2-வது நாளாக பங்கு சந்தையில் ‘ரத்த ஆறு’… இன்றும் பல லட்சம் கோடி ரூபாய் ‘அம்போ’?

Published On:

| By Mathi

Share Market-Mumbai

இந்திய பங்குச் சந்தையில் நேற்றைய கடும் சரிவைத் தொடர்ந்து இன்று (செப்டம்பர் 29) 2-வது நாளாகவும் சரிவு தொடருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்திய பங்குச் சந்தையில் நேற்று மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1,124 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 360 புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து 22,800 புள்ளிகளுக்குக் கீழே முடிவடைந்தது. இதனால் ஒரே நாளில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பில் சுமார் ரூ.8 லட்சம் கோடி கரைந்தது.

ADVERTISEMENT

நேற்றைய அதிர்ச்சியிலிருந்து முதலீட்டாளர்கள் மீள்வதற்குள் இன்று காலை வர்த்தகத்திலும் சந்தை மீண்டும் சரிவைச் சந்தித்தது. குறிப்பாக முன்னணி நிறுவனங்களின் பங்குகளில் ஏற்பட்ட விற்பனை சரிவு சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியை கீழே இழுத்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பது இந்திய பங்குச் சந்தைக்கு முக்கிய நெருக்கடியாக மாறியுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அதேபோல அமெரிக்க அரசுப் பத்திரங்களின் வருவாய் உயர்வு, வட்டி விகிதம் தொடர்பான அச்சம், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனை ஆகியவையும் இந்திய சந்தையைப் பாதித்து வருகின்றன. நேற்றைய கடும் வீழ்ச்சிக்கு இந்தக் காரணங்கள் முக்கியமானதாக சந்தை வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பங்குச் சந்தையில் ஏற்படும் சரிவின்போது முதலீட்டாளர்களின் இழப்பு என்பது நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து வெளியேறும் பணம் அல்ல. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு குறைவதையே முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு இழப்பு என்று குறிப்பிடுகின்றனர்.

ADVERTISEMENT

நேற்று மட்டும் இந்த சந்தை மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் கோடி குறைந்த நிலையில், இன்று 2-வது நாளாக சந்தை சரிவில் இருப்பதால் மேலும் பல லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கரையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share