எடப்பாடி பழனி சாமி அடுத்த ஜென்மத்தில் பிறந்தால், கொஞ்சம் முதுகெலும்புடன் குஜராத்தில் பிறக்கட்டும்; தமிழ்நாட்டிற்கு அவர் தேவையில்லை என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று எடப்பாடி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “நான் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு காரணம் இங்கிருக்கும் மக்கள் தான். நீங்கள் கொடுத்த பதவிதான் இது. நான் உங்கள் வீட்டில் ஒருவனாக இருக்கிறேன். மீண்டும் நான் மனித பிறவியாக பிறந்தால், உங்கள் குடும்பத்தில் ஒருவனாகப் பிறக்க வேண்டும்,” எனப் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் வேட்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் கனிமொழி ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கிறார்கள். அதனால் தான் நமது முதல்வர் அந்த சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ‘கருப்பு நாள்’ என்று அறிவித்தார். இந்த மசோதாவை கொண்டு வந்தது மோடி. அது தோல்வியடைந்துவிட்டது என்று புலம்பும் பிரதமர் இதையும் மறந்து பேசிக்கொண்டிருக்கிறார்.
எடப்பாடிக்கு என்ன ஆனது? நீங்கள் தமிழ்நாட்டில் தானே பிறந்தீர்கள்? தமிழனாக இருக்கிறேன் என்று தானே சொல்கிறீர்கள்?
தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடிய நேரத்தில் அதை ஏற்றுக்கொண்டு அதற்கு சாதகமாக பேசிக்கொண்டிருக்கும் ஒருவர், இப்போது தேர்தல் நேரத்தில் அடுத்த ஜென்மத்தில் மனிதராகப் பிறந்தால் தமிழ்நாட்டு மக்களின் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாராம்.
எனக்கு அடுத்த ஜென்மத்தில் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் அவர் பிறந்தால் தயவு செய்து தமிழ்நாட்டில் வேண்டாம். அவருக்கு எங்கு பிடிக்கிறதோ குஜராத்தில் போய் பிறந்து கொள்ளட்டும். அங்கு இருப்பவர்களுக்காகத்தான் இப்போது கைகட்டி நிற்கிறார். ஆகவே அடுத்த முறை பிறந்தால் கொஞ்சம் முதுகெலும்புடன் குஜராத்தில் பிறக்கட்டும்; தமிழ்நாட்டிற்கு தேவையில்லை,” என்று எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார்.
