ADVERTISEMENT

“என் ரத்தமே விஷமானாலும், என் தொண்டர்களே எனக்கு மருந்தாவார்கள்!” – ராமதாஸ் நம்பிக்கை

Published On:

| By Pandeeswari Gurusamy

தர்மபுரியில் சௌமியா வெற்றி பெற்றால், அந்த தர்மபுரி விரைவில் ‘அதர்மபுரி’ என்று பெயர் எடுக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு முற்றிய நிலையில் இரண்டு அணியினரும் தனித்தனியாக இந்த தேர்தலை எதிர்கொள்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட வீடியோவில், “தேர்தலில் போட்டியிடும் அன்புமணி தலைமையிலான அணி, மக்கள் சேவைக்காக அன்றி, அதிகாரம் கிடைத்தால் அதன் மூலம் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. நான் வளர்த்தெடுத்த பிள்ளைகள் இன்று பணத்திற்காக அணி மாறி, கொள்கையற்ற துரோக கூட்டத்தில் இணைந்திருப்பது வருத்தமளிக்கிறது. அன்புமணியின் துரோக கும்பலை நிராகரித்து, உண்மையாக உங்களுக்குச் சேவை செய்யும் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து ராமதாஸ் இன்று (ஏப்ரல் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று நான் வெளியிட்ட வீடியோவைப் பார்த்துப் பலரும் கண்ணீர் வடித்தீர்கள். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் மரண வேதனை எனக்கு மட்டுமே தெரியும். எப்போது அன்புமணி என் பேச்சைக் கேட்காமல், என் கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டுப் பணத்திற்காக அலையத் தொடங்கினாரோ, அன்றே ஒரு தந்தையாக நான் செத்துவிட்டேன்.

ADVERTISEMENT

உங்களுக்காக நான் சிறை சென்றேன், ரத்தம் சிந்தினேன்; ஆனால் அன்புமணி இன்று அந்த ரத்தத்தைச் ‘சமூக நீதி வியாபாரமாக’ மாற்றிவிட்டார்.

ஒவ்வொரு தேர்தல் சீட்டையும் பல கோடிகளுக்கு விற்று, நம் சமுதாயத்தின் உரிமைகளை அன்புமணி அடகு வைத்துவிட்டார். பெற்ற அப்பனையே கவனிக்காத ஒருவன், உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு வேலை வாங்கித் தருவானா? தன் மனைவியையும் மகளையும் அதிகாரத்திற்காகப் பயன்படுத்தும் இவர், சாதாரணப் பாட்டாளிப் பெண்களுக்கு என்ன நன்மையைத் தருவார்? தர்மபுரியில் சௌமியா வெற்றி பெற்றால், அந்த தர்மபுரி விரைவில் ‘அதர்மபுரி’ என்று பெயர் எடுக்கும்.

ADVERTISEMENT

அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், ஸ்டாலின் தன் தந்தை கலைஞர் சாகும் வரை கூடவே இருந்து கவனித்துக் கொண்டார். ஆனால், எனக்கு வாய்த்த பிள்ளையோ, நான் உயிரோடு இருக்கும்போதே என்னைச் செத்துப்போனதாக நினைத்து அரசியல் பண்ணுகிறார். இதைவிட ஒரு தகப்பனுக்குப் பெரிய அவமானம் என்ன இருக்க முடியும்?

மாம்பழம் இனிக்கும் என்று இனி நம்பாதீர்கள். அந்தச் சின்னத்திற்குள் இப்போது துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது. அந்த விஷத்தை முறியடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அன்புமணியின் துரோகக் கும்பலுக்கு ஓட்டுப் போடுவது, உங்கள் பெற்ற தகப்பன் தலையிலேயே நீங்கள் மண்ணள்ளிப் போடுவதற்குச் சமம்.

இந்த ராமதாஸ் தோற்கலாம், ஆனால் துரோகம் ஒருபோதும் ஜெயிக்கக் கூடாது. என் ரத்தமே எனக்கு விஷமானாலும், என் தொண்டர்கள் எனக்கு மருந்தாக இருப்பீர்கள் என நம்புகிறேன். அன்புமணி போட்டியிடும் இந்த 18 தொகுதிகளிலும் அவரது துரோகக் கும்பலை மண்ணைக் கவ்வச் செய்யுங்கள். தர்மம் ஜெயிக்கட்டும்!” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share