ஸ்ரீராம் சர்மா Mayiladuthurai Collector Controversy
IAS எனப்படும் இந்திய ஆட்சிப் பணி சாதாரணப்பட்டதல்ல.
அகண்டதாம் இந்த இந்தியப் பெருநாட்டில் அவர்களுக்கான மரியாதை மிகப் பெரிது. கண்ணியத்துக்குரியது. Mayiladuthurai Collector Controversy
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஆட்சி எல்லைகள் ஜனநாயக அதிகாரம் படைத்த ஆட்சியாளர்களுக்கு மிக அருகாமை கொண்டது என்றே சொல்லிவிடலாம்.
ஆம், அவர்களது எல்லைகளில் அவர்கள்தான் 90 சதமான அதிபதிகள்! அப்படியான அந்த அதிகாரப் பதவி சும்மா கிடைத்து விடாது. இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வு முறைகள் மிக மிகக் கடுமையானவைகள்.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கானவர்கள் அந்த உயர்ந்த பதவியினை நோக்கி அயராது முயன்றாலும் அதன் இறுதித் தேர்வை சந்திக்கும் வாய்ப்பு மிக மிக சொற்பமானவர்களுக்கே அமைகிறது.
புள்ளிவிவரக் கணக்கொன்றின் படி… Mayiladuthurai Collector Controversy
2023 ல் நாடு முழுவதிலும் இருந்து UPSC தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 11 லட்சம் பேர். அதில், 14624 பேர்கள் மட்டுமே முதன்மை தேர்வு எழுத தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பலகட்ட வடிகட்டலுக்குக்குப் பின் வெறும் 2916 பேர் மட்டுமே நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். முடிவில் ஐ.ஏ.எஸ் தகுதிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 180பேர்கள் மட்டுமே. Mayiladuthurai Collector Controversy
அதன்பிறகும் ஆயிரம் சவால்கள் அழுத்தங்கள் அவர்களுக்கு உண்டு. தங்கள் அறிவாற்றலால், சாதுர்யத்தால், அத்துனையையும் மீறி நிற்பவர்களே இன்று மக்களறிய நிற்கின்றார்கள்.
எனில், அது, எத்துனை எத்துனை போராட்டங்களுக்குப் பின் அடையக் கூடியதொரு உயர்ந்த பதவியாக இருக்கின்றது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.
அதுபோக, CONFERRED IAS என்றும் ஒன்று உண்டு. Mayiladuthurai Collector Controversy
அதாவது, அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் பல மட்டங்களில் உழைத்து ஆழங்காற்பட்ட அனுபவம் பெற்றவர்களை அங்கீகரித்து CONFERRED IAS எனும் வகையில் தனக்காக முதன்மை அதிகாரிகளாக மாநில அரசாங்கங்கள் அமர்த்திக் கொள்ளும்.
அப்படியும் கூட, அந்த வாய்ப்பு எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. பல காரணிகளை முன் வைத்து ஆண்டுக்கு இருவருக்கோ அல்லது மூவருக்கோதான் அமையக் கூடும்.
எப்படியாக இருப்பினும் ஐ.ஏ.எஸ் எனும் அந்த அதி உச்ச அதிகாரத்தை அடைவது என்பது குதிரை கொம்புதான். Mayiladuthurai Collector Controversy
தங்கள் அறிவால், சாதுர்யத்தால், அனுபவத்தால் மேலேறி நிற்கும் ஆட்சியர்களை “அரசாங்கத்தின் முகம்” என்பார்கள் !
ஆம், நல்லதோ கெட்டதோ அவர்கள் ஏதொன்று செய்தாலும் அது அரசாங்கத்தை நேரடியாக பாதிக்கும்! ஆக, அந்தப் பொறுப்பினை மனதில் கொண்டு மக்கள் நலம் பாடி நிற்க வேண்டியது ஆட்சியர்களின் கடமையாகின்றது.
நிற்க !
*******
இந்திய நாடெங்கிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. அதில், பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைளானது உலக அளவில் தேசிய அவமானமாக நின்று நெஞ்சை எரித்துக் கொண்டிருக்கின்றது.
பள்ளிக் கல்லூரி மாணவிகளுக்கு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் முகமாக இரண்டு அரசாங்கங்களும் பல கோடிகளை செலவழித்து பற்பல திட்டங்களைத் தீட்டி வருகின்றன. Mayiladuthurai Collector Controversy

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் விதமாக நமது தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “உடையாள் படை” எனும் தற்காப்பு பயிற்சி பட்டறையினை குருநானக் கல்லூரியின் பொன்விழா ஆண்டில் அறிமுகப்படுத்தி வைத்தார்.
பள்ளிக் கல்லூரி அமைச்சர் மாண்புமிகு அன்பில் பொய்யாமொழி அவர்கள், ‘உடையாள் படை’ தற்காப்பு பயிற்சியின் அவசியத்தைக் கண்டு ஆமோதிக்க, அதனைத் தொட்டு, கள்ளக்குறிச்சி கலெக்டர் அவர்கள் தனது ஆளுகைக்கு உட்பட்ட எட்டு அரசாங்கப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு உடையாள் படை தற்காப்புப் பயிற்சியினை அளிக்க வைத்தார்.
பயன்பெற்ற மாணவிகள் அனைவரும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக தாங்கள் கற்ற அந்த தற்காப்புக் கலையினை தன்னியல்பாக பலருக்கும் கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.
மெல்ல மெல்ல பெண்கள் வலிமையடைந்து வருகிறார்கள். தங்கள் எதிர்காலம் குறித்த பாதுகாப்பு உணர்வை அடைந்து வருகின்றார்கள். Mayiladuthurai Collector Controversy
*******

இந்த நிலையில்தான் அந்த கலெக்டர் அப்படிச் சொல்லி விட்டார்.
“மூன்று வயதுள்ள குழந்தையை 17 வயதுடைய அந்த மாணவன் வன்புணர்வு செய்ததற்குக் காரணம் அந்தக் குழந்தை அன்று காலையில் அவன் மேல் எச்சில் துப்பி விட்டாள் என்பதுதான். இரண்டு பக்கமும் நாம் பார்த்தாக வேண்டும் “எனச் சடாலென சொல்லிவிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி எம்.பி அவர்கள், “குழந்தைகளுக்கு எதிராக இப்படியான கருத்துகளைப் பேசும் நபர்கள் எப்படி தங்களைப் படித்தவர்கள் என்றும், மனிதர்கள் என்றும் கூறிக்கொள்கிறார்கள். நாம் ஏன் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்?” என வெகுண்டு கேட்டார். Mayiladuthurai Collector Controversy
ஐயா,
மூன்று வயதுள்ள குழந்தை என்ன உயரம் இருக்கும் ? அது 17 வயது பையன் மேல் எப்படி எகிறி எச்சில் துப்பும்? முகத்தில் துப்பும் அளவுக்கு, அவன் அந்தக் குழந்தையின் முகத்துக்கு அருகாமையில் தன் முகத்தைக் கொண்டு போனது ஏன்?
அப்படியே துப்பியிருந்தாலும் அந்தக் குழந்தையின் உடைக்குள் கொடுங் கரங்களை செலுத்துவதும், அதைக் குதறிப் பார்ப்பதும் எந்த வகையில் சரியாகும்? நாடு கெட்டு கிடக்கும் இந்த நிலையில், உயர்ந்த நிலையில் இருக்கும் நீங்கள் ஒரு குழந்தையை குற்றவாளியாக்கி பேசலாமா?
தங்கள் அதிகாரத்துக்கு முன் வாய் பொத்திக் கேட்க ஆளிருக்கிறார்கள் என்பதால் மனம் போன போக்கில் பேசி விடலாமா? நீங்கள் பெற்ற அனுபவம் இதுதானா?
ஐயா ஆட்சியரே உங்களிடம் சில ஆதங்கக் கேள்விகள்..
ஏறத்தாழ 40 ஆண்டுக்காலம் அரசுப் பணியில் நின்று நிலைத்தவரல்லவா. அப்படிப்பட்ட நீங்கள் இப்படிப் பேசியது ஏன்? Mayiladuthurai Collector Controversy
உங்களுக்கு பேத்தி வயதில் இருக்குமல்லவா அந்தக் குழந்தை ! அதன் மேலும் அபவாதம் இருக்கலாம் என மேடையேறி பிழைத்தது ஏன் ?
வலது கையை இழந்தும் இடது கை கொண்டு பணியாற்றினேன் என்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்கள் இடது கையை இப்படியா வீசுவீர்கள் ?
“தாயும் தந்தையும் என்ன சொன்னாலும் கேட்காதீர்கள். உங்கள் வழியில் செயலாற்றுங்கள்” என அறிவு சொன்னவர் இப்படித் தடம் மாறிப் போனதன் காரணம் என்ன ? உணர்வீர்களா ?
சொல்லுங்கள்…
பாதகம் செய்பவரை கண்டால்
பயங்கொள்ளல் ஆகாது பாப்பா !
மோதி மிதித்து விடு பாப்பா; அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா !
எனும் பாரதியின் ‘மகா’ வரிகளைப் படித்துணராமல் விட்டது யார் குற்றம் ?
பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நின்று கொண்டு, “நானென்ன சமைந்த பெண்ணை குச்சி வீட்டில் இருந்து தூக்கிக் கொண்டு போய் சோளக் காட்டில் வைத்து சூறையாடி விட்டேனா ?” எனப் பொது வெளியில் கூச்சமின்றி ஆர்ப்பரிக்கும் துடுக்குணிகளுக்கெல்லாம் உங்களது இந்த அபத்தப் பேச்சானது அல்வா தின்றது போல் ஆகி விடாதா?
ஐ.ஏ.எஸ் எனும் உச்ச பதவியில் அனுபவத்தால் அமர்ந்த மெத்தப் பண்டிதரே இப்படி நாவடக்கம் கொள்ளாது நைந்தது ஏன் ?
கண்ணகியாள் காவியத்தில் இளங்கோவடிகள் மொழிந்தது போல ஊழ் வினை வந்து உருத்தி ஊட்டி விட்டதோ ஐயா ?
இந்த வயதில் நீங்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதே உங்களுக்கான ஆகப்பெரும் தண்டனைதான். போனது போகட்டும்.
மரியாதைக்குரிய ஆட்சியரே, தங்களிடம் எனக்கோர் வேண்டுகோள்…
இன்னும் சில வருடங்களில் தாங்கள் அரசாங்கப் பதவியிலிருந்து விடுபடப் போகிறீர்கள். தயவுசெய்து, தங்களது எஞ்சிய காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பரப்புரை செய்ய முன் வாருங்கள்.
இயன்றால், அந்த அப்பாவிப் பெண் குழந்தையின் வருங்காலத்துக்கு பொறுப்பெடுத்துக் கொண்டு, வழிகாட்டியாக நின்று அவளை நன்றாக படிக்க வைத்து நல்லதொரு ஐ.ஏ.எஸ் ஆக மாற்றிக் காட்டுங்கள்.
தங்களை அறிந்தவர்கள் தங்கள் மாவட்டத்தில் இருப்பவர்கள் தங்களைப் பற்றி நல்லவிதமாகத்தான் சொல்கிறார்கள். தங்களது ஆட்சிப் பணியில் தாங்கள் செய்த மற்ற நல்ல பணிகளுக்காக இந்த சமூகம் என்றும் தங்களை வாழ்த்தும்.
மன அமைதி பெறுங்கள் ! வாழிய நலம் !!
*******
கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர்.
300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.