இந்தியாவிற்கான வழக்கறிஞரானார் ராகுல் – முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Tamil Nadu Chief Minister Stalin's speech in Bihar

பீகாரில் ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார யாத்திரையில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “நியாயமாக முறைப்படி வாக்குபதிவு நடந்தால் பாஜக கூட்டணி தோற்றுவிடும் என்ற பயத்தில் மக்களாகிய உங்களை வாக்களிக்க விடாமல் தடுக்கின்றனர்” என தெரிவித்தார்.

பீகாரில் சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் நடத்தியது. இதைத்தொடர்ந்து சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இதற்கிடையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பெங்களூரு மகாதேவபுரா சட்ட மன்ற தொகுதிகளில் வாக்குத்திருட்டு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக பீகாரில் கடந்த 17ம் தேதி சசாரம் நகரில் வாக்காளர் அதிகார யாத்திரையை தொடங்கினார்.

16 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை வரும் செப்டம்பர் 1ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நிறைவடையும். சுமார் 1300 கி.மீ இந்த யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் இந்த யாத்திரைக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

ADVERTISEMENT

அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 27) பீகாரில் நடந்து வரும் யாத்திரையில் ராகுலுடன் கலந்து கொண்டார். திறந்த வாகனத்தில் ராகுல் மற்றும் தேஜஸ்வி யாதவுடன் நின்ற படி பேரணியில் கலந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “சமூக நீதி மதச்சார்பின்மையின் அடையாளம் லாலு பிரசாத் யாதவ். பீகார் என்றாலே லாலு பிரசாத் யாதவ்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வருவார். கலைஞரும், லாலுவும் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். எத்தனையோ வழக்குகள், மிரட்டல்கள் வந்தாலும் பாஜகவிற்கு பயப்படாமல் அரசியல் செய்வதால் இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக விளங்குகிறார் லாலு.

ADVERTISEMENT
போர்க்குரல் எழுப்பியது பீகார்

அப்பாவிற்கு தப்பாது பிறந்த பிள்ளையாய் தேஜஸ்வி யாதவ் அவரது வழித்தடத்தில் உழைத்து வருகிறார். கடந்த ஒரு மாதகாலமாக இந்தியாவே பீகாரை பார்த்து கொண்டிருக்கிறது. இதுதான் பீகார் மக்களின் பலம். ராகுல் காந்தியின் பலம். தேஜஸ்வி யாதவின் பலம். இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஆபத்து வரும் போதெல்லாம் அதற்கான போர்க்குரலை பீகார் எழுப்பி உள்ளது என்பது தான் வரலாறு.

லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஜனநாயகத்தின் குரலை, சோசலிசத்தின் குரலை எதிரொலிக்கும் வகையில் மக்கள் சக்தியை திரட்டினார். அந்த பணியைத்தான் ராகுல் காந்தியும், தேஜஸ்வியும் இங்கு செய்து வருகின்றனர். இவர்கள் செல்லும் இடம் எல்லாம் மக்கள் கடல்போல் திரண்டு வருகின்றனர். அதிலும் தேஜஸ்வி கார் ஓட்ட, ராகுல் காந்தி பயணிக்கும் காட்சியையும், மோட்டார் சைக்கிள் பயணத்தையும் நான் பார்த்தேன்.

பாஜகவின் துரோக அரசியல் தோற்கும்

உங்கள் நட்பு அரசியல் மட்டுமல்ல.. உடன் பிறப்புகளின் நட்பு. ஜனநாயகத்தை காக்க மக்கள் நலனுக்கான ஒன்று சேர்ந்துள்ளீர்கள். பீகார் தேர்தலில் உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தர போவதே இந்த நட்புதான்.

பாஜகவின் துரோக அரசியல் தோற்கும். தேர்தலுக்கு முன்னரே உங்கள் வெற்றி உறுதியாகி விட்டது. அதனால் தான் இந்த வெற்றியை தடுக்க பார்க்கின்றனர். நியாயமாக முறைப்படி வாக்குபதிவு நடந்தால் பாஜக கூட்டணி தோற்றுவிடும் என்ற பயத்தில் மக்களாகிய உங்களை வாக்களிக்க விடாமல் தடுக்கின்றனர்.

தேர்தல் ஆணையத்தை கீ கொடுத்தால் ஆடுகிற பொம்மையாக மாற்றி விட்டார்கள். 65 லட்சம் பீகார் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை. சொந்த மண்ணில் பிறந்து வாழ்ந்த மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதை விட பயங்கரவாதம் இருக்க முடியுமா.. அனைத்து அடையாள அட்டைகளை வைத்திருந்தாலும் அவர்களை அட்ரஸ் இல்லாதவர்களாக மாற்றுவது அழித்தொழிப்புதான்.

ராகுலும், தேஜஸ்வியும் பெறப்போகும் வெற்றியை தடுக்க நினைக்கும் பாஜக கொல்லைப்புற வழியாக இந்த வேலையை பார்க்கிறது. இதற்கு எதிராக என் சகோதர்கள் எடுத்துள்ள போராட்டத்தை வாழ்த்ததான் நான் இங்கு வந்துள்ளேன்.

ராகுல் காந்தி பயப்படுவாரா?

குறிப்பாக ராகுல் தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடிகளையும் அம்பலப்படுத்தி உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தால் முறையாக பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் ராகுல் காந்தி உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யவேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சொல்கிறார்.

இந்த மிரட்டலுக்கெல்லாம் ராகுல் காந்தி பயப்படுவாரா? ராகுல் காந்தியின் வார்தையிலும், கண்களிலும் எப்போதும் பயம் இருக்காது. ராகுல் காந்தி அரசியலுக்காக மேடைக்காக பேசுபவர் கிடையாது. தான் பேசுகிற வார்தைகளை மிகுந்த கவனத்தோடு பேசுகிறவர். பாஜக தேர்தலை எப்படி கேலிக்கூத்தாக்கிவிட்டது என்பதை ராகுல் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டதால் பாஜகவினர் அவர் மீது பாய்கின்றனர். மக்கள் வாக்குரிமையை பறிக்கும் பாஜகவின் அதிகாரத்தை மக்கள் நிச்சயமாக பறிப்பார்கள் அதைத்தான் இந்த கூட்டம் எடுத்துக்காட்டுகிறது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்கான அடித்தளத்தை பீகாரின் பாட்னாவில்தான் விதைத்தோம். எங்களுக்கு சமமான அரசியல் எதிரிகள் இல்லை எதிர்க்கட்சிகள் ஒன்று சேர மாட்டார்கள் என்ற பாஜகவின் எண்ணத்தை தகர்த்த இடம்தான் இந்த பீகார். 400 இடம் என கனவு கண்டவர்களை 240 என்று அடக்கியது இந்தியா கூட்டணி. மெஜாரிட்டி என்று ஆட்டம் போட்டவர்கள் மைனாரிட்டி ஆகிவிட்டார்கள். மக்கள் சக்தி முன் எப்படிபட்ட சர்வாதிகாரியும் மண்டியிட்டாக வேண்டும் என மீண்டும் பீகார் நிரூபிக்க வேண்டும்.

ராகுல் காந்தி இந்தியாவிற்கான வழக்கறிஞராக உள்ளார். உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும். இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கும் மக்கள் சக்திக்கு இணையானது எதுவும் இல்லை என்பதை தேஜஸ்வி காட்டி வருகிறார். நீங்கள் இருவரும் பீகாரில் பெற போகும் வெற்றியே இந்தியா கூட்டணிக்கு அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைய உள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்ற பிறகு நடைபெறும் வெற்றி விழா கூட்டத்தில் நிச்சயமாக நானும் பங்கேற்பேன்” என்று பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share