Tamil Nadu Election Results 2026
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று மே 4-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்குரிய இடங்கள் 118.
இந்த தேர்தலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டணி, புதிய வரவான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை என 4 முனைப் போட்டி நிலவுகிறது.
234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 85.10% வாக்குகள் பதிவாகின. 5.73 கோடி வாக்காளர்களில், சுமார் 4.88 கோடி பேர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்,
இதனைத் தொடர்ந்து காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
ஒவ்வொரு சுற்றின் (Round) முடிவுகளும் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் அறிவிக்கப்படும். உடனுக்குடன் அதிகாரப்பூர்வமாக ECINET செயலி மற்றும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் (results.eci.gov.in) பதிவேற்றம் செய்யப்படும்.
வாக்கு எண்ணிக்கையில் 10,545 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். 4,624 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் முதல்முறையாக வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் நுழைய QR குறியீடு (QR code-based entry system) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே செல்வதை உறுதி செய்யும்.
3 அடுக்கு பாதுகாப்பு:
அடுக்கு 1: மையத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவு – காவல்துறை கண்காணிப்பு.
அடுக்கு 2: வாக்கு எண்ணிக்கை வளாகத்தின் நுழைவு வாயில்கள்- ஆயுதப்படை.
அடுக்கு 3: வாக்கு எண்ணிக்கை அறை மற்றும் EVM வைக்கப்பட்டிருக்கும் அறை- மத்திய ஆயுதப்படை.
மொத்தம் 65 கம்பெனி மத்திய ஆயுதப்படை வீரர்கள் மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் சுமார் 20,000 காவலர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.
