பிரச்சாரம் ஓய்ந்தது… ஸ்டாலின் முதல் விஜய் வரை… களைகட்டிய தேர்தல் களம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 

இதை முன்னிட்டு கடந்த இரண்டு மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இன்று கடைசி நாள்  என்பதால் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் களை கட்டியது. 

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வில்லிவாக்கம் மற்றும் கொளத்தூர் தொகுதியில் ரோடு ஷோ சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதுபோன்று சைதாப்பேட்டை தொகுதியில் ஆட்டோவில் பயணித்தும் கரும்பு ஜூஸ் குடித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ADVERTISEMENT

தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவனை ஆதரித்து கனிமொழி எம்பி இறுதி கட்ட பிரச்சாரம் செய்தார். 

தனது சொந்த தொகுதியான திருவல்லிக்கேணி சேப்பாக்கத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ‘நாங்கள் மக்களுடன் இருக்கிறோம்..

ADVERTISEMENT

மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள்’ என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

தனது சொந்த மாவட்டமான சேலத்தில் பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை ஊழல் மன்னன் என்று கடுமையாக விமர்சித்ததுடன், திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கிறது என எம்ஜிஆரின் பாடலை பாடி  மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் சாத்தூர் தொகுதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பாஜகவுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது, ‘விஜய் மக்களுக்கு சேவை செய்வார் என்பது நிரூபிக்கப்படாத ஒன்று’ என தெரிவித்தார்

தனது மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடும் தர்மபுரி தொகுதியில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இறுதி கட்ட பரப்புரையை மேற்கொண்டார். கணவன் மனைவி இருவரும் ரோடு ஷோ சென்று மாம்பழம் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டனர். 

சென்னை நந்தனம் பகுதியில் நடந்த தவெக இறுதி கட்ட பிரச்சாரத்தில் அனல் பறக்க பேசிய விஜய், பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என அனைவரையும் கடுமையாக விமர்சித்தார். 

சென்னை வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை ஆகியவற்றை வைத்து எதிர்க்கட்சிகளை பாஜக மிரட்டுகிறது ‘ என்றார். 

தனது சொந்த தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் பிரச்சாரம் செய்த தமிழக வெற்றி கழக மூத்த நிர்வாகி செங்கோட்டையன், ‘ஜெயலலிதாவின் புகைப்படத்தை தனது பாக்கெட்டில் தொடர்ந்து வைத்துக் கொள்ள விஜய் அனுமதித்தார்’ என்று கண்கலங்கி பேசினார்.

விருதாச்சலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அங்குள்ள தேநீர் கடைக்கு சென்று, மக்களுடன் அமர்ந்து டீ குடித்தவாறு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். 

சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அபுதமமுக பொதுச் செயலாளர் சசிகலா, ‘பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும். அதற்கான திட்டங்கள் எல்லாம் நமது தேர்தல் அறிக்கையில் இருக்கிறது’ என்று கூறி பெண்களிடையே ஆதரவு திரட்டினார்.

தேர்தல் ஆணைய உத்தரவுபடி இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. வெளியாட்கள் தொகுதியில் இருந்து வெளியேறுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share