வாரி இறைக்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய்.. ‘நேர்மையாக’ கடமையாற்றிய ‘வாக்காளர்கள்’… வரலாறு காணாத வாக்குப் பதிவின் பின்னணி என்ன?

Published On:

| By Mathi

Karur Assembly New

தமிழக சட்டசபை தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் 85.15% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

இதில் மிக அதிகபட்சமாக, ”கரூர் மாவட்டத்தில்” 92.63% வாக்குகள் பதிவாகி உள்ளன.

ADVERTISEMENT

கரூர் மாவட்டத்தில் சட்டசபை தொகுதி வாரியாக,

  • அரவக்குறிச்சி- 91.75%
  • கரூர் – 93.40%
  • கிருஷ்ணராயபுரம்- 92.45%
  • குளித்தலை- 92.79% வாக்குகள் பதிவாகி உள்ளன.

இதற்கு அடுத்ததாக சேலம் மாவட்டத்தில் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் சட்டசபை தொகுதி வாரியாக

  • ஆத்தூர் 90.24%
  • எடப்பாடி 92.09%
  • ஓமலூர் 90.90%
  • சேலம் தெற்கு 91.01%
  • சங்ககிரி 92.53%
  • வீரபாண்டி 93.40%
  • ஏற்காடு 92.03% வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த தேர்தலில் ஆளும் திமுக, அதிமுக கூட்டணி, தவெக ஆகிய அனைத்தும் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் கொடுத்தது வெளிப்படையான உண்மை. இந்த கட்சிகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து பெருந்தொகையான பணம் அதிகாரப்பூர்வமாகவே பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையமே அறிவித்திருக்கிறது.

ADVERTISEMENT

இதில் மிக அதிகமாக வாக்குகள் பதிவாகி இருக்கும் கரூர் சட்டசபை தொகுதியில் (93.40%) எப்படி எல்லாம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்பதை நமது மின்னம்பலத்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்தோம்.

கரூரில் அதிமுகவின் எம்.ஆர். விஜயபாஸ்கரன் போட்டியிட்டார்; திமுக வேட்பாளராக செந்தில் பாலாஜியின் உறவினர் ஆசி தியாகராஜன் களம் கண்டார்.

அதிமுக தரப்பில் ஓட்டுக்கு ரூ3,000 முதலில் கொடுக்கப்பட்டது. திமுக தரப்பில் ஓட்டுக்கு ரூ6,000 என டபுள் மடங்கு கொடுக்கப்பட்டது.

இதனால் அதிமுக தரப்பு கூடுதலாக 4 கிராம் வெள்ளி காசு கொடுத்தது; 1 கிராம் வெள்ளியின் மதிப்பு ரூ 275.
4 கிராம் வெள்ளியின் மதிப்பு ரூ1,100.

இதற்கு போட்டியாக திமுக அரை கிராம் தங்க காசு தந்தது. 1 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ14,250. அரை கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ7,125

இதனடிப்படையில் கரூர் சட்டசபை தொகுதியில் சுமார்
2 லட்சம் வாக்காளர்களுக்கு

  • அதிமுக ரூ.82 கோடி பணம் மற்றும் வெள்ளி காசு கொடுத்தது.
  • திமுக ரூ274.5 கோடி பணம் மற்றும் தங்க காசு கொடுத்தது.

கரூரில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே சேர்த்து மொத்தம் ரூ356.5 கோடி பணம் மற்றும் தங்கம்-வெள்ளி காசுகள் கொடுத்துள்ளன.

இது தவிர கரூரில் திமுக தரப்பில் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்ய அழைத்துவரப்படும் ஒரு நபருக்கு தலா ரூ500 வழங்கப்பட்டது. ஒரு கிளைச் செயலாளர் அதிகபட்சமாக எத்தனை நபரை வேண்டுமானாலும் அழைத்து வந்து ஓட்டு கேட்க வைக்கலாம் எனவும் கூறப்பட்டது. இதனால் கரூரில் வாக்கு சேகரித்த போது ஒரு சில நாட்களில் தொகுதி முழுவதும் 20,000 பேர் ஓட்டு கேட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளது. இதேபோல அதிமுக தரப்பிலும் ஓட்டு கேட்டு வருகிறவர்கள் உட்பட பல்வேறு வகைகளில் செலவழிக்கப்பட்டது. இந்த வகையில் கண்ணுக்குத் தெரியாமலேயே பல கோடி ரூபாய் பணம் பட்டுவாடா ஆகி இருக்கிறது.

இப்படி பெருந்தொகையான பணம், தங்கம்-வெள்ளி காசுகள் வாக்காளர்களுக்கு வாரி வழங்கப்பட்டதால் வாக்காளர்கள் ‘வாங்கிய பணத்துக்கு’ ”நேர்மையாக”வந்து வாக்கு செலுத்திவிட்டுப் போயிருக்கின்றனர். வாக்காளர்களின் இந்த “நேர்மை”யால்தான் கரூர் சட்டசபை தொகுதியில் தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான அளவு வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

பொதுவாகவே இந்த தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்ய தொடங்கும் போதே ஒரு ஓட்டுக்கு ரூ500 என ஒரு தொகுதிக்கு ரூ10 கோடி கட்சிப் பணத்தை கொடுக்க அதிமுக முடிவு செய்திருந்தது. அதன்படியே பணத்தை பட்டுவாடா செய்திருந்தது. கட்சித் தலைமை கொடுத்த பணம் போக, தங்களது சக்திக்கு ஏற்ப ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுக வேட்பாளர்கள் கூடுதலாக ரூ500 முதல் ரூ1,500 வரை சேர்த்து ஒரு ஓட்டுக்கு ரூ1,000 முதல் ரூ 2,000 வரை வாக்காளர்களுக்கு கொடுத்தனர். திண்டுக்கல் சீனிவாசன் போன்ற ஒரு சில சீனியர் அதிமுக தலைவர்கள் ஒரு ஓட்டுக்கு அதிகபட்சமாக ரூ3,000 கொடுத்திருக்கின்றனர்.

திமுகவைப் பொறுத்தவரை சராசரியாக ஒவ்வொரு
தொகுதியிலும் ஒரு ஓட்டுக்கு ரூ1000 கட்சிப் பணத்தை கொடுத்துள்ளது. வேட்பாளர்கள் தங்களது வசதிக்கேற்ப அதைவிட கூடுதலாக ரூ1,500; ரூ 2,000 எனவும் கொடுத்துள்ளனர்.

அத்துடன் கொலுசு, வேட்டி-சேலை போன்றவற்றையும் திமுக, அதிமுக வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு கொடுத்துள்ளனர்.

திமுக, அதிமுகதான் என்பது இல்லை.. இந்த கட்சிகளின் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளிலும் கணிசமான அளவு பணம், வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டது.

பொதுவாக ஓட்டுக்கு பணம் கொடுக்காத அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமக இந்த முறை தருமபுரி மற்றும் பென்னாகரத்தில் வாக்காளர்களுக்கு தலா ரூ1,000 கொடுத்தது.

பாஜக போட்டியிட்ட 27 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு மேல் குறைந்தபட்சம் ஒரு ஓட்டுக்கு ரூ500 தொடங்கி ரூ1,000; ரூ.2,000 கொடுக்கப்பட்டது.

அத்துடன் திமுக- அதிமுக கூட்டணிகளுக்கு மாற்று என களத்துக்கு வந்த புதிய வரவான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களும் தங்களது சக்திக்கு ஏற்ப வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர். கோபிச்செட்டிபாளையம், திருநெல்வேலி, திருச்செங்கோடு, லால்குடி உள்ளிட்ட தொகுதியில் தவெக தரப்பில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது.

இந்த தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சி மட்டுமே வாக்காளர்களுக்கு பணம் தரவில்லை.

மேலும் கடந்த காலங்களைப் போல இல்லாமல் இந்த முறை வேட்பாளர்களிடம் இருந்து வாக்காளர்களுக்காக கட்சி நிர்வாகிகள் வாங்கிய பணம் கணிசமான அளவு ’முறையாக’ வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இப்படி பணத்தை வாரி வாரி கொடுத்தததால் வாக்காளர்கள் வாங்கிய பணத்துக்கு ‘நேர்மையாக’ வாக்களித்துவிட்டு வந்துவிட்டனர். ஆனால் யாருக்கு வாக்களித்தனர் என்கிற கிளைமாக்ஸ் மட்டும் மே 4-ந் தேதி தெரியப் போகிறது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share