வேலுமணி மீதான வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன் – நீதிபதி கேள்வி

Published On:

| By Pandeeswari Gurusamy

Velumani

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான வழக்கில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடருவதற்கான அனுமதி நடைமுறையை 2 மாதத்தில் முடித்து தமிழக அரசுக்கு கூறுங்கள் என சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தவில்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக ‘அறப்போர் இயக்கம்’ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட கே.எஸ்.கந்தசாமி, வி.விஜய கார்த்திகேயன் ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் இவ்வளவு தாமதம்?” என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குத் தமிழக அரசு தரப்பில், “அந்த இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் பணியாளர் துறை இணைச் செயலாளர் சுசீல் குமார் பாட்டீல் காணொளி வாயிலாக ஆஜரானார். அவரிடம், “குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்க ஏன் இவ்வளவு காலதாமதம்?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த இணைச் செயலாளர் சுசீல் குமார் பாட்டீல், “வழக்கு தொடர்பான ஆவணங்கள் அதிக அளவில் உள்ளதால் அவற்றை ஆய்வு செய்யக் கால அவகாசம் தேவைப்படுகிறது. தற்போது இந்த ஆவணங்கள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்குப் அனுப்பப்பட்டுள்ளன. ஆணையத்தின் பதில் அடுத்த வாரத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர், இந்த ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். ஏனெனில், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கும் அதிகாரம் பிரதமர் அலுவலகத்திற்கு மட்டுமே உள்ளது. இந்த நடைமுறைகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்; இதற்கு குறைந்தபட்சம் 2 மாத காலம் ஆகும்” என்று விளக்கமளித்தார்.

ADVERTISEMENT

மத்திய அரசின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, “இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கும் நடைமுறை தொடர்பாக 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அதன் விளக்கங்கள் குறித்தும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

மேலும், இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடரும் அனுமதி நடைமுறைகளை விரைந்து முடித்து, அதுகுறித்த முடிவைத் தமிழக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share