தவெக கூட்டணியால் காங்கிரஸ் கட்சிக்குள் கடும் மோதல்கள் உருவாகி உள்ளன.
”பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் கூட்டணி எதற்கு?” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு டிவி சேனல் ஒன்றில் பதிலளித்த காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி, “கூட்டணி பற்றி செல்வப் பெருந்தகை யார்?” என கூறியிருந்தார்.
பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி.க்கு செல்வப்பெருந்தகை தந்த பதிலடி: கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்கிறார் அறிவு ஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர்.
வடமாநிலத்தில் எங்கள் தலைவர் சென்ற பின் அவர் இருந்த மேடையை தண்ணீர் உற்றி கழுவிய அழுக்கேறிய மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே இது. மாண்புமிகு நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் கூட்டணி எதற்கு என்பதே என் கேள்வி? அதற்கு நீண்ட நேரம் முதல்வர் சிரித்துப் பேசினார் என்கிறார் அந்த அறிவு ஜீவி.
உங்களுடன் நீண்ட நேரம் சிரித்து பேசுவதுதான் கூட்டணியில் தொடருவதற்கான ஒப்பந்தமா? சரி முதல்வராவது ஒரே ஒரு முறை ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் போதுமே. பிரச்சினை தீர்ந்ததே.
முதல்வர் கூட சொல்ல வேண்டாம் அந்தக் கட்சியில் உள்ள முன்னனிப் பொறுப்பில் உள்ளோர் யாராவது சொல்லட்டுமே, அது கூட வேண்டாம், நீண்ட நேரம் உங்களிடம் சிரித்துப் பேசிய முதல்வரிடம் நம் அணியின் பிரதமர் வேட்பாளர் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் என்று நீங்கள் அழுத்தமாகச் சொல்லி அதை அவரும் ஏற்றுக்கொண்டு உங்களிடமாவது உத்தரவாதம் தந்தாரா? தந்திருந்தால் அதையாவது சொல்லுங்களேன்.
பிரதமர் மோடி குறித்தோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தோ, பாஜக குறித்தோ சட்டப்பேரவையில் விமர்சித்தால் அது சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து வேகமாக நீக்கப்படுகிறதே அது ஏன் என்று அடுத்த முறை சிரித்துப் பேசும் போது முதல்வரிடம் கேட்டுச் சொல்லுங்கள்.
உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம். பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை; அவர் இயக்கத்திற்காகச் செய்த உழைப்பும் அர்ப்பணிப்புமே அதைத் தீர்மானிக்கும்.
காலம் பலரை முன்னிறுத்தும்; அதே காலம் பலரை மறந்தும் போகும். ஆனால் ஒரு பேரியக்கத்திற்காக நேர்மையாக உழைத்தவர்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்யும்.
காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களைவிடப் பெரியது. பதவிகளைவிட அதன் கொள்கை பெரியது. தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் தான் பிரதமர் வேட்பாளர் என்போர் பக்கம் நின்று கொண்டு என் தலைவர் திரு ராகுல் காந்தி தான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர் என்னை யார் என்று கேட்கிறார்.
உரக்கச் சொல்கிறேன்.. நான் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தொண்டன். சுயமரியாதையுடன் இந்த மண்ணின் மைந்தன், பூர்வகுடி. இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
