ராமநாதபுரம் அரண்மனையில் நடைபெற்ற நவராத்திரி விழாவின் கடைசி நாளில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஊர்வலம் நிறுத்தப்பட்ட விவகாரத்தில், ராணி ராஜேஸ்வரி நாச்சியார் தரப்பு மீது ’ராஜா ஆஃப் ராம்நாட்’ நாகேந்திர சேதுபதியும் அவரது தாயார் ராணி லட்சுமி நாச்சியாரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் அரண்மனையில் செய்தியாளர்களைச் சந்தித்த இருவரும், சேதுபதி மன்னர் குடும்பத்தின் வாரிசுரிமை, அரண்மனை தேவஸ்தான நிர்வாகம், கோவில்களில் தங்களுக்கு மறுக்கப்படும் மரியாதைகள், சொத்துகள், கோவில் நகைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினர்.
நாகேந்திர சேதுபதி கூறியது என்ன?
’ராஜா ஆஃப் ராம்நாட்’ நாகேந்திர சேதுபதி கூறியதாவது: என்னுடைய தந்தை ராஜா குமரன் சேதுபதி. என்னுடைய தாயார் ராணி லட்சுமி நாச்சியார்.
சண்முக ராஜேஸ்வர சேதுபதி குடும்பத்தில் ராமநாத சேதுபதி, சிவபாக்கிய நாச்சியார், நாகேந்திர சேதுபதி ஆகியோர் ஒரு வழியில் வந்தவர்கள். இதில் நாகேந்திர சேதுபதியின் மகன் குமரன் சேதுபதி. அவருடைய மகன்தான் நான். எங்களுடைய குடும்ப வாரிசு தொடர்பாக யாருக்கும் எந்தக் குழப்பமும் இருக்க வேண்டாம்.
அம்மன் ஊர்வலத்தை ஏன் நிறுத்தினார்கள்?
ராமநாதபுரம் அரண்மனையில் இந்த ஆண்டு நவராத்திரி விழா முதல் ஒன்பது நாட்களும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்களும் அதிக அளவில் கலந்துகொண்டனர். எல்லாமே மனநிறைவாக இருந்தது. ஆனால், கடைசி நாளில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஊர்வலமாக வெளியே வரும்போது, மீண்டும் அம்மனை அரண்மனைக்குள்ளேயே கொண்டு சென்றுவிட்டார்கள். இந்த ஒரு நாளுக்காகத்தான் மக்கள் ஆண்டு முழுவதும் காத்திருக்கிறார்கள். ராஜராஜேஸ்வரி அம்மனைத் தரிசிக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் வருகிறார்கள். அப்படிப்பட்ட மக்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டார்கள்.
எனக்கும் என்னுடைய அத்தை (ராணி) ராஜேஸ்வரி நாச்சியாருக்கும் இத்தனை ஆண்டுகளாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. ஆனால், திடீரென எங்களை ஏன் போட்டியாகப் பார்க்க ஆரம்பித்தார்கள் என்று புரியவில்லை. என்னுடைய தந்தை இறந்த பிறகு அத்தையைத்தான் தந்தையின் இடத்தில் வைத்துப் பார்த்தேன். எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்றுதான் அப்பா என்னை வளர்த்தார்.
ஆனால், இப்போது அத்தையின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது இத்தனை ஆண்டுகளாக எங்களிடம் பழகியதே உண்மையான அன்புடன்தானா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. நேற்று அளித்த பேட்டியில் என்னுடைய தந்தையை ‘குமரன்’ என்றும் தாத்தாவை ‘நாகி’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதுவரை என்னுடைய தந்தையை அண்ணன் என்றுதான் அழைத்து வந்தார்கள். இப்போது இப்படிப் பேசுவது மிகவும் வேதனையாக இருக்கிறது.
என்னுடைய தந்தையின் மறைவுக்குப் பிறகுதான் இந்த மாற்றங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. மக்கள் மத்தியில் எனக்குக் கிடைக்கும் வரவேற்பும் செல்வாக்கும் அவர்களுக்குப் பிடிக்கவில்லையோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.
கோவில்களில் மரியாதை குறைப்பு
முன்பெல்லாம் அத்தையுடன் பல்வேறு கோவில்களுக்குச் செல்வேன். என்னுடைய தந்தையின் இடத்தில் எனக்கும் உரிய மரியாதைகள் வழங்கப்பட்டன. ஆனால், நாளடைவில் அந்த மரியாதைகள் குறைக்கப்பட்டன. உத்தரகோசமங்கை கோவிலில் மற்றவர்களுக்குப் பரிவட்டம் கட்டப்பட்ட நிலையில், எனக்கான மரியாதை மறுக்கப்பட்டது.
கோவிலில் யாருக்குப் பரிவட்டம் கட்ட வேண்டும் என்பதை இந்து சமய அறநிலையத்துறையின் விதிமுறைகளின்படிதான் முடிவு செய்ய வேண்டும். தனிப்பட்ட விருப்பப்படி முடிவெடுக்க முடியாது. ஆனால், என்னை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாத நிலை உருவானது. பல கோவில்களில் எனக்கு அடிப்படை மரியாதைகூட கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது. அத்தையின் மீதுள்ள மரியாதையால் இத்தனை காலமும் இதைப் பெரிதுபடுத்தாமல் இருந்தேன். ஆனால், அவர்களுடைய குடும்பத்தினரின் தலையீடு அதிகரித்துக்கொண்டே சென்றது.
பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தது ஏன்?
ஒருகட்டத்தில் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து, எங்களுடைய வாரிசுகள் தொடர்பாக சில அறிவிப்புகளை வெளியிட்டார்கள். அப்போது அத்தையை நேரடியாகத் தொடர்புகொண்டு, ஏன் இப்படிப்பட்ட விளம்பரம் கொடுத்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு, ‘தம்பி, உங்களை நான் எப்படிப்பா சொல்வேன்? மற்றவர்கள் ராஜா என்று பெயர் போட்டுக்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்காகத்தான் விளம்பரம் கொடுத்தேன்’ என்று விளக்கம் அளித்தார்கள்.
அதையும் நம்பி அமைதியாக இருந்தேன். ஆனால், பின்னர் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் எங்களைப் பற்றிப் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக உணர்ந்தேன். எங்களைக் குறிவைத்து அவதூறு பரப்பப்படுவதாகக் கருதுகிறேன். அப்போதும் குடும்ப உறவைக் கருத்தில்கொண்டு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தேன்.
அழகர் கோவிலில் அவமானம்
மதுரை அழகர் கோவில் சித்திரைத் திருவிழாவில் சேதுபதி மண்டகப்படி நடைபெறுவது வழக்கம். முன்பு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் செல்லாத நிலையில், என்னுடைய தந்தை உயிருடன் இருந்த காலத்திலேயே நான் அங்கு செல்ல ஆரம்பித்தேன். திவானுடன் சேர்ந்து பல ஆண்டுகளாக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அத்தையையும் அவருடைய குடும்பத்தினரையும் இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு நானே அழைத்திருக்கிறேன். நீங்கள் வந்தால்தான் நிகழ்ச்சிக்குப் பெருமை என்று சொல்லியிருக்கிறேன்.
இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவில் அழகர் எங்களுடைய மண்டகப்படிக்கு வந்தபோது, வழக்கம்போல சாமியிடம் ஆசீர்வாதம் வாங்கச் சென்றேன். அப்போது நான் ஆசீர்வாதம் வாங்குவதற்காக விரிக்கப்பட்டிருந்த துணியை எடுத்துவிட்டார்கள். இதுகுறித்து விசாரித்தபோது, ராணி எடுக்கச் சொன்னதால் எடுத்ததாகத் தெரிவித்தார்கள்.
அங்கிருந்த பொதுமக்களும் பூசாரிகளும் இதைப் பார்த்து, ‘ராஜாவுக்கு மரியாதை செய்யுங்கள்’ என்று கூறினார்கள். இத்தனை ஆண்டுகளாக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வந்த எனக்கு, பொதுமக்கள் முன்னிலையில் இப்படிப்பட்ட அவமானம் ஏற்பட்டது மிகுந்த வேதனையை அளித்தது.
தேவஸ்தானத்தில் உரிமை
என்னுடைய தந்தை குமரன் சேதுபதி, குடும்பத்தின் பாரம்பரியத்தையும் கோவில்களின் வளர்ச்சியையும் பாதுகாப்பதற்காகப் பல பணிகளைச் செய்திருக்கிறார். 1997-ஆம் ஆண்டு முதல் அவர் மறையும் வரை ராமேஸ்வரம் கோவில் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.
அவருடைய காலத்தில் இரண்டு கும்பாபிஷேகங்கள் நடைபெற்றன. இரண்டு கோபுரங்கள் கட்டப்பட்டன. ராமேஸ்வரம் கோவிலுக்காக அவர் செய்த பணிகளை மக்கள் அறிவார்கள். தேவஸ்தானம், சத்திரம் உள்ளிட்டவற்றில் எங்களுடைய குடும்பத்திற்கும் உரிமை இருப்பதாக அப்பா தெரிவித்திருந்தார். ஆனால், குடும்பத்தில் மூத்தவர்களுக்குக் கொடுத்த மரியாதையால் அந்த உரிமைகளை அவர் வலியுறுத்தவில்லை.
நாங்களும் அதே மரியாதையுடன் இருந்தோம். ஆனால், அப்பாவின் மறைவுக்குப் பிறகு எங்களைத் தொடர்ந்து குறிவைப்பதும், கோவில்களில் உரிய மரியாதை வழங்க மறுப்பதும் அதிகரித்ததால், எங்களுடைய உரிமையைச் சட்டப்படி கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால்தான் தேவஸ்தானத்தில் எங்களுக்கும் உரிமை இருக்கிறது என்று மனுத் தாக்கல் செய்திருக்கிறோம்.
நாங்கள் யாருடைய உரிமையையும் பறிக்க வேண்டும் என்று கேட்கவில்லை. எங்களுக்கும் சம உரிமை இருக்கிறது என்றுதான் கேட்கிறோம். மூத்த வாரிசுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படியானால் குடும்பத்தில் அவர்களுக்கு முன்பாக உள்ள மற்ற வாரிசுகளின் உரிமை என்ன என்ற கேள்வியும் எழுகிறது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. சட்டப்படி முடிவு வரட்டும்.
நவராத்திரி கடைசி நாளில் நடந்தது என்ன?
நவராத்திரி விழாவின் கடைசி நாளில், எங்களுக்கு வழக்கமான மரியாதையை வழங்கக்கூடாது என்று காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அறிந்தேன். காவல்துறையினர் என்னிடம் வந்து இதுகுறித்துப் பேசினார்கள்.
அவர்களிடம், இத்தனை ஆண்டுகளாக என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதையே தொடர வேண்டும். தனிப்பட்ட விருப்பத்திற்காகப் பாரம்பரிய நடைமுறையை மாற்றக்கூடாது என்று தெரிவித்தேன். பின்னர், அம்மனுக்குத் தீபாராதனை காட்டிவிட்டு ஊர்வலத்தைத் தொடங்கலாம் என்று காவல்துறையினர் சமரசம் செய்தனர்.
மக்கள் காத்திருப்பதால் எந்தப் பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்று நாங்களும் அதற்கு ஒப்புக்கொண்டோம். அப்போது என்னுடன் என்னுடைய தாயார், மனைவி ஆகியோர் இருந்தனர். அத்தை தரப்பில் அவர்களுடைய குடும்பத்தினர் நின்றுகொண்டிருந்தனர்.
முதலில் அம்மனுக்குத் தீபாராதனை காட்டப்பட்டது. அதற்குப் பிறகு அத்தைக்கு மட்டும் தனியாக ஆரத்தி காட்டி மரியாதை வழங்கப்பட்டது.
அதையும் பெரிதுபடுத்தாமல் அமைதியாக இருந்தோம். ஆனால், தொடர்ந்து குங்குமம் உள்ளிட்ட மரியாதைகளும் அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன.
இதனால் பொதுமக்களே ஏன் ஒருதரப்புக்கு மட்டும் மரியாதை வழங்குகிறீர்கள் என்று கேட்க ஆரம்பித்தார்கள். அப்போது என்னுடைய தாயாருக்கும் அதே மரியாதையை வழங்க வேண்டும் என்று கேட்டேன்.
அம்மாவுக்கு அவமானம்
அந்த நேரத்தில் அத்தை தரப்பில் இருந்த சிலர் என்னுடைய தாயாரைத் தகாத வார்த்தைகளால் பேசியதாகக் குற்றம்சாட்டுகிறேன். ‘நீ எப்படி உள்ளே வரலாம்? உனக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்று கேட்டார்கள்.
என்னுடைய தாயாரை இத்தனை ஆண்டுகளாகக் குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி மதித்து வந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
அப்படிப்பட்டவரை அந்த இடத்தில் அவமதித்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்குக்கூட மரியாதை வேண்டாம். அத்தைக்கு ஆரத்தி காட்டியதைப்போல என்னுடைய தாயாருக்கும் காட்டுங்கள் என்றுதான் கேட்டேன். ஆனால், அதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. பிரச்சினை பெரிதாகிவிடக்கூடாது என்பதற்காகக் காவல்துறையினர் இருதரப்பினரையும் அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
அரண்மனை கதவைப் பூட்டியது ஏன்?
அதற்குப் பிறகு வழக்கம்போல அம்மன் ஊர்வலம் நடைபெறும் என்று நினைத்தேன். அரண்மனை வாசல் அருகே உள்ள பீமாஸ் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். மற்ற சாமிகள் எல்லாம் ஊர்வலமாகச் சென்றுகொண்டிருந்த நிலையில், ராஜராஜேஸ்வரி அம்மன் மட்டும் வெளியே வரவில்லை.
அப்போது அம்மன் ஊர்வலத்திற்கான அமைப்புகளை அகற்றி, மீண்டும் அரண்மனைக்குள் கொண்டு சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்தது. அரண்மனையின் கதவுகளும் பூட்டப்பட்டதாகத் தெரிவித்தார்கள்.
அம்மனைத் தரிசிக்கக் காத்திருந்த பொதுமக்கள் என்னிடம் வந்து என்ன நடந்தது என்று கேட்க ஆரம்பித்தார்கள். எங்களுக்குள் குடும்பப் பிரச்சினை இருக்கலாம். அதற்காக மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாரம்பரிய நிகழ்ச்சியைத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக நிறுத்துவது எப்படிச் சரியாகும்? இது எங்களுடைய குடும்பத்திற்கும் ராமநாதபுரத்தின் பாரம்பரியத்திற்கும் ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். இந்தச் சம்பவத்தால் தூக்கமே வரவில்லை. மிகவும் மனவேதனையாக இருக்கிறது.
இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வரும் அறநிலையத்துறை அமைச்சரும் கவனம் செலுத்த வேண்டும்.
கூலிப்படையினர் இறக்கப்பட்டனரா?
அம்மன் ஊர்வலம் நடைபெறாததற்கு ரவுடிகள், கூலிப்படையினர் தொடர்பான அச்சுறுத்தல்கள்தான் காரணம் என்று கூறப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தி, பங்குனி உத்திரம், மவுன நோன்பு உள்ளிட்ட பெரிய விழாக்களுக்குக் காவல்துறை சிறப்புப் பாதுகாப்பு வழங்குவது வழக்கம்.
இந்த ஆண்டும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். காவல்துறை அதிகாரிகளும் அங்கிருந்தனர். அப்படியிருக்கும்போது, அங்கு வந்த பொதுமக்களை கூலிப்படையினர் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?
இந்தக் குடும்பத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காகத்தான் நான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். அந்தப் பாரம்பரியத்தையே அழிக்க நான் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?
பள்ளிச் செயலாளர் பதவி ஆவணங்கள்
ராஜா மேல்நிலைப் பள்ளியின் செயலாளர் நான் இல்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், என்னிடம் அதற்கான ஆவணங்கள் இருக்கின்றன. என்னைச் செயலாளராக நியமிப்பதற்கான தீர்மானத்தில் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் கையெழுத்திட்டிருக்கிறார்கள். அதற்கான படிவங்களும் என்னிடம் உள்ளன. இப்போது குடும்பப் பிரச்சினை ஏற்பட்ட பிறகு, நான் செயலாளர் இல்லை என்று கூறுவது சரியல்ல. இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் அனைத்து ஆவணங்களையும் வெளியிடத் தயாராக இருக்கிறேன்.
தத்தெடுப்பு விவகாரம் என்ன?
என்னுடைய சிறுவயதில் எனக்குத் தெரியாமல் தத்தெடுப்பு தொடர்பான சில நடவடிக்கைகள் நடைபெற்றதாகப் பின்னர்தான் அறிந்தேன். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் இந்த நடவடிக்கைகள் நடந்ததாகத் தெரிகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சில கோவில் நிர்வாக விவகாரங்கள் தொடர்பாக என்னைத் தொடர்புகொண்டபோதுதான் இதுபற்றித் தெரியவந்தது.
அதன் பிறகு சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் விசாரித்து, சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொண்டேன். தத்தெடுப்பு தொடர்பான ஆவணங்கள், அதை ரத்து செய்தது தொடர்பான நீதிமன்ற உத்தரவு உள்ளிட்டவை என்னிடம் இருக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாகவும் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதனைச் சட்டப்படி சந்திப்பேன்.
‘ராஜா ஆஃப் ராம்நாட்’
‘ராஜா ஆஃப் ராம்நாட்’ என்ற பெயரை நான் பயன்படுத்துவது குறித்தும் கேள்வி எழுப்புகிறார்கள். இந்தப் பெயரை என்னுடைய முன்னோர்களும் தந்தையும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். குடும்பத்தின் பாரம்பரியத்துடன் தொடர்புடைய பெயராகத்தான் அதைப் பார்க்கிறேன். இதுவரை இதுகுறித்து என்னிடம் யாரும் கேள்வி எழுப்பவில்லை. இப்போது அந்தப் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறார்கள். சட்டப்படி ஏதேனும் பிரச்சினை இருந்தால் நீதிமன்றத்தில் தீர்வு காணட்டும். நான் எங்கு சென்றாலும் என்னை நானே ராஜா என்று முன்னிறுத்திக் கொள்வதில்லை.
மக்கள் அன்புடன் அப்படி அழைக்கிறார்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். மக்களோடு மக்களாக வாழ வேண்டும் என்றுதான் என்னுடைய தந்தை என்னை வளர்த்தார். எங்களுடைய குடும்பத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுதான் என்னுடைய நோக்கம். இவ்வாறு நாகேந்திர சேதுபதி தெரிவித்தார்.

ராணி லட்சுமி நாச்சியார் கூறியது என்ன?
இதனைத் தொடர்ந்து பேசிய நாகேந்திர சேதுபதியின் தாயார் ராணி லட்சுமி நாச்சியார் கூறியதாவது: இந்தக் குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டு வந்தபோது, சேதுபதி மன்னர் குடும்பத்தின் பெருமைகளைப் பற்றி என்னுடைய தந்தை எடுத்துக் கூறினார். தேசத்திற்காகவும் ஆன்மிகத்திற்காகவும் தமிழ் மொழிக்காகவும் இந்தக் குடும்பத்தினர் செய்த பணிகளைப் பற்றித் தெரிவித்தார்.
சுவாமி விவேகானந்தருக்கு ஆதரவளித்த பாஸ்கர சேதுபதி, மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கிய வள்ளல் பாண்டித்துரைத் தேவர் உள்ளிட்டோரின் வரலாறு இந்தக் குடும்பத்தின் பெருமையுடன் தொடர்புடையது.
அப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்ட குடும்பத்தின் பெருமை கெட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் இத்தனை ஆண்டுகளாகப் பல விஷயங்களை வெளியில் பேசாமல் இருந்தேன். ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் சில விஷயங்களைப் பொதுமக்களிடம் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அரண்மனை சொத்துகள்
நாங்கள் வசிக்கும் அரண்மனைப் பகுதி தொடர்பாகவும் தவறான தகவல்கள் கூறப்படுகின்றன. சில குறிப்பிட்ட பகுதிகள் தொடர்பாக நடைபெற்ற பரிவர்த்தனைகளை வைத்து ஒட்டுமொத்த அரண்மனையையும் வேறு விதமாகச் சித்தரிக்க முடியாது.
திருப்புல்லாணி கோவில் நகைகள் மாயம்
திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோவிலில் மதிப்புமிக்க நகைகள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். கோவிலில் உள்ள நகைகள், அவற்றைப் பாதுகாக்கும் அறைகளின் சாவிகள் யாருடைய பொறுப்பில் இருந்தன என்பதையெல்லாம் விசாரிக்க வேண்டும். கோவில் நிர்வாகத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும்.
நகைகள் காணாமல் போன விவகாரத்தில் விசாரணை நடைபெற்றதாகத் தெரிகிறது. ஆனால், அதன் முழுமையான நிலை என்ன என்பது பொதுமக்களுக்குத் தெரிய வேண்டும். இந்த விவகாரத்தில் ஒருசிலரை மட்டும் பொறுப்பாக்கிவிட்டு, மற்றவர்களின் பொறுப்புகள் குறித்து விசாரிக்காமல் இருக்கக்கூடாது. இதுகுறித்து தமிழக முதல்வரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உத்தரகோசமங்கை கும்பாபிஷேக கணக்கு எங்கே?
உத்தரகோசமங்கை கோவில் கும்பாபிஷேகத்தின்போது ஏராளமானோர் நன்கொடை வழங்கினார்கள். நானும் நன்கொடைகள் கிடைப்பதற்கு உதவியிருக்கிறேன். அப்போது நன்கொடை வழங்கியவர்களுக்கு முறையான ரசீதுகள் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டேன். ஆனால், அதற்கான நடைமுறை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கோவில் திருப்பணிகளுக்காக வசூலிக்கப்படும் நன்கொடைகளுக்கு முறையான கணக்கு இருக்க வேண்டும். அந்த நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பது தொடர்பாகவும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். கும்பாபிஷேகத்தின்போது சில பணிகள் நடைபெற்ற விதம் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. அவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், அங்கு வந்த பக்தர்களுக்குக் குடிநீர், உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. இந்த விவகாரங்களிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
வாராகி கோவில் உற்சவர் சிலை எங்கே?
வாராகி கோவிலில் ஊர்வலத்திற்குப் பயன்படுத்தப்படும் உற்சவர் சிலை காணாமல் போனதாகவும் தகவல் உள்ளது. அந்தச் சிலை என்ன ஆனது? அது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும். அதேபோல மன்னர் குடும்பத்துடன் தொடர்புடைய சில மதிப்புமிக்க பொருட்கள், நகைகள் உள்ளிட்டவற்றின் தற்போதைய நிலை குறித்தும் கேள்விகள் இருக்கின்றன.
கோவில்களில் உள்ள நகைகள், சிலைகள், மதிப்புமிக்க பொருட்கள் அனைத்தையும் முறையாகக் கணக்கெடுத்து அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்த விவகாரங்களை அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்வதற்காகத்தான் பேசுகிறேன்.
ராமநாதபுரம் மக்கள் அனைவரும் ராஜராஜேஸ்வரி அம்மனை வழக்கம்போலத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். இந்தக் குடும்பத்தின் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவதற்கும் கோவில்களின் நலனுக்கும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறோம். இவ்வாறு லட்சுமி நாச்சியார் தெரிவித்தார்.

ராஜேஸ்வரி நாச்சியார் தரப்பு சொன்னது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் நேற்று (அக்டோபர் 22) செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியை மின்னம்பலம் விரிவாக வெளியிட்டிருந்தது.
அந்தப் பேட்டியில், தாம் மறைந்த ராஜா ராமநாத சேதுபதியின் ஒரே மகள் என்றும், 1997-ஆம் ஆண்டு முதல் ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தைக் கவனித்து வந்ததாகவும் தெரிவித்திருந்தார். 2023-ஆம் ஆண்டு தனது மூத்த மகள் அபர்ணாவை தேவஸ்தான அறங்காவலராகவும், இளைய மகள் அஸ்மிதாவை சத்திர நிர்வாக அறங்காவலராகவும் நியமித்ததாகக் கூறியிருந்தார்.
மேலும், நாகேந்திர சேதுபதியின் தந்தை குமரன் சேதுபதி தனது சித்தப்பா மகன் என்றும், அவருடன் நல்ல உறவு இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தற்போது நாகேந்திர சேதுபதி தன்னை ‘ராஜா’ என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
நாகேந்திர சேதுபதி தனது தந்தையின் சகோதரிக்குச் சட்டப்படி தத்துக் கொடுக்கப்பட்டவர் என்றும், அப்படிப்பட்டவர் எவ்வாறு ராமநாதபுரம் ராஜா என்று உரிமை கோர முடியும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
விஜயதசமி விழாவில் முதல் மரியாதை என்ற நடைமுறையே இல்லை என்றும், பரம்பரை அறங்காவலர்தான் அம்மனுக்கு மலர் தூவி ஊர்வலத்தைத் தொடங்கி வைப்பார் என்றும் விளக்கியிருந்தார்.
இந்த ஆண்டு பிரச்சினையைத் தவிர்ப்பதற்காகக் குடும்பத்தினர் யாரும் மலர் தூவ வேண்டாம் என்றும், கோவில் அர்ச்சகரே மலர் தூவி ஊர்வலத்தைத் தொடங்கி வைக்கலாம் என்றும் முடிவு செய்ததாகக் கூறியிருந்தார். ஆனால், அர்ச்சகர் உள்ளிட்டோருக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், விழாவின்போது அடியாட்கள், கூலிப்படையினர் இருந்ததாகவும், காவல்துறையின் முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். தங்கத்தால் ஆன ராஜராஜேஸ்வரி அம்மன் சிலைக்கும், அதில் அணிவிக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த நகைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதால், ஊர்வலத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் விளக்கமளித்திருந்தார்.
அடுத்த ஆண்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ராஜராஜேஸ்வரி அம்மனின் பாரம்பரிய விஜயதசமி ஊர்வலம் வழக்கம்போல நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில், ராஜராஜேஸ்வரி நாச்சியார் நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் நாகேந்திர சேதுபதியும் அவரது தாயார் லட்சுமி நாச்சியாரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதனால் ராமநாதபுரம் சேதுபதி மன்னர் குடும்பத்தின் வாரிசு உரிமை மற்றும் தேவஸ்தான நிர்வாகம் தொடர்பான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
