Tamil Nadu Election 2026: காரைக்குடியில் வாக்களித்தார் ப.சிதம்பரம் – கடன் மற்றும் இலவசங்கள் குறித்து விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

P. Chidambaram

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 234 தொகுதிகளிலும் தொடங்கியுள்ளது. இன்று (ஏப்ரல் 23) காலை 7 மணிக்கு முன்னதாகவே தமிழகத்தில் முதல் ஆளாக தனது வாக்கைப் பதிவு செய்தார் நடிகர் அஜித்குமார்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், காரைக்குடி தொகுதியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.“தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு முழுவதும் நிலையான அரசு, வளர்ச்சி, மக்கள் நலத்திட்டங்கள் ஆகிய மூன்று கோரிக்கைகளும் எதிரொலிக்கின்றன. இந்த மூன்று எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றிய திராவிட முன்னேற்றக் கழக அரசு, இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்ய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது” என்றார்.

ADVERTISEMENT

அடுத்து வரும் அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதில் சிக்கல் இருக்குமா என்ற கேள்விக்கு, “ஒரு சிக்கலையும் சந்திக்காது. அமைச்சர்கள், திறன் வாய்ந்த அதிகாரிகள் உள்ளனர். வரவு செலவு கணக்கு போடும்போது சொந்த வருவாய் மற்றும் மத்திய அரசு கொடுக்கும் வருவாய் ஆகிய இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, தேவையான கடனை வாங்கி வரவு-செலவு கணக்கு போட வேண்டும். இது ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் பொருந்தும். இதில் எந்தச் சிக்கலும் இல்லை. நிலையான அரசு, வலிமையான அரசு ஒழுங்கான வரவு-செலவுத் திட்டத்தை அளிக்கும்” என்று பதிலளித்தார்.

இலவசங்கள் குறித்த கேள்விக்கு, “மத்திய அரசிற்கு எவ்வளவு கடன் உள்ளது? கடனுக்கு வட்டி கொடுக்க வருவாய் இருந்தால் கடன் வாங்குவது தவறு இல்லை. எல்லா நாடுகளும் கடன் வாங்குகின்றன. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் கடன் வாங்கவில்லையா? தமிழ்நாடு மட்டும்தான் கடன் வாங்குகிறது என்று நினைக்காதீர்கள். இலவசம் என்பதை நான் மறுக்கிறேன். இது இலவசம் அல்ல. யுனிவர்சல் பேசிக் இன்கம் (Universal Basic Income) அதாவது தமிழகம் முழுவதும் அடிப்படை வருமானம் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதற்காக பிரித்து பிரித்துத் தருகிறார்கள்.

ADVERTISEMENT

விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் போன்ற திட்டங்கள் அனைத்தையும் பிரித்துப் பார்த்தால் அது யுனிவர்சல் பேசிக் இன்கம் தான். தமிழ்நாடு எங்கும் குறைந்தபட்ச வருமானம் எல்லோருக்கும் உறுதி செய்யப்படுவதின் ஒரு படியாகத்தான் நான் பார்க்கிறேன். இதை இலவசமாகப் பார்க்கக் கூடாது” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share