தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 4) காலை 8 மணிக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக, தமிழகத்தில் முதல் முறையாகக் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முன்னணியில் உள்ளது. இதுவரை 104 தொகுதிகளில் தவெக முதலிடத்திலும், 67 தொகுதிகளில் அதிமுக முன்னிலையிலும் உள்ளது. திமுக 40 இடங்களிலும், பாமக 7 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
ஏற்கனவே இன்று காலை முதல் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் வீட்டிற்குச் செல்லும் வழியில் கபாலீஸ்வரர் நகரில் காவல்துறையினர் வாகனங்களை உள்ளே அனுமதி மறுத்துள்ளனர். கபாலீஸ்வரர் நகர் வழியில் பேரிகேட் போட்டு தடுக்கப்பட்டுள்ளது. மேலும், “விஜய் வெளியே சென்றால் வாகனத்தைப் பின்தொடரக் கூடாது. மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ரசிகர்கள் அதிக அளவில் கூடக் கூடாது. இருசக்கர வாகனத்தில் சென்று விபத்துக்கள் ஏற்படக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அக்கரை முதல் நீலாங்கரை வரை 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் தவெக தொடர்ந்து முன்னிலையில் உள்ள நிலையில் விஜய் வீடு உள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
