தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது தொடர்பாக ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளதாவது: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (மே 14) நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் முடிவின்படி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் நோக்கம் மற்றும் காலக்கெடு
- தொகுதிவாரியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்களை நேரடியாகச் சந்தித்து கருத்துகளைப் பெறுதல்.
- கள ஆய்வு அறிக்கையை ஜூன் 5-ஆம் தேதிக்குள் திமுக தலைவரிடம் சமர்ப்பித்தல்.
மாவட்டச் செயலாளர்களுக்கான அறிவுறுத்தல்கள்
குழுவினரின் வருகையின் போது மாவட்டச் செயலாளர்கள் பின்வரும் பணிகளை உறுதி செய்ய வேண்டும்:
- தரவுகள் தயாரிப்பு: தொகுதியின் விவரம், வாக்குச்சாவடி வாரியான வாக்கு விவரங்கள், அதிக மற்றும் குறைந்த வாக்குகள் பெற்ற பகுதிகள் குறித்த தரவுகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
- குழுவினருக்குத் தேவையான தங்குமிடம் மற்றும் ஆய்வுக்கான இட வசதிகளை முறையாகச் செய்து தர வேண்டும்.
சந்திப்பு முறைகள்
- ஆய்வின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, பின்வரும் சந்திப்பு முறைகள் கடைபிடிக்கப்படும்:
முதற்கட்டமாக, மாவட்டச் செயலாளர், தொகுதிப் பார்வையாளர், வேட்பாளர், தொகுதிக்குட்பட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை ஆய்வுக்குழுவினர் தனித்தனியாகச் சந்தித்துப் பேசுவர்.

அடுத்ததாக, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்களைத் தனித்தனியே சந்திப்பர். இச்சந்திப்பின் போது மாவட்டச் செயலாளர், தொகுதிப் பார்வையாளர், வேட்பாளர் உள்ளிட்டவர்கள் உடன் இருக்கக் கூடாது.
தொடர்ந்து, ஒவ்வொரு மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் திமுக நிர்வாகிகள் அனைவரையும் தனித்தனி குழுக்களாகச் சந்தித்து கருத்துக் கேட்க உள்ளனர். அப்பொழுது அந்தந்தப் பகுதிச் செயலாளர்கள் உடன் இருக்கக் கூடாது.
கால அட்டவணை மற்றும் கூடுதல் பணிகள்
காலை முதல் மதியத்திற்குள் இந்தச் சந்திப்புகளை நிறைவு செய்து விட்டு, மதியத்திற்கு மேல் சார்பு அணிகளைச் சேர்ந்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளைத் தனித்தனி குழுக்களாகச் சந்திக்க வேண்டும்.
அதேபோல, கிளைச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் குழுக்களாகச் சந்தித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
ஆய்வுக் கூட்டம் நடைபெறும் நாளில் கூட்டத்தில் கலந்து கொள்ளும் திமுக நிர்வாகிகளின் வருகையை வருகைப் பதிவேடு மற்றும் மினிட் புத்தகத்தில் முறையாகப் பதிவு செய்து கையொப்பம் பெற வேண்டும்.
கள ஆய்வுப் பணிக்கான குழு விவரம்:

