தமது வீட்டில் சோதனை நடத்த வந்த சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், “டார்கெட் ‘அவர்’தான்’.. ‘அவர்’ பேரை சொல்லுங்கள்.. விட்டுவிடுகிறோம்” என அன்பாக மிரட்டியதாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி. அப்போது, தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வாங்கி தருவதாக ரூ100 கோடி அளவில் மோசடி செய்ததாக பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அவருடைய கூட்டாளியும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 4 இடங்களில் இன்று செப்டம்பர் 16-ந் தேதி சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையில் என்ன நடந்தது?
இந்த சோதனைகளுக்குப் பின்னர் திருச்சி செய்தியாளர்களிடம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: சென்னை சிசிபியிலிருந்து காலை 7.40 மணிக்கு வந்தார்கள். சந்தேகத்தின் அடிப்படையில் 20-க்கும் மேற்பட்ட சென்னை போலீசார் பிற்பகல் 3.40 மணி வரை, கிட்டத்தட்ட 8 மணி நேரத்துக்கும் மேலாக, வீட்டில் ஏதாவது கிடைக்குமா என்ற அடிப்படையில் முழுமையாக சோதனை நடத்தினார்கள். அவர்கள் வந்தவுடன் வீட்டிலிருந்த அனைத்து அறைகளையும் திறந்துவிட்டேன். எல்லா டிராயர்களையும் திறந்து காட்டினேன். வீடு முழுவதையும் அவர்கள் சோதனை செய்தார்கள்.
நான் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது, 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தொடர்பாக வைத்திருந்த ஆவணங்கள் இருந்தன. அந்தக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் தொடர்பான ஆவணங்களும் இருந்தன.
மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆய்வுக்குச் சென்றபோது, அந்தந்த மாவட்டங்களில் துறை சார்ந்து என்னென்ன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்பது தொடர்பான கோப்புகளை மாவட்ட வாரியாகத் தனித்தனியாக வைத்திருந்தேன். பள்ளிக்கல்வித் துறையில் கொண்டுவரப்பட்ட புதிய திட்டங்கள் தொடர்பான கோப்புகளும் இருந்தன. கல்வித் துறை தொடர்பாக நான் வைத்திருந்த அந்தக் கோப்புகளை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

விசாரணைக்கு வர உத்தரவு
வரும் 18ஆம் தேதி நேரில் வந்து, அவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். நிச்சயமாக ஒத்துழைப்பு அளிப்பேன் என்று தெரிவித்துள்ளேன்.
“ஒரு சோதனைக்கு இதுபோன்று யாரும் முழுமையாக ஒத்துழைப்பு அளித்ததில்லை. நீங்கள்தான் முதன்முறையாக இப்படி ஒத்துழைப்பு அளித்திருக்கிறீர்கள்” என்று அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தார்கள். எங்களுக்கு மடியில் கனமில்லை; அதனால் வழியில் பயமில்லை.
பேசியதால் நடவடிக்கை
சட்டமன்றத்தில் எதிர்த்து பேசினால், அடுத்த நிமிடமே வீட்டுக்கு வந்து சோதனை நடத்துகிறீர்கள். சட்டமன்றத்தில் மட்டுமல்ல; மக்கள் மன்றத்தில் நான் என்ன பேசினேன்?
மக்கள் மன்றத்தில் ”அவர் ஹிட்லரைப் போல இருக்கிறார் என்றால், அவருடன் இருக்கும் அமைச்சர்கள் அனைவரும் கோயபல்ஸைப் போல ஆளுக்கொரு பொய்யைக் கூறுவதையே வேலையாக வைத்திருக்கிறார்கள்” என்று நான் பேசினேன்.
நேற்று நான் என்ன பதிவு வெளியிட்டேன்? ரூ.1,600 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்போவதாகக் கூறுகிறீர்கள். அதே நேரத்தில், “கஜானா காலி; கஜானா காலி” என்றும் சொல்கிறீர்கள். முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிய புதிய தலைமைச் செயலகம் தற்போது மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. அந்தக் கட்டிடம் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல், ஆங்காங்கே சில பகுதிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சில கோடி ரூபாய் செலவு செய்து அந்தக் கட்டிடத்தையே மீண்டும் தலைமைச் செயலகமாகப் பயன்படுத்தலாம்.
அப்படியிருக்கும்போது, கஜானா காலியாக இருப்பதாகக் கூறிக்கொண்டே ரூ.1,600 கோடியில் புதிய தலைமைச் செயலகத்தை ஏன் கட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்பினேன்.
அது மட்டுமல்ல. தற்போது திணிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரத்தில், தலைவர் எனக்கு சில வாக்குச்சாவடிகளை ஒதுக்கியுள்ளார். தாராபுரத்துக்குச் சென்றபோது, “இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்று, ஆளுங்கட்சியின் முகத்தில் கரியைப் பூசும் வகையில் இந்த வெற்றி அமைய வேண்டும்” என்று பேசிவிட்டு வந்தேன்.
நாங்கள் இப்படிப் பேசும்போதெல்லாம், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஏதாவது ஒரு சந்தேகத்தைக் கூறி சோதனை நடத்துகிறார்கள். மக்களின் கவனத்தை மடைமாற்றம் செய்யும் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
தாராபுரம் இடைத் தேர்தல்
18ஆம் தேதி காலை 11 மணிக்கு, நீங்கள் குறிப்பிட்ட அதே நேரத்தில் நான் ஆஜராவேன். நீங்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிப்பேன். விசாரணை முடிந்த அடுத்த நிமிடமே நான் திருச்சிக்குக்கூட வரமாட்டேன்; அங்கிருந்து நேராக இடைத் தேர்தல் நடைபெறும் தாராபுரத்துக்குத்தான் செல்வேன். எனக்கும் எங்கள் மாவட்டத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபடுவேன். தாராபுரம் இடைத்தேர்தலில் நிச்சயமாக நாங்கள் வெற்றியை நிலைநாட்டுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சர்ச் வாரண்டுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள், இதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்கெல்லாம் காலம் வரும்போது மிகப்பெரிய பதிலை அளிப்பதற்காகக் காத்திருக்கிறோம்.
இந்த மாதிரியான சலசலப்புகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். திராவிட முன்னேற்றக் கழகம் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. இது 77 ஆண்டுகள் பழமையான இயக்கம்; இந்த நாட்டு மக்களுக்காகப் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்திய இயக்கம். எங்கள் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து பணியாற்றுவோம். எந்த இடத்திலும் தொய்வில்லாமல் பணியாற்ற எங்கள் உடன்பிறப்புகள் காத்திருக்கிறார்கள்.
இது விசாரணை அல்ல; தேடுதல் வாரண்ட் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனை மட்டுமே. நாங்கள் அமைதியாக இருந்தோம். அவர்கள் கேட்ட அனைத்து அறைகளையும் கதவுகளையும் திறந்து காட்டினோம். வீட்டை முழுமையாகச் சோதனை செய்தார்கள். சோதனை முடிந்ததும், “முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி” என்று கூறினார்கள். என்னென்ன ஆவணங்களை எடுத்துச் செல்கிறார்கள் என்ற பட்டியலில் மட்டும் என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள். 18ஆம் தேதி நேரில் வருமாறும் கூறியுள்ளனர்.
திருச்சியிலும் சென்னையிலும் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்றுள்ளது. சென்னையில் 2 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இங்கும் மேலும் சில இடங்களில் சோதனை நடந்துள்ளது. உங்களுக்குத் தெரிந்த அளவுதான் எனக்கும் தெரியும்.
டார்கெட் அவர்தான்.. அன்பாக மிரட்டுவதா?
இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு நான் கூறுவது ஒன்றுதான். மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருப்பது 2 அமைப்புகளைத்தான்.. ஒன்று காவல்துறை; மற்றொன்று நீதிமன்றம். நீங்கள் எத்தனை பொய் வழக்குகளைப் பதிவு செய்தாலும், நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம். அங்கு எங்களுடைய உண்மை நிலையை நிலைநாட்டுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
காவல்துறை நண்பர்களுக்கு நான் கூற விரும்புவது ஒன்றுதான். விசாரணையை முறையாக நடத்துங்கள். நல்லது நடந்திருக்கிறதா, தவறு நடந்திருக்கிறதா என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உங்களிடம்தான் உள்ளது.
ஆனால் விசாரணையில் எல்லாமே சரியாக இருக்கிறது; எந்த பழியும் போட முடியவில்லை என்பதற்காக, “டார்கெட் நீங்க இல்லைங்க.. டார்கெட் ‘அவர்’தான்.. அவர் பேரை சொல்லுங்களேன்.. விட்டுவிடுகிறோம்” என்கிற மாதிரி தயவு செய்து செய்யாதீர்கள்..
யார் தவறு செய்திருந்தாலும், அதற்கான தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அன்பாக மிரட்டுவதையோ, விசாரணை உத்திகளைப் பயன்படுத்தாமல்
நீதியை நிலைநாட்டுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை மட்டும் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்.

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, சட்டமன்றத்தில் துணிச்சலாகப் பேசுகிறார்; கேள்விகளையும் எதிர்க்கேள்விகளையும் முன்வைக்கிறார். அடுத்த நிமிடமே அவருடைய வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. அந்தச் சோதனைக்கும் அவர் முழுமையாக ஒத்துழைப்பு அளித்தார்.
மக்கள் மன்றத்தில் எங்கள் தலைவரின் (ஸ்டாலின்) மிசா கைது குறித்து கொச்சைப்படுத்திப் பேசப்பட்டபோது, தமிழ்நாடு முழுவதும் கழகத் தொண்டர்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தினர். அங்கு நாங்கள் எங்களுடைய கருத்துகளை முன்வைத்தபோது, உடனடியாக வழக்குப் பதிவு செய்து அச்சுறுத்தும் வேலையைத்தான் செய்தீர்கள்.
இப்படித் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து அச்சுறுத்துகிறீர்களே தவிர, நாட்டின் வளர்ச்சிக்காக என்ன செய்தீர்கள் என்பதைத்தான் நான் கேட்கிறேன்.
லஞ்சம் கொடுத்ததாக சொன்ன நிதி அமைச்சர் மரிய வில்சன் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சொன்னேன். பொதுக்கூட்டத்திலோ மக்கள் மன்றத்திலோ பேசுவதைவிட, சட்டமன்றத்தில் நின்று அவர் பேசியிருக்கிறார். எனவே அவர் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். இந்த விவகாரத்தில் தொடர்ந்து நீதிமன்றத்தை நாடுவோம்; நீதியை நிலைநாட்டுவோம். இவ்வாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
