இருக்கிறார். Edappadi Palaniswami Modi

அதிமுக- பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர், ஆட்சியில் பங்கு விவகாரம் நாள்தோறும் பேசுபொருளாக இருந்து வருகிறது. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறிவிட்டார்; ஆகையால் ஆட்சியில் பங்கு- கூட்டணி ஆட்சி என்பதுதான் பாஜகவினரின் எதிர்பார்ப்பு என்கின்றனர்.

ADVERTISEMENT

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியில் பாஜகவுக்கு பங்கு தர அதிமுக ஏமாளி அல்ல; அதிமுக தனித்தே பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என பகிரங்கமாக விமர்சித்தார். அதேநேரத்தில், இது பாஜகவுக்கான பதில் அல்ல; திமுகவினருக்கான பதில் என்றும் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பெரும்பான்மை பலத்துடன் தனித்து ஆட்சி அமைத்தாலும் கூட தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சிதான் என்கிறார்.

ADVERTISEMENT

‘கூட்டணி ஆட்சி- ஆட்சியில் பங்கு’ விவகாரம் நாள்தோறும் விவாதிக்கப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு ஜூலை 27-ந் தேதி வருகை தருகிறார். கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

பாஜக- அதிமுக கூட்டணி உறுதியான பின்னர் பிரதமர் மோடி முதல் முறையாக தமிழ்நாடு வருகை தருகிறார். இதனால் பிரதமர் மோடியை கூட்டணிக் கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி வரவேற்க செல்கிறார். மேலும் பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பிரதமர் மோடியை வரவேற்க செல்கின்றனர். இந்த சந்திப்பின் போது, தமிழக கள நிலவரம் குறித்து பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி பேசுவார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள். மேலும் பிரதமர் மோடியின் வருகையை முன்வைத்து தமிழகத்தில் பாஜக கூட்டணி வலுவாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பது கூட்டணி தலைவர்கள் விருப்பம் என்கின்றன பாஜக- அதிமுக வட்டாரங்கள்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share