இப்படி ஒரு பிரியாணி காதலனா! ஸ்விக்கி வெளியிட்ட சூடான தகவல்!

Published On:

| By Jegadeesh

சென்னையை சேர்ந்த ஒருவர் ஒரே நேரத்தில் ஸ்விக்கி நிறுவனத்தில் 31 ஆயிரத்து 532 ரூபாய்க்கு பிரியாணி ஆர்டர் செய்து அதன் மீதான தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச பிரியாணி தினம் நாளை (ஜூலை 2) கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் எத்தனையோ வகையான உணவுகள் உள்ளன. அதில் பிரியாணிக்கென்று தனி இடம் உண்டு.

சிக்கன் பிரியாணி, காடை பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, முட்டை பிரியாணி, மீன் பிரியாணி என்று ஏராளமான பிரியாணி வகைகள் உண்டு.

இன்று அதிகரித்து காணப்படும் ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களால் பிரியாணியை ஆர்டர் செய்து ஒருபிடி பிடிப்பதையும் கண்கூடாக பார்க்கமுடிகிறது.

இந்நிலையில், கடந்த 12 மாதங்களில் 7.6 கோடி பிரியாணி ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளதாக ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

ஆன்லைன் உணவு விநியோக தளமான ஸ்விக்கி, இந்தியர்கள் தங்கள் தளத்தில் பிரியாணியை ஆர்டர் செய்தது தொடர்பாக ஜனவரி 2023 முதல் ஜூன் 15, 2023 வரை கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

இது தொடர்பான புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம்,

”கடந்த ஐந்தரை மாதங்களில் பிரியாணி ஆர்டர்களில் 8.26 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும்,

2022 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் பிரியாணி ஆர்டர்கள் மேலும் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ஸ்விக்கி நிறுவனம் 7.2 மில்லியன் ஆர்டர்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

பெங்களூரு வாடிக்கையாளர்கள் 5 மில்லியன் ஆர்டர்களை செய்து 2 வது இடத்திலும், அதற்கு அடுத்தபடியாக சென்னை வாடிக்கையாளர்கள் 3 மில்லியனுக்கும் அதிகமான ஆர்டர்கள் செய்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

சுமார் 85 வகை பிரியாணி வகைகளுடன், 35 மில்லியன் ஆர்டர்களுடன் ஐதராபாத் பிரியாணி சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஒரு பிரியாணி பிரியர், ஒரே நேரத்தில் ஸ்விக்கி நிறுவனத்தில் 31 ஆயிரத்து 532 ரூபாய்க்கு பிரியாணி ஆர்டர் செய்து பிரியாணியின் மீதான தனது காதலை காட்டியுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

”குடும்பத்தை பற்றி பேசினால் பொறுத்து கொள்ள மாட்டேன்”-ஜெய்ஸ்வால் ஆவேசம்!

ராகுல்காந்திக்கு மணிப்பூர் பாஜக தலைவர் பாராட்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share