ADVERTISEMENT

மக்கள் செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள் – அண்ணாமலை

Published On:

| By Pandeeswari Gurusamy

Annamalai

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (ஏப்ரல் 21) மாலையுடன் நிறைவடைகிறது. கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிவசக்தி காலனி பகுதியில், இன்று காலை பாஜகவினர் இருசக்கர வாகனப் பேரணியுடன் வாக்கு சேகரிப்பைத் தொடங்கினர். இப்பேரணியை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்து, இருசக்கர வாகனத்தை ஓட்டினார். வேட்பாளர் வானதி சீனிவாசன் அவருடன் அமர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் நூற்றுக்கணக்கான பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வானதி சீனிவாசன்,”கடந்த முறையைப் போலவே கோவை மாவட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும். கடந்த இரண்டு நாட்களாகக் கோவையில், கரூரைச் சேர்ந்த ரவுடிக் கும்பல் வாயிலாகக் காவல்துறையை மிரட்டுவது, காவல் நிலையத்திலேயே ரகளை செய்வது, எதிர்க்கட்சியினரைத் தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவையைக் கொள்ளையடிப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலினால் அனுப்பப்பட்ட செந்தில் பாலாஜியின் ஆட்கள், இதனை அரங்கேற்றி வருகிறார்கள்.”

ADVERTISEMENT
ADVERTISEMENT

டாஸ்மாக்கில் கொள்ளையடித்த ஆயிரம் கோடி ரூபாய் பணம் மற்றும் மணல் மாஃபியா மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், கோவையைப் பழிவாங்குவதற்காகவே முதலமைச்சர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அனுப்பி இந்த வித்தைகளைக் காட்டிக் கொண்டிருக்கிறார் என்றும், கோவை மக்கள் ஸ்டாலினுக்கும் திமுகவிற்கும் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேட்டியளித்த அண்ணாமலை: “வானதி சீனிவாசனின் பணிச்சுமை அதிகரிக்கப் போகிறது. தேர்தல் கணிப்புகள் எல்லாம் நமக்குச் சாதகமாக வர ஆரம்பித்துவிட்டன.

ADVERTISEMENT

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி அலையைத் தேர்தல் கணிப்புகள் இன்னும் சரியாகக் கணிக்கவில்லை என்பது என்னுடைய கருத்து. மேலும், மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்தக்கூடிய அரசு அமைய வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் திமுக அராஜக மற்றும் வன்முறை அரசியலைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகவும் அவர் சாடினார். “மக்கள் எப்பொழுதும் வாக்குப்பெட்டியில்தான் பேசுவார்கள்; அதனை ஏப்ரல் 23ஆம் தேதி பேசப் போகிறார்கள்.

செந்தில் பாலாஜி எப்பொழுதுதான் தனது தவறை ஏற்றுக்கொண்டுள்ளார்? நாளை மறுநாள் வரை அவர் ஒரு காந்தியவாதி போலப் பேசுவார், அப்படித்தான் காட்டிக்கொள்வார். ஆனால், 23ஆம் தேதி மக்கள் அவருடைய முகத்திரையைத் கிழிப்பார்கள். அதே சமயம் தேர்தல் ஆணையம் இன்னும் கூடுதல் பணியாளர்களைக் கொண்டு வலுவாகப் பணியாற்ற வேண்டும் என்று வாக்காளர்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்றார்.

ADVERTISEMENT

மேலும் வேட்புமனு தாக்கல் செய்தபோதே வானதி சீனிவாசனின் வெற்றி உறுதியாகிவிட்டது என்றும், கோவை வடக்கு தொகுதியில் 5,000 ரூபாய் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, ஆனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அது இந்தத் தேர்தலைப் பாதிக்காது என்றும் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share