வருமான வரித்துறை சோதனை குறித்த ஆதாரங்களை வெளியிட்ட செல்வப்பெருந்தகை

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை வீட்டில் கடந்த 20ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியான நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக ராகுல் காந்தி தமிழகம் வந்தபோது இந்த சோதனை நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செல்வப் பெருந்தகை தனது எக்ஸ் பதிவில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதில், “சீருடை இல்லாமல் வருமான வரித்துறையினர் எனத் தெரிவித்து, இந்தி பேசும் நபர்கள் தன் வீட்டில் சோதனை நடத்தியதாகவும், ராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் பங்கேற்க முடியாத வகையில் தடுக்கப்பட்டதாகவும்” குற்றம் சாட்டியிருந்தார்.

ADVERTISEMENT

ஆனால், செல்வப் பெருந்தகை கூறியது போல் அவரது வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 20ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு அருகிலான தேதிகளிலோ செல்வப் பெருந்தகைக்கு எதிராக வருமான வரித்துறை சோதனை, ஆய்வு அல்லது அமலாக்கத் துறை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லம் உட்பட எந்த இடமும் வருமான வரித்துறை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் வருமான வரித்துறை தெரிவித்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை தொடர்பான ஆதாரங்களை இன்று வெளியிட்டு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசினார். “தேர்தல் நேரத்தில் ஏன் இப்படி அச்சுறுத்த வேண்டும்? சோதனை காரணமாக ராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் பங்கேற்க முடியவில்லை. வாசலில் உள்ள சிசிடிவியை மட்டும் அணைக்காமல் விட்டதால் இந்த ஆதாரம் கிடைத்தது. சோதனைக்கு வந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

மேலும், “காஞ்சிபுரம் மாவட்ட திமுக பிரமுகர் படப்பை மனோகரன் வீட்டில் நான் இருந்தபோது இந்த சோதனை நடந்தது. சோதனை என்ற பெயரில் மனோகரனின் வீட்டுக்கு வந்த அதிகாரிகள், சிசிடிவியை அணைக்கச் சொன்னார்கள். வீட்டுக்குள் நுழைந்ததும் ‘பணம் எங்கே?’ என்று மிரட்டினார்கள்” என குற்றம் சாட்டினார்.

ADVERTISEMENT

மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை என்று மறுப்பு தெரிவிக்கின்றனர். “சோதனை நடத்துவது தவறில்லை. ஆனால் உண்மையை மறைப்பது ஏன்? வருமான வரித்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று செல்வப் பெருந்தகை வலியுறுத்தினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share