தமிழக வாக்காளர்களே! திமுக கூட்டணிக்கு ஓட்டு போடுங்க.. வீடியோ வெளியிட்ட ஓவைசி

Published On:

| By Mathi

Owaisi DMK

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணிக்குத் தனது முழுமையான ஆதரவை அறிவித்துள்ளார். மதச்சார்பற்ற வாக்குகள் சிதறாமல் இருப்பதை உறுதிசெய்வதே இதன் முக்கிய நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ பதிவில் ஒவைசி கூறியுள்ளதாவது:

ADVERTISEMENT

வீடியோவில் ஓவைசி கூறியுள்ளதாவது: வணக்கம். அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் சார்பாக, இந்த வீடியோ செய்தி மூலம் தமிழ்நாட்டின் மதிப்பிற்குரிய வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.

வருகிற ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற உள்ள தேர்தலில், உங்கள் பொன்னான வாக்குகளை மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

உங்கள் ஆதரவு மற்றும் ஆசீர்வாதங்களுடன் அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களது AIMIM கட்சி மற்றும் அதன் தமிழ்நாடு மாநிலத் தலைவர் வக்கீல் அகமது ஏற்கனவே திமுக கூட்டணிக்கு ஆதரவை அறிவித்துள்ளார்.

மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன், திமுக கூட்டணிக்கும், குறிப்பாக வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளருக்கும் உங்கள் வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். மிக்க நன்றி. இவ்வாறு ஓவைசி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இத்தேர்தலில் மஜ்லிஸ் கட்சி எந்த தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

அசாதுதீன் ஓவைசியின் இந்த ஆதரவு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

பொதுவாகவே, காங்கிரஸ் கட்சி இருக்கும் கூட்டணியை ஓவைசி ஆதரிப்பதில்லை என்ற விமர்சனம் நாடு முழுவதும் உண்டு. தெலுங்கானா, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பிரித்து காங்கிரஸ் கட்சிக்கு ஓவைசி சிக்கலை ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருந்தும், அதற்கு ஓவைசி ஆதரவு அளித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

மஜ்லிஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் வக்கீல் அகமது முன்னதாகவே திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்திருந்த நிலையில், தற்போது தேசிய தலைவர் அசாதுதீன் ஓவைசியே நேரடியாக வீடியோ வெளியிட்டு ஆதரவு தெரிவித்துள்ளார். இது சிறுபான்மையினர் வாக்குகளை திமுக கூட்டணிக்கு மேலும் உறுதிப்படுத்தும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share