மின்னம்பலம் EXIT POLL 2026: தவெக விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், அருண்ராஜ் தொகுதிகளின் முன்னிலை நிலவரம் என்ன?

Published On:

| By Mathi

17-வது தமிழக சட்டசபை தேர்தல் எனும் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவில் நமது மின்னம்பலம் மீடியாவும் இணைந்துள்ளது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மின்னம்பலம் மீடியா மிக துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளும் நமது மின்னம்பலம் கருத்து கணிப்பு முடிவுகளைப் போலவே மிக சரியாக அமைந்திருந்தன.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து தற்போதைய தமிழக சட்டசபை தேர்தல் களத்திலும் நமது மின்னம்பலம் மீடியா களமிறங்கியது.

கடந்த மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை ஏப்ரல் 9-ந் தேதி மின்னம்பலம் வெளியிட்டது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்தது.

இந்த வாக்குப் பதிவுக்கு பின் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 200 பேர் வீதம் 234 தொகுதிகளிலும் 46,800 பேரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள்? என கேட்கப்பட்டது.

ADVERTISEMENT

234 தொகுதிகளிலும் வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு- எக்ஸிட் போல் Exit Poll முடிவுகளை இன்று ஏப்ரல் 29-ந் தேதி மக்களின் பார்வைக்கு வைத்துள்ளோம்.

தமிழக சட்டசபை தேர்தலில் புதிய வரவான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் களமிறங்கியது. சேலம் எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் அருண்குமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் சுயேட்சைக்கு தவெக ஆதரவளித்தது.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ஏற்கனவே மின்னம்பலம் கருத்து கணிப்பு வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப் பதிவு நடந்த பின்னர் நடத்த கருத்து கணிப்பு முடிவுகளை நேற்று மக்களின் பார்வைக்கு நமது மின்னம்பலம் வைத்திருந்தது.

நமது தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பில் தவெகவின் முகங்களான விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், செங்கோட்டையன் ஆகியோர் போட்டியிட்டுள்ள தொகுதிகளின் நிலவரங்களைப் பார்க்கலாம்

விஜய்- பெரம்பூர்

தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார்.

பெரம்பூரில் திமுக வேட்பாளராக ஆர்டி சேகர், அதிமுக கூட்டணியில் பாமகவின் திலகபாமா , நாதகவின் வெற்றித்தமிழன் ஆகியோர் களம் கண்டனர்.

விஜய் இந்த தொகுதியில் 46% வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் நிலையில் முன்னிலை வகிக்கிறார். திமுகவின் ஆர்டி சேகர் 40% வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராகப் போட்டியிட்டுள்ள திலகபாமா வெறும் 10% வாக்குகளைத்தான் பெறுவார் என்கிறது நமது மின்னம்பலம் எக்ஸிட் போல் முடிவுகள். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றித் தமிழனுக்கு 4% வாக்குகள் மட்டுமே கிடைக்கும் வாய்ப்புள்ளது.

பெரம்பூர் தொகுதியில் விஜய் 6 சதவீத வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

திருச்சி கிழக்கு தொகுதி

விஜய் போட்டியிட்டுள்ள மற்றொரு தொகுதி திருச்சி கிழக்கு. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக இனிகோ இருதயராஜ், அதிமுக வேட்பாளராக ராஜசேகரன், நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணசாமி களத்தில் உள்ளனர்.

இந்த தொகுதியில் திமுக 36% வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. தவெக தலைவர் விஜய் 35% வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் 25%, நாதகவின் கிருஷ்ணசாமி 4% சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

இந்த தொகுதியில் தவெக தலைவர் விஜய் 1 சதவீத வாக்குகள் பின் தங்கி உள்ளார்.

புஸ்ஸி ஆனந்த்

சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் போட்டியிட்டுள்ளார். திமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் மகன் ராஜா அன்பழகன். அதிமுக வேட்பாளராக சத்யா, நாதக் வேட்பாளராக அனுஷா களம் கண்டுள்ளனர்.

இந்த தொகுதியில் அதிமுகவின் தி.நகர் சத்யா 32 சதவீத வாக்குகள் பெற வாய்ப்புள்ளது.

திமுகவின் ராஜா அன்பழகன் 30 சதவீத வாக்குகளையும் தவெகவின் புஸ்ஸி ஆனந்த் 30 சதவீத வாக்குகளையும் பெறுகின்றனர். நாதகவின் அனுஷாவுக்கு 4 சதவீத வாக்குகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இந்த தொகுதியில் தவெக புஸ்ஸி ஆனந்த் 2 சதவீத வாக்குகள் பின் தங்கி உள்ளார்.

ஆதவ் அர்ஜூனா- வில்லிவாக்கம்

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா போட்டியிட்டுள்ளார். திமுக வேட்பாளராக கார்த்திக் மோகன், அதிமுகவின் விஜயகுமார், நாதகவின் ரோஷினி களத்தில் உள்ளனர்.

இந்த தொகுதியில் திமுகவின் கார்த்திக் மோகன் 36%. தவெகவின் ஆதவ் அர்ஜூனா 32%, அதிமுகவின் விஜயகுமாr 26%, நாதக:வின் ரோஷினி 5% வாக்குகளைப் பெறக் கூடும்.

வில்லிவாக்கம் தொகுதியில் தவெகவின் ஆதவ் அர்ஜூனா 4 சதவீத வாக்குகளில் பின் தங்கி உள்ளார்.

செங்கோட்டையன்- கோபிசெட்டிபாளையம்

தவெகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் செங்கோட்டையன். அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்.

கோபிசெட்டிபாளையத்தில் தொடர்ந்து அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்று வந்த செங்கோட்டையன் இம்முறை தவெக வேட்பாளராக களம் கண்டுள்ளார். இந்த தொகுதியில் திமுகவின் என்.நல்லசிவம், அதிமுகவின் விபி பிரபு, நாதகவின் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

இந்த தொகுதியில் செங்கோட்டையன் 33 சதவீத வாக்குகளைப் பெறுகிறார்.

திமுகவின் நல்லசிவம் 32 சதவீத வாக்குகளையும் அதிமுகவின் விபி பிரபு 29% வாக்குகளையும் நாதக சீதாலட்சுமி 6% வாக்குகளையும் பெறுகின்றனர்.

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெகவின் மூத்த தலைவரான கே.ஏ.செங்கோட்டையன் 1 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

அருண்ராஜ்- திருச்செங்கோடு

தவெகவின் மற்றொரு முகமான முன்னாள் ஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

இந்த தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன் – திமுக கூட்டணி வேட்பாளராக உதயசூரியன் சின்னத்திலும் அதிமுகவின் சந்திரசேகர், நாதகவின் ரேவதி ஆகியோரும் களம் கண்டுள்ளனர்.

இத்தொகுதியில் தவெக அருண்ராஜ் 31 சதவீத வாக்குகளையும் திமுக கூட்டணியின் ஈஸ்வரன் 30 சதவீத வாக்குகளையும் அதிமுகவின் சந்திரசேகர் 30 சதவீத வாக்குகளையும் நாதகவின் ரேவதி 8 சதவீத வாக்குகளையும் பெறுகின்றனர்.

திருச்செங்கோடு தொகுதியில் தவெக அருண்ராஜ் 1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share