சென்னையில் கோடை வெயில் இப்போதே வாட்டி வதைக்க துவங்கிவிட்டதால், 14 போக்குவரத்து சிக்னல்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. Green nets traffic signal
மார்ச் மாத துவக்கம் முதல், தினமும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
காலை 8.30 மணிக்கெல்லாம் வெயில் உஷ்ணத்தை காட்ட ஆரம்பித்துவிடுகிறது. இதனால் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்குள்ளாகின்றனர். சென்னையில் காலைவேளையில் பீக் ஹவரில் வாகன ஓட்டிகள் சுட்டெரிக்கும் வெயிலில் சிக்னலில் நிற்கவேண்டியிருப்பதால், கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்தநிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடிய சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணாசாலை, அண்ணா நகர், வேப்பேரி, அடையாறு, ராயப்பேட்டை உள்ளிட்ட 14 சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் சிக்னல்களில் சற்று இளைப்பாறுகின்றனர். இதேபோன்று அனைத்து சிக்னல்களிலும் பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டும் சென்னையில் கோடை மாதங்களில் சில சிக்னல்களில் மாநகராட்சி சார்பில் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Green nets traffic signal