ADVERTISEMENT

கரூர் விஜய பாஸ்கருக்கு கொலை மிரட்டலா.. அண்ணாமலை , எடப்பாடி குற்றச்சாட்டுகளுக்கு செந்தில் பாலாஜி பதிலடி

Published On:

| By Pandeeswari Gurusamy

Senthil balaji

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியதற்கு இன்று செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

தீவிர தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில், இன்று கோவையில் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:“கோவையில் தொழில்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்துள்ளோம். தொழில்துறையினர் முன்வைத்த கோரிக்கைகள் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நிறைவேற்றப்படும்.கோவை மாவட்டத்தில் ஒரு லட்சம் கோடி அளவில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இதில் 50 ஆயிரம் கோடியில் தொழில்துறைக்கும், 50 ஆயிரம் கோடியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் இலக்கு வைத்து செயல்படுவோம். கோவையில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் உற்சாக வரவேற்பு உள்ளது. பத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார்

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், “தேர்தலை சுமுகமாக நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம். தோல்வி பயத்தில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கக் முயல்கின்றனர். தேர்தலை சுமுகமாக, அமைதியாகத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்” என்று தெரிவித்தார்.

கோவை தெற்கு தொகுதியில் ஐந்தாயிரம் வரை பணம் கொடுப்பதாக அதிமுக குற்றம் சாட்டுவது குறித்த கேள்விக்கு, “நானும் பதிலுக்கு அவர்கள் குறித்து சொன்னால் அரசியல் நாகரீகமாக இருக்காது. அமைதியான மண்ணை கலவர பூமியாக மாற்ற அதிமுகவினர் பார்க்கிறார்கள்” என்றார்.

ADVERTISEMENT

“செந்தில் பாலாஜி தியாகி போல நடிக்கிறார்” என்ற அண்ணாமலையின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, “கோவையில் சொத்து வாங்க எங்கிருந்து பணம் வந்தது? ஆடு மேய்த்து வாங்கினாரா? ஆட்டுக்குட்டி வாங்கி வளர்த்து வியாபாரம் செய்து சம்பாதித்தாரா?” என கேள்வி எழுப்பிய அவர், “உரக்க பேசினால் உண்மையாகிவிடாது” என்றார்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது உயிருக்கு ஆபத்து என்று தெரிவித்தது குறித்த கேள்விக்கு, “நான் கோவையில் இருக்கிறேன். விஜயபாஸ்கர் கரூரில் இருக்கிறார். ஏவுகணை தாக்குதல் ஏதாவது நடந்ததா? போலீஸ் பாதுகாப்பு வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே?” என்றார்.

ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமி “விஷக்கிருமி செந்தில் பாலாஜி” என்று விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு, “எல்லை மீறி எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார். என்மீது தனிப்பட்ட விமர்சனங்களை வைக்கின்றனர். தோல்வி பயத்தில் விரக்தியில் அவர் உளறிக் கொண்டிருக்கிறார்” என்றார்.

மேலும், “நிச்சயமாக கோவை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல, கோவை மாவட்டத்தில் பத்து தொகுதிகளையும் வெற்றி பெறுவோம். கோவை தெற்கு தொகுதியிலும் வெற்றி பெறுவேன்” என்று உறுதியுடன் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share