ருதுராஜ் மிஸ்ஸிங்…. சுப்மன் கில் ஃபார்ம்-அவுட்: தேர்வுக் குழுவை விளாசிய ஸ்ரீகாந்த்

Published On:

| By Selvam

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில், வரும் ஜூன் 2 துவங்கி ஜூன் 29 வரை நடைபெறவுள்ள 2024 டி20 உலகக்கோப்பைக்காக, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது.

ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியில், யசஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

மேலும், சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகிய 4 வீரர்கள் ரிசர்வ் வீரர்களாகவும் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த அணியில், கடந்த சில மாதங்களாக சிறப்பாக செயல்பட்டுவரும் கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், ருதுராஜ் கெய்க்வாத், டி நடராஜன் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெறாதது, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில், ருதுராஜ் கெய்க்வாத் அணியில் சேர்க்கப்படாதது குறித்தும், சுப்மன் கில் அணியில் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ளது குறித்தும், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள ஸ்ரீகாந்த், “கண்டிப்பாக டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாத் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 17 சர்வதேச டி20 இன்னிங்ஸ்களில் 500-க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு சதத்தையும் விளாசியுள்ளார்”, என தெரிவித்துள்ளார்.

மேலும், பேக்-அப் வீரராக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டது குறித்து, “சுப்மன் கில் முற்றிலும் ஃபார்ம்-அவுட் ஆகியுள்ளார். ஆனால், அவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கினார்கள் என தெரியவில்லை. சுப்மன் கில் என்றாலே தேர்வுக்குழுவுக்கு மகிழ்ச்சி. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்திலும் அவர் சொதப்பினாலும், தேர்வுக்குழு அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கும். இந்த அணி தேர்வு முற்றிலும் பாரபட்சமானது”, எனவும் ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடிவரும் ருதுராஜ் கெய்க்வாத், 10 இன்னிங்ஸ்களில் 1 சதம், 4 அரைசதங்கள் என மொத்தம் 509 ரன்களை சேர்த்து, தற்போது ஆரஞ்சு கேப்பை தன்வசம் வைத்துள்ளார். இந்த 2024 ஐபிஎல் தொடரில் அவரது சராசரி 63.63 ஆக உள்ளது.

அதேபோல, சர்வதேச டி20 போட்டிகளில், இதுவரை 17 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள ருதுராஜ் கெய்க்வாத், 500 ரன்களை சேர்த்துள்ளார். அதில் 1 சதம், 3 அரைசதங்கள் அடக்கம். அவரது சராசரி 35.71, ஸ்ட்ரைக் ரேட் 140.05 ஆக உள்ளது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திருவிழா தகராறு… தீவட்டிப்பட்டியில் நடந்தது என்ன? எஸ்.பி விளக்கம்!

மேற்கு வங்கம்: களத்தை மாற்றிய இடதுசாரிகள்…மம்தாவிற்கு கிடைத்த நம்பிக்கை…பாஜக இந்த முறை வெல்ல முடியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share