ஜூட் விட்டாரா? கே.சி. வீரமணியின் அதிரடி விளக்கம்: அதிமுக குழப்பத்துக்கு விழுந்தது ‘எண்ட் கார்டு’!

Published On:

| By Mathi

AIADMK KC Veeramani

அதிமுக (AIADMK) பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு தாம் தாவியதாக வெளியான செய்திகள் குறித்து முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி (K.C. Veeramani) விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் கே.சி. வீரமணி கூறியதாவது: நாங்கள் இப்போது அண்ணன் சி.வி. சண்முகம், அண்ணன் எஸ்.பி. வேலுமணி போன்ற எங்களை வழிநடத்தக்கூடிய தலைவர்கள் பின்னால் சென்றுகொண்டிருக்கிறோம். சட்டமன்றத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி உள்ளோம். அதில் எந்தவித மாற்றமும் இல்லை, அவர்கள் பின்னால்தான் நான் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறேன்.

ADVERTISEMENT

26 மாவட்டச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் என எங்களையெல்லாம் விடுவித்துவிட்டு, அண்ணன் எடப்பாடியார் மட்டும் கட்சியை நடத்திக் கொண்டிருந்தால் அது சரியாக இருக்குமா?

எங்களைப் பொறுத்தவரை, எங்களுடைய எம்.எல்.ஏ பதவி வீணாகிவிடக்கூடாது. கடந்த 5 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்தோம். கடுமையான உழைப்பில், சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்று வந்திருக்கிறோம். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டதை நாங்கள் மறக்கவில்லை, அதற்கு நாங்கள் நன்றி கடன்பட்டவர்கள்தான்.

ADVERTISEMENT

ஆனால், இந்த எம்.எல்.ஏ. பதவி உதவாமல் போய்விடக்கூடாது. ஆளுங்கட்சியைச் சார்ந்து இருக்கும் போது, தொகுதி வளர்ச்சிக்கும், மக்களுக்கும் இந்தப் பதவி உறுதுணையாக இருக்கும். இந்த அடிப்படையில்தான் எங்களது ஆதரவு இருக்கிறது. ஆனால், எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எப்போதும் அண்ணா திமுகதான். அண்ணா திமுக சார்பாகத்தான் இந்த ஆதரவு கொடுத்துள்ளோம். இவ்வாறு கே.சி. வீரமணி கூறினார்.

முன்னதாக திருப்பத்தூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கே.சி.வீரமணி, “நான் பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில்தான் செயல்படுகிறேன்” என பேசியதால் அவர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவுவதாக புரிந்து கொள்ளப்பட்டு குழப்பம் ஏற்பட்டிருந்தது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share