அதிமுகவின் (AIADMK) எஸ்பி வேலுமணியில் இருந்த முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி (KC Veeramani) திடீரென எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறி உள்ளார்.
சட்டசபையில் முதல்வர் விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக கொறடா உத்தரவை மீறி 25 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இவர்களில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியும் ஒருவர்.
இந்நிலையில் திடீரென எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிருப்தி அணியில் இருந்து கே.சி.வீரமணி, எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவி உள்ளார்.
இது தொடர்பாக கே.சி.வீரமணி கூறுகையில், எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக பொதுச்செயலாளர். அவர் தலைமையில்தான் செயல்படுவோம். அதில் மாற்று கருத்து எதுவும் இல்லை என்றார்.
எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர்
முன்னதாக திருப்பத்தூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கே.சி.வீரமணி, என்னை பொருத்தவரை நான் எடுத்த முடிவு வந்து, என்னுடைய மனசாட்சிக்கு உட்பட்டது. அடுத்த தேர்தலை பத்தி எனக்கு எந்த விருப்பமும் கிடையாது. இருக்கின்ற இந்த நாட்களை இந்த இடங்களை நம்ம மக்களுக்குப் பயன்படுத்த முடியுமா? உங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்குமோ அதை பயன்படுத்திக்கலாம். அதிமுக சார்பாக நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்கிறோம்னு சொல்லியிருக்கிறோம். அவங்க அமைச்சரவை பதவி தரப்போறாங்களோ இல்லையோ அதைப் பத்தி நமக்கு கவலை இல்லை.
நம்மளுடைய வரலாறு அவங்களுக்குத் தெரியும். நம்ம எப்படி வந்தோம், எப்படி கட்சியில இருந்தோம், எப்படி ஆட்சி அதிகாரத்தில் இருந்தோம், எப்படி கட்சியை நடத்தினோம் இதெல்லாம் வந்து இருக்கக்கூடிய ஆளுங்கட்சிக்கு நல்லாவே தெரியும்.
அவங்க பதவி தராங்க, தராதுங்கிறது அவங்க விருப்பம்… அது அவங்களை பொறுத்தவரைக்கும் போகட்டும், அதைப் பத்தி நமக்கு கவலை இல்லை.
பழைய மாதிரி கண்டிப்பா உங்களுக்கு உதவியா இருப்பேன், எப்போதுமே உங்களுக்கு துணையா இருப்பேன். இயக்கத்திற்குத் துணையா இருப்பேன்.
நம்மளைப் பொறுத்தவரைக்கும் நமக்கு எடப்பாடியார் தான் பொதுச்செயலாளர். எடப்பாடியாருக்கு பின்னாடிதான் நிக்கிறோம். அவர்தான் பாஸ் அப்படின்னு சொல்றோம் என்றார்.
