தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல! – காங்கிரஸை விளாசிய டி.ஆர்.பாலு

By Pandeeswari Gurusamy

|

Published on 6 May 2026, 6:43 PM

காங்கிரஸ் கட்சி திமுகழகம் தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு பச்சைத் துரோகம் செய்திருப்பதாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு காட்டமான விமர்சித்துள்ளர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்க மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற சூழல் உள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து திமுக பொருளார் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,” அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியாகி இருக்கும் அறிக்கை, சில காலம் மறைந்திருந்த அவர்களின் குணத்தை வெளிக்காட்டியிருக்கிறது. எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்டான சூழலும் நெருக்கடியும் உண்டானதோ, அப்போதெல்லாம் உற்றத் தோழமையாக உடனிருந்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதற்காக நாங்கள் கொடுத்த விலை அதிகம். ஆனால் அவற்றை இன்முகத்தோடு ஏற்றோம்.

குறிப்பாக, அன்னை சோனியா காந்தி அவர்கள், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் சிறந்ததொரு நட்புணர்வையும், தனிப்பட்ட முறையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுடன் பாசப்பிணைப்பையுமே காட்டி வந்தோம். அவரும், “நான் சகோதரர் என்று அழைக்கும் ஒரே அரசியல் தலைவர் ஸ்டாலின்தான்” என்றெல்லாம் சொல்லி வந்தார்.

ADVERTISEMENT

இன்று அவை முறிந்துவிட்டதாக காங்கிரஸ் கூறி இருப்பதை செய்திகளில் பார்த்தபோது ஏனோ திகைப்பு ஏற்படவில்லை.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று, தேர்தலைச் சந்தித்து, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற 5 சட்டமன்ற உறுப்பினர்களைப் பணயம் வைத்து கயமையுடன் மாற்று அணிக்கு சென்றுள்ளார்கள். ஏதோ பெரிய அரசியல் ராஜதந்திர முடிவை எடுத்தது போலவும் அதற்கு கொள்கை முலாம் பூசி நியாயப்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி போடும் முயற்சி பல்லிளிக்கிறது. திமுகழகம் தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த பச்சைத் துரோகம்.

ADVERTISEMENT

குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செய்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சி யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கட்டும். அது அவர்களது விருப்புரிமை. ஆனால் யாருக்கு ஆதரவளித்தாலும், வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருப்பதே அரசியல் அறமாக இருக்கும்.

திரு ராகுல்காந்தி அவர்களை பிரதமர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சியே தயங்கிய நேரத்தில் 2019 தேர்தலில் சென்னையில் அவரை பிரதமர் வேட்பாளராக கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்மொழிந்த நினைவுகள் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகின்றன. இரண்டு தேர்தல்களில் திரு ராகுல்காந்தி அவர்களை முன்னிறுத்தி, அபார வெற்றியை ஈட்டித்தந்து நாட்டிலேயே அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியது திமுக கூட்டணி. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கொள்கை ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் தோளோடு தோள் நின்ற இயக்கம் திமுகழகம்.

தோல்வி எங்களுக்கு புதிதல்ல!

துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல!

ஆனால், அவை நிரந்தரம் அல்ல என்பதும் எங்களுக்கு தெரியும்!

காலம் பதில் சொல்லும்!” என தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel