ADVERTISEMENT

“சிறைக்கும் தூக்குக் கயிறுக்கும் அஞ்சாதவர் கெஜ்ரிவால்” – அனல் பறந்த ஸ்டாலின் பிரச்சாரம்!

Published On:

| By Kavi

சென்னை திருவிக நகர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து  ஆம் ஆத்மி தலைவரும் முன்னாள் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் திறந்தவெளி வேனில் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார். 

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின்,  “முன்னாள் முதலமைச்சர் சகோதரர் அரவிந்த் கெஜ்ரிவாலை பற்றி சொல்லணும்னா, அவர் ஒரு பெரிய போராளி. எந்த அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் பயப்படாதவர். மோடியை எதிர்த்துப் போராடக்கூடியவர். பாசிச பாஜக ஆட்சியை எதிர்த்துத் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இரண்டு முறை டெல்லியில முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மூன்றாவது முறை அவர்தான் வந்திருக்கணும். ஆனால் திட்டமிட்டு, வேண்டுமென்று அவரை முடக்க வேண்டும் என்பதற்காக, அவருடைய வலது கரமாக, இடது கரமாக இருந்த அவருடைய தளபதிகளாக இருந்த பல பேரை, பல அமைச்சர்களைக் கைது செஞ்சு, பொய் வழக்குகளைப் போட்டுச் சிறையில் ஆண்டுக்கணக்காக அடைச்சு வச்சாங்க.

அதற்குப் பிறகு தேர்தல் வருகின்ற நேரத்தில நம்முடைய அரவிந்த் கெஜ்ரிவாலையும் கைது செஞ்சு சிறையில போட்டாங்க. ஒரு அவதூறான வழக்கு, ஊழல் செஞ்சார்ன்னு ஒரு பொய் வழக்கைப் போட்டுக்கொண்டு சிறையில் அடைத்தார்கள். ஆனால் அந்த வழக்கு அவதூறான வழக்கு, எந்த ஆதாரமும் இல்லை, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை அப்படின்னு உச்சநீதிமன்றத்தில தீர்ப்பு சொன்னாங்க. அதற்குப் பிறகு விடுதலையாகி வந்திருக்கிறார்.

ADVERTISEMENT

இதற்கிடையில்தான் டெல்லியில் நடந்த சட்டமன்றத் தேர்தல் நடத்தி, அங்கே பிஜேபி அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல தில்லுமுல்லுகளைச் செஞ்சு அவங்க  வெற்றி பெற்றார்கள். மூன்றாவது முறையாக கெஜ்ரிவால் வருவதை தடுத்தார்கள். ஆனால் அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. மீண்டும் எவ்வளவுதான் சிறையில போட்டாலும், எவ்வளவுதான் கொடுமைப்படுத்தினாலும், என்னைத் தூக்குக் கயிறு ஏற்றினாலும்,  நான் கவலைப்பட மாட்டேன். உன்னை எதிர்ப்பேன், உன்னை எதிர்ப்பதுதான் என்னுடைய லட்சியம், உங்க ஆட்சியை ஒழிப்பதுதான் என்னுடைய கோட்பாடு என  உறுதியோடு இருக்கக்கூடிய கெஜ்ரிவால் இங்கு வந்திருக்கிறார்.

இன்னும் அவரைப் பற்றிப் பெருமையா சொல்லணும்னா, அவர் முதலமைச்சராக இருந்த நேரத்தில டெல்லியில பல்வேறு சாதனைகளை, பல திட்டங்களை உருவாக்கித் தந்தார். 

ADVERTISEMENT

அதில் முக்கியமாக என்னைக் கவர்ந்தது பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள், ‘மாடல் ஸ்கூல்’ என்ற பெயரில் பல சிறப்பான திட்டங்களைச் சாதனைகளை  கொண்டுவந்தார். அது என்னைக் கவர்ந்தது.

நான் உடனடியாக இங்க இருக்கக்கூடிய அதிகாரிகளிடம் கலந்து பேசி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கலந்து பேசி, அங்கு  என்ன நடக்குதுன்னு தெரிந்துகொள்ள நேராக டெல்லிக்கு போனோம். அவர் எங்களுக்கு அதெல்லாம் சுத்திக் காண்பித்தார். எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதை எல்லாம் விவரமாக எடுத்துச் சொன்னார். 

அதற்குப் பிறகு நம்முடைய தமிழ்நாட்டில, குறிப்பாக சென்னை மாநகராட்சியில் நூற்றுக்கணக்கான ஸ்மார்ட் ஸ்கூல், ஸ்மார்ட் வகுப்பறைகளை நாம் ஆரம்பிச்சிருக்கிறோம்.  அதுமட்டுமல்ல, மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு வரப்போறோம்.  2.o ஆட்சியில் ஆயிரக்கணக்கான ஸ்மார்ட் ஸ்கூல், ஸ்மார்ட் கிளாஸ்களை தமிழ்நாடு முழுவதும் நாம உருவாக்கப் போறோம். அதையே தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருக்கிறோம். அதெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீங்க.

நமது, புதுமைப் பெண் திட்டத்தை முதலில் யார் தொடங்கி வச்சதுன்னா, இதோ வந்திருக்காரே நம் சகோதரர் டெல்லி முன்னாள் முதலமைச்சர், அவர்தான் தொடங்கி வச்சார். அது இன்னைக்குச் சிறப்பாக செயல்பட்டுட்டு இருக்கு. ஆக இப்படிப்பட்ட உறவு நமக்கும் அவருக்கும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. அந்தத் தொடர்பின் காரணமாகத்தான் நான் பிரச்சாரத்திற்கு வரணும்னு அழைச்சேன். அழைத்த உடனே மறுப்புச் சொல்லாமல் வந்திருக்கிறார்” என்று கூறினார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share