காதல், திருமணம் அல்லது நீண்டகால உறவு என எந்த உறவாக இருந்தாலும் கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் தவிர்க்க முடியாதவை. பலர், “நல்ல உறவில் சண்டையே வராது” என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.
எல்லா சண்டைகளும் உறவை உடைக்காது
உளவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, உறவை பலவீனப்படுத்துவது சண்டை அல்ல; சண்டைக்குப் பிறகு இருவரும் எப்படி மீண்டும் இணைகிறார்கள் என்பதுதான் முக்கியம். கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிறகும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு உறவை மீண்டும் கட்டியெழுப்பும் தம்பதிகள்தான் நீண்ட காலம் ஆரோக்கியமான உறவை உருவாக்குகிறார்கள்.
கோபத்தில் இருக்கும் நேரத்தில் பேசுவது ஏன் தவறு?’
சண்டை முடிந்த உடனேயே எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்று பலர் முயற்சிப்பார்கள். ஆனால் அதுவே பல நேரங்களில் மற்றொரு வாக்குவாதத்திற்கு வழிவகுக்கிறது.
கோபமாக இருக்கும்போது நமது மூளை முழுமையாக அமைதியாகச் செயல்படாது. உணர்ச்சிகளே முடிவுகளை நிர்ணயிக்கும். அதனால் அந்த நேரத்தில் பேசப்படும் வார்த்தைகள் தேவையற்ற காயங்களை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, முதலில் இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருக்க வேண்டும். ஆழமாக மூச்சை இழுத்து விடுவது, சிறிது தூரம் நடப்பது அல்லது மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது உதவியாக இருக்கும். உணர்ச்சிகள் சற்று தணிந்த பிறகே உரையாடலைத் தொடங்குவது நல்லது.
மன்னிப்பு கேட்பது மட்டுமே போதுமா?
“சரி… மன்னிச்சிடு” என்று சொல்வது மட்டும் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடாது. உண்மையான மன்னிப்பில் பொறுப்பேற்பும் இருக்க வேண்டும்.
உதாரணமாக, “நான் சத்தமாகப் பேசியது தவறு. அதனால் உனக்குக் காயம் ஏற்பட்டிருக்கும் என்பதை இப்போது புரிந்துகொள்கிறேன்” என்று கூறுவது, வெறும் “நீ வருத்தப்பட்டதற்கு மன்னிக்கவும்” என்று சொல்வதைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதேபோல், எதிரில் இருப்பவர் பேசும்போது உடனே பதில் சொல்லத் தயாராகாமல், அவர் என்ன உணர்ந்தார் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதும் முக்கியம். சில நேரங்களில், ஒருவர் சொல்வதைக் கவனமாகக் கேட்பதே மற்றவருக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமையும்.
‘நீ தவறு’ என்பதிலிருந்து ‘நமக்குள் என்ன நடந்தது?’ என்பதற்கு மாறுங்கள்
சண்டைக்குப் பிறகு பல தம்பதிகள் செய்யும் மிகப்பெரிய தவறு, யார் சரி, யார் தவறு என்பதிலேயே கவனம் செலுத்துவதுதான்.
ஆனால், ஆரோக்கியமான உறவில் முக்கியமான கேள்வி, “நம்மில் யார் ஜெயித்தார்கள்?” என்பதல்ல; “இந்தச் சூழ்நிலை ஏன் உருவானது? இனி இது மீண்டும் நடக்காமல் எப்படிப் பார்த்துக்கொள்வது?” என்பதுதான்.
ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்ப்பதற்குப் பதிலாக, பிரச்சினையை இருவரும் சேர்ந்து சமாளிக்க வேண்டிய ஒன்றாகப் பார்க்கும்போது, உறவில் நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் அதிகரிக்கும். இதுவே நீடித்த உறவுகளின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
எப்போது நிபுணரின் உதவி தேவைப்படும்?
அவ்வப்போது சண்டை வருவது இயல்பானது. ஆனால், ஒவ்வொரு கருத்து வேறுபாட்டின்போதும் பல நாட்கள் பேசாமல் இருப்பது, தொடர்ந்து அவமதிப்பது அல்லது ஒருவரும் சமரசத்திற்கு முன்வராமல் இருப்பது போன்ற நிலை தொடர்ந்தால், அது உறவின் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.
அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் உறவு ஆலோசகர் அல்லது மனநல நிபுணரின் உதவியை நாடுவது நல்ல முடிவாக இருக்கும். மூன்றாவது நபரின் வழிகாட்டுதல், இருவரும் தங்கள் உணர்வுகளைப் பாதுகாப்பாகப் பகிர்ந்துகொள்ள உதவும்.
சண்டைக்குப் பிறகான இணைப்புதான் உறவின் உண்மையான பலம்
எந்த உறவிலும் கருத்து வேறுபாடு வரலாம். ஆனால், ஒவ்வொரு சண்டைக்குப் பிறகும் மீண்டும் ஒருவரை ஒருவர் அணுகும் மனப்பான்மைதான் அந்த உறவின் வலிமையை நிர்ணயிக்கிறது.
சிறிது பொறுமை, உண்மையான மன்னிப்பு, குற்றம் சுமத்தாத உரையாடல் மற்றும் புரிந்துகொள்ளும் மனநிலை ஆகியவை இருந்தால், சண்டைகள் உறவை உடைக்காது. மாறாக, ஒருவரை ஒருவர் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பாகவே மாறும்.
