தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டையில் 26.8 மிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதுபோன்று வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக ஈரோட்டில் 38.4° செல்சியல் வெயில் பதிவாகியுள்ளது.
குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 13.0° செல்சியல் வெயில் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே 15) வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் துவங்கக்கூடும்.
நேற்று (14-05-26) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (15-05-2026) காலை 08.30 மணியளவிலும் அதே பகுதிகளில் நிலவுகிறது.
15-05-2026: விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும்.
16-05-2026: விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும்.
17-05-2026: திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகக்கூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்றும் தெரிவித்துள்ளது.
