கோவை மாணவன் தற்கொலை: மாநகர காவல் ஆணையருக்கு தமிழ்நாடு எஸ்சி எஸ்டி ஆணையம் நோட்டீஸ்

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த பட்டியலின மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையர் ஒரு வார காலத்திற்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் வசித்து வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த 16 வயது மாணவர் அகிலன். இவர் அவிநாசி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில், அக்டோபர் 21ம் தேதி மாணவர் அகிலன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ADVERTISEMENT

மாணவர் அகிலன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருடன் மற்ற மாணவர்கள் பேசுவதில்லை என்றும், பள்ளி ஆசிரியர் ஒருவர் அவரிடம் மாட்டிறைச்சி சாப்பிடுகிறாயா எனக் கேட்டு அவமதித்தால் மாணவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாணவனின் தந்தை குற்றம் சாட்டி உள்ளார். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படும் வரை மகனின் உடலை வாங்க போவது இல்லை என்றும் விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே, மாணவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், அதே பள்ளியைச் சேர்ந்த இரு மாணவர்கள் உட்பட நான்கு பேர் மீது பீளமேடு காவல் துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

இந்தச் சம்பவம் தொடர்பாக, அக்டோபர் 22-ம் தேதி வெளியான நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் விசாரணை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதையடுத்து, மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான முழு விவரங்கள், புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் ரம்யா பாரதிக்கு பழங்குடியினர் மாநில ஆணையம் உத்திரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share