இடைத்தேர்தல் 2026: லேசான சலசலப்புடன் நிறைவடைந்த வேட்பு மனு தாக்கல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி, இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது.இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த கோட்டாட்சியர் (RDO) அலுவலகங்களில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தொடர் விடுமுறைக்குப் பிறகு, நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் மதுராந்தகம் ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில் இன்று வேட்புமனுதாக்கல் தாக்கல் நிறைவடைந்துள்ளது.

ADVERTISEMENT

நாளை (செப்டம்பர் 17) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறவுள்ளது. மனுக்களைத் திரும்பப் பெற வரும் 19-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்விரு தொகுதிகளிலும் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தாராபுரம் தொகுதி- போட்டியிடும் வேட்பாளர்கள்

  • தவெக – சத்தியபாமா
  • திமுக – சுகன்யா
  • அதிமுக – பானுமதி
  • நாம் தமிழர் கட்சி – கார்த்திகா
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – லட்சுமணன்

மதுராந்தகம் தொகுதி: போட்டியிடும் வேட்பாளர்கள்

  • தவெக – மரகதம் குமரவேல்
  • திமுக – பரந்தாமன்
  • அதிமுக – கனிதா சம்பத்
  • நாம் தமிழர் கட்சி – ஜானகிராமன்
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – சுகந்தி

இவர்களைத் தவிர ஏராளமான சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் போட்டியிடுகின்றனர்.

ADVERTISEMENT

தவெக அதிமுகவினரிடையே மோதல்

முன்னதாக தாராபுரத்தில் இன்று காலை தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு திரும்பி கொண்டு இருந்தார். அவருடன் தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது எதிரில் அதிமுக வேட்பாளர் பானுமதி, வேட்புமனு தாக்கல் செய்ய அதிமுக நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் செங்கோட்டையன் மற்றும் சத்திய பாமாவை ஆகியோரை பார்த்த அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் அவர்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
துரோகி என்றும், ஒழிக என்றும் அதிமுக தொண்டர்கள் முழக்கம் எழுப்பியதன் காரணமாக பரபரப்பான சூழல் நிலவியது. இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு தரப்பினரையும் தனித்தனியாக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் லேசான சலசலப்பு நிலவியது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share