இதய ஆரோக்கியத்தை (Heart Health) மேம்படுத்தும் 5 காலை உணவுகளின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.
இதயம் என்பது நமது உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாக உள்ளது. ரத்தத்தை உடல் முழுவதும் பம்ப் செய்து சீராக அனுப்புவதே இதயத்தின் பணிகள். ரத்தக் குழாயில் சிறு அடைப்பு ஏற்பட்டால் கூட அது இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இதய பாதிப்பு மற்ற பிரச்சனைகளை விட அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். திடீர் மாரடைப்புகளை (heart attack) ஏற்படுத்தி உயிரிழப்புக்கு கூட வழிவகுக்கும்.
ஆகவே, இதயத்தை ஆரோக்கியமாக பராமரிப்பது மிகவும் அவசியமானதாகும். இதய ஆரோக்கியம் (Heart Health), நல்ல வாழ்க்கை முறைக்கு உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை மிகவும் அவசியம். குறிப்பாக, நாம் ஒவ்வொரு காலையும் உண்ணும் உணவு, உடலுக்கு மட்டுமல்ல, இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானது. இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் 5 உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பாதாம், வால்நட்ஸ்
பாதாம், வால்நட் இரண்டிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ (Vitamin E) மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை இதயத்திற்கு மிகவும் நன்மை அளிக்கின்றன. காலையில் 4 முதல் 5 பாதாம் அல்லது 2 முதல் 3 வால்நட் சாப்பிடுவது உடல் நலத்திற்கும் இதய ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது.
ஓட்ஸ்
ஓட்ஸில் பீட்டா குளுக்கான் எனப்படும் ஒருவகை நார்ச்சத்து உள்ளது. இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. காலையில் சூடான பால் அல்லது தண்ணீரில் சமைத்த ஓட்ஸை (Benefits of Oats) சாப்பிடுவது நல்ல பலன்களைத் தரும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் உலர் பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம். ஓட்ஸ் உடல் எடை குறைப்புக்கும் மிகுந்த உதவி புரிகிறது.
அவகேடோ
அவகேடோ பழத்தில் ஒற்றை நிறைவுறா கொழுப்புகள் (Unsaturated fats) நிறைந்துள்ளன. இவை இதயத்திற்கு நன்மை தரும் கொழுப்புகள் ஆகும். இதில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இதை ஸ்மூத்தியாகவோ அல்லது சாலட்டில் கலந்தோ அருந்தலாம். அவகேடோ தொடர்ந்து சாப்பிட நல்ல பலன்கள் கிடைப்பதைக் காணலாம்.
முளைகட்டிய தானியங்கள்
முளைக்கட்டிய தானியங்களில் உள்ள புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் (magnesium) மற்றும் பொட்டாசியம் ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். முளைக்கட்டிய தானியங்களை தேன் மற்றும் எலுமிச்சை சாறுடன் சேர்த்து சாப்பிடுவது நல்ல பலன்களைத் தரும். அவற்றை சாலடுகளாகவும் சாப்பிடலாம்.
பெர்ரி
பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபீனால்கள் நிறைந்துள்ளன. அவை இதய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை (blood circulation) மேம்படுத்துகின்றன. எனவே, இவற்றை தோசை, ஓட்ஸ் மற்றும் தயிருடன் சேர்த்து உண்ணலாம். தினமும் காலையில் இவற்றை உண்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
