தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர்: யார் இந்த விஜய் நாராயண்? பின்னணி என்ன?

Published On:

| By Kavi

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமிக்கப்பட்டு, நேற்று (மே 14) பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தான் சந்தித்த முதல் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகியுள்ளார். இவரது தலைமையிலான ஆட்சியில் நிர்வாக மாற்றங்கள் நடந்து வருகின்றன.

ADVERTISEMENT

அந்தவகையில் கடந்த மே 12ஆம் தேதி தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த பி.எஸ்.ராமன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து நேற்று முன் தினம் (மே 13 தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணை நியமித்து, ஆளுநர் உத்தரவிட்டுள்ளார் என தலைமை செயலாளர் சாய் குமார் அறிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் மே 14ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

யார் இந்த விஜய் நாராயண்?

ADVERTISEMENT

அப்போதைய பீகார் மாநிலத்தின் ராஞ்சியில் பள்ளி படிப்பை முடித்தார். தொடர்ந்து சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை படித்த விஜய் நாராயண், சென்னை அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார்.

அரசியலமைப்பு சட்டத்தை மேம்படுத்த பணியாற்றிய குழுவில் இடம்பெற்ற இந்தியாவின் சிறந்த சட்ட மேதைகளில் ஒருவரான வழக்கறிஞர் எம்.கே.நம்பியாரின் பேரன் ஆவார். மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் உறவினர்.

விஜய் நாராயணின் தாய்வழித் தாத்தா இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்த சர்தார் கே.எம். பணிக்கர் ஆவார்.

இப்படி சட்ட குடும்பத்திலிருந்து வந்த விஜய் நாராயண் 1982ல் எல்.எல்.பி முடித்ததும் அப்போது மூத்த வழக்கறிஞராக இருந்த ப.சிதம்பரம் அலுவலகத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

தொழிலாளர், அரசியலமைப்பு, நிர்வாகம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு வகையான சட்டம் குறித்த வழக்குகளில் ஆஜராகி வாதாடியிருக்கிறார். 2004ல் இவருக்கு மூத்த வழக்கறிஞர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களிலும் ஆஜராகி வாதாடியிருக்கிறார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தொன்மையான வழக்கறிஞர் சங்கமான மெட்ராஸ் பார் அசோசியேசனின் தலைவராக இருந்தவர்.

இந்திய  சட்ட நிறுவனத்தின் சென்னை மண்டல செயற்குழு உறுப்பினராக 2012ல் நியமிக்கப்பட்டார். திருச்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியின் பொதுக் குழு உறுப்பினராக கடந்த 2026 பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்டார்.

இவர் கடந்த 2017 முதல் 2021 வரையிலான எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார்.

அதன்பிறகு ஆட்சி மாறியது. அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் என பிளவு ஏற்பட்டது அப்போது அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராகவும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராகவும் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், ஈபிஎஸ் சார்பில் ஆஜராகி வாதாடியிருக்கிறார் வழக்கறிஞர் விஜய் நாராயண். அதாவது பொதுக்குழு சட்டப்படிதான் நடத்தப்பட்டது என ஈபிஎஸுக்கு ஆதரவாக வாதாடினார்.

இவர் அதிமுகவில் அரசு வழக்கறிஞராக இருந்த போது, 2020ஆம் ஆண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்காக ஆஜராகி அதனை உறுதிப்படுத்த வாதாடினார்.

2017ல் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சபாநாயகரின் முடிவுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தார். 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களில் திமுக அரசில் தலைமை வழக்கறிஞராக இருந்த பிஎஸ் ராமன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடினர்.

மெரினா ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகள், ஸ்டெர்லைட் ஆலை வழக்குகள், மருத்துவக் கல்வி இட ஒதுக்கீடு வழக்கு, காவல்துறை அதிகாரிகள் இடமாற்ற வழக்கு என முக்கிய வழக்குகளை கையாண்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக கட்சி தொடங்கி, அதன் கொடி அறிமுகப்படுத்தப்பட்ட போது அதில் இரட்டை யானை இடம்பெற்றதற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.யானை தங்களுடைய சின்னம் என பகுஜன் சமாஜ் தொடர்ந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் நாராயண் ஆஜராகி வாதாடினார்.

அப்போது, பகுஜன் சமாஜ் கொடிக்கு, தவெக கொடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விளம்பரத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என வாதாடினார்.

இந்த சூழலில் தவெக ஆட்சியில் மாநில அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

“இவர் நீதிமன்றத்தில் ஆஜராகும் போது கண்ணியமாகவும் அழுத்தமாகவும் வாதங்களை முன்வைப்பார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று வித்தியாசமெல்லாம் பார்க்கமாட்டார். அரசியல் கட்சி சார்ந்த வழக்குகள், கூகுள் போன்ற நிறுவனங்கள் சார்ந்த வழக்குகள் என பல்வேறு வழக்குகளை கையாண்டவர்’ என சென்னை உயர் நீதிமன்ற வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

இவர் மாநில அரசின் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல்வர் விஜய் நடிகராக இருந்த போது ரோல்ஸ் ராய்ஸ் கார் இறக்குமதி வரி வழக்கில் விஜய் சார்பில் ஆஜராகி வாதாடியிருக்கிறார் என தகவல்கள் பரவின. ஆனால் அதுபோல் அவர் எந்த வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கிலும் ஆஜராகியதில்லை.

2022-ஆம் ஆண்டு ஒரு தனி நீதிபதி அளித்த எதிர்மறையான கருத்துக்களை நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், அவருக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞராகவே ஆஜரானார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா (தற்போது ஓய்வு பெற்றவர்) மற்றும் முகமது ஷஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்தத் தனி நீதிபதியின் கருத்துக்கள் தேவையற்றவை என்று கூறி அவற்றை நீக்கி உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share