மன்னர் பரம்பரையில் ’மகா யுத்தம்’.. ‘சேதுபதி ராஜா’ யார்? 300 ஆண்டுகால விஜயதசமி ஊர்வலம் திடீர் ரத்து.. அதிரும் ‘ராம்நாடு’!

Published On:

| By Mathi

Sethupathi Seemani-Ramnad

வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த ராமநாதபுரம் ‘சேதுபதி மன்னர்’ குடும்பத்தில் இப்போது யார் உண்மையான ‘ராஜா’ என்ற உரிமைப் பிரச்சனை வெடித்துள்ளது. இந்த மோதலால் 300 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த ராஜராஜேஸ்வரி அம்மனின் விஜயதசமி ஊர்வலமே ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் சேதுபதி சீமை

ராமநாதபுரம் சேதுபதி சீமையின் வரலாறு மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்துடன் நெருங்கிய தொடர்புடையது. 1605-ம் ஆண்டு மதுரையை ஆட்சி செய்த முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர், சடையக்கத் தேவரை ராமநாதபுரம் பகுதியின் தலைவராக நியமித்தார். இவரே உடையான் சேதுபதி என்று அழைக்கப்பட்டார்.

ADVERTISEMENT

ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதும், கடற்கரைப் பகுதிகளைக் கண்காணிப்பதும் சேதுபதிகளின் முக்கியப் பொறுப்புகளாக இருந்தன. தொடக்கத்தில் மதுரை நாயக்கர் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருந்த சேதுபதிகள், பின்னர் தங்களது அதிகாரத்தை விரிவுபடுத்தி தனி ஆட்சியை நிறுவினர்.

17-ம் நூற்றாண்டின் இறுதியில் கிழவன் சேதுபதி ஆட்சிக் காலத்தில் ராமநாதபுரம் சீமை வலிமையான அரசாக உருவெடுத்தது. ராமநாதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு சேதுபதி மன்னர்களின் ஆட்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

சிவகங்கை சீமை பிறந்த கதை

18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேதுபதி மன்னர் குடும்பத்தில் ஏற்பட்ட வாரிசுரிமைப் பிரச்சனையால் ராமநாதபுரம் சீமை பிளவுபட்டது. 1730-ம் ஆண்டு ராமநாதபுரம் சீமை 5 பங்குகளாகப் பிரிக்கப்பட்டு, அதில் 2 பங்குகள் சசிவர்ணத் தேவருக்கு வழங்கப்பட்டன. அந்த 2 பங்குகளில் பிறந்ததுதான் சிவகங்கை சீமை.

சிவகங்கை சீமையின் முதல் மன்னராக சசிவர்ணத் தேவர் பொறுப்பேற்றார். அவருக்குப் பிறகு அவரது மகன் முத்துவடுகநாதத் தேவர் மன்னரானார். இவரது மனைவிதான் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய வீரமங்கை வேலுநாச்சியார். ராமநாதபுரம் சேதுபதி மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் வேலுநாச்சியார். ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதியின் மகளாகப் பிறந்த வேலுநாச்சியார், சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதத் தேவரைத் திருமணம் செய்துகொண்டார்.

ADVERTISEMENT

1772-ம் ஆண்டு காளையார்கோவில் போரில் முத்துவடுகநாதத் தேவர் கொல்லப்பட்டார். இதையடுத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய வேலுநாச்சியார், திண்டுக்கல் அருகே விருப்பாட்சியில் தஞ்சமடைந்தார். ஹைதர் அலியின் ஆதரவுடனும் ‘தளபதிகள்’ மருது சகோதரர்களின் துணையுடனும் படை திரட்டி, 1780-ம் ஆண்டு சிவகங்கை சீமையின் ஆட்சியை மீட்டெடுத்தார்.

300 ஆண்டுகால விஜயதசமி ஊர்வலம்

ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் குலதெய்வமான ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில், ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் அக்டோபர் 10-ந் தேதி காப்பு கட்டுதலுடன் நவராத்திரி விழா தொடங்கியது. தொடர்ந்து 9 நாட்கள் கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விஜயதசமி நாளில் ராஜராஜேஸ்வரி அம்மன் அரண்மனையிலிருந்து மகர்நோன்பு பொட்டலுக்கு ஊர்வலமாகச் சென்று அம்புவிடும் நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம்.

300 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தப் பாரம்பரிய விழாவில் சேதுபதி சமஸ்தானத்துக்குச் சொந்தமான கோயில்களின் உற்சவ மூர்த்திகளும், ராமநாதபுரம் நகரில் உள்ள மற்ற கோயில்களின் சுவாமிகளும் அரண்மனை முன்பு சங்கமிப்பார்கள். பின்னர் மன்னர் கால வாத்தியங்கள், கிராமியக் கலை நிகழ்ச்சிகளுடன் சுவாமிகள் ஊர்வலமாகச் செல்வார்கள். ராமநாதபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார ஊர்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவைக் காண வருவது வழக்கம்.

இந்த ஆண்டு விஜயதசமி நாளான அக்டோபர் 20-ந் தேதி ராஜராஜேஸ்வரி அம்மன் தங்கச் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலமாகப் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது சேதுபதி மன்னர் குடும்பத்தினரிடையே அம்மனுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியதால் அரண்மனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இரு தரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்தினர்.

பின்னர் தங்கச் சிம்ம வாகனத்தில் ராஜராஜேஸ்வரி அம்மன் அரண்மனையை விட்டு வெளியே வந்தார். ஆனால் உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறி அம்மனை மகர்நோன்பு பொட்டலுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என சமஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலர் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இதனால் ராஜராஜேஸ்வரி அம்மன் மீண்டும் அரண்மனை வளாகத்துக்குள் கொண்டு செல்லப்பட்டார். அங்கேயே மங்கள வாத்தியங்கள் முழங்க அம்புவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அரண்மனை வளாகத்துக்குள் பக்தர்கள் செல்ல முயன்றபோது போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கதவுகளை மூடினர். குறிப்பிட்ட சிலர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வெளியே காத்திருந்த பக்தர்கள் வழக்கமான ஊர்வலத்தைக் காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

சேதுபதி மன்னர் குடும்பத்தில் என்ன பிரச்சனை?

ராமநாதபுரம் சமஸ்தானத்தை நிர்வகித்து வரும் ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் குடும்பத்தினருக்கும், அவரது சித்தப்பா மகன் மறைந்த குமரன் சேதுபதி குடும்பத்தினருக்கும் இடையே நிர்வாக உரிமை தொடர்பாகப் பிரச்சனை உள்ளது.

ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார், மறைந்த ராஜா ராமநாத சேதுபதியின் ஒரே மகள். இவரது மூத்த மகள் அபர்ணா ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான அறங்காவலராகவும், இளைய மகள் அஸ்மிதா சத்திர நிர்வாக அறங்காவலராகவும் உள்ளனர்.

மற்றொரு தரப்பில் மறைந்த குமரன் சேதுபதியின் மனைவி லட்சுமி, மகன் நாகேந்திரன், அவரது மனைவி சிந்து உள்ளிட்டோர் உள்ளனர்.

சமஸ்தானத்தின் நிர்வாக உரிமை தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. குறிப்பாக, நாகேந்திரன் தன்னை ராஜா என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்கு ராஜராஜேஸ்வரி நாச்சியார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விஜயதசமி ஊர்வலத்தின்போது அம்மனுக்கு யார் மலர் தூவி வழிபாட்டைத் தொடங்கி வைப்பது என்பதில் ஏற்பட்ட பிரச்சனை, இரு தரப்பினரிடையேயான மோதலாக வெடித்துள்ளது.

ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் பேட்டி

இந்தச் சம்பவம் குறித்து ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் ராஜா ராமநாத சேதுபதியின் ஒரே மகள். எனது தந்தை ராமநாதபுரம் சமஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலராகவும், ராமேஸ்வரம் கோயிலின் தக்காராகவும் இருந்தார். அவர் மறைந்தபோது நான் சிறுமியாக இருந்ததால் எனது தாயார் சமஸ்தான நிர்வாகத்தைக் கவனித்து வந்தார். அதன்பிறகு 1997-ம் ஆண்டு முதல் நான் இந்த நிர்வாகத்தைக் கவனித்து வருகிறேன்.

2023-ம் ஆண்டு எனது மூத்த மகள் அபர்ணாவை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான அறங்காவலராகவும், இளைய மகள் அஸ்மிதாவை சத்திர நிர்வாக அறங்காவலராகவும் நியமித்தேன். இதுதான் எங்கள் குடும்பத்தில் பரம்பரையாக நடைபெற்று வரும் நிர்வாக முறை. நாகேந்திரனின் தந்தை குமரன் சேதுபதி எனது சித்தப்பா மகன். அவருடன் நல்ல உறவு இருந்ததால் எங்கள் குடும்ப விழாக்களில் அவரும் பங்கேற்று வந்தார். எல்லா நிகழ்ச்சிகளிலும் என்னை முன்னிலைப்படுத்தியே அவர் செயல்பட்டார்.

ஆனால் தற்போது நாகேந்திரன் தன்னை ராஜா என்று சமூக வலைதளங்களில் அடையாளப்படுத்திக் கொள்கிறார். எனது மகளுக்கு அறங்காவலர் பொறுப்பை வழங்கியதை எதிர்த்தும், சமஸ்தான நிர்வாகத்தில் தங்களுக்கும் உரிமை இருப்பதாகக் கூறியும் வழக்கு தொடர்ந்துள்ளனர். நாகேந்திரன் எனது தந்தையின் சகோதரிக்கு (அத்தைக்கு) சட்டப்படி தத்துக் கொடுக்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் இங்கு எப்படி ராஜா என்று உரிமை கோர முடியும்? இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ளது.

எங்கள் குடும்பத்தில் உறவினர்களை மரியாதைக்காக ராஜா, ராணி என்று அழைப்பது வழக்கம். குழந்தைகளைக்கூட ராஜா என்று அழைப்பார்கள். ஆனால் அதற்காகப் பெயர்ப் பலகைகளிலும் சமூக வலைதளங்களிலும் தங்களை ராஜா என்று அடையாளப்படுத்திக் கொள்வதை ஏற்க முடியாது. விஜயதசமி விழாவில் முதல் மரியாதை தொடர்பாகப் பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் இங்கு முதல் மரியாதை என்ற ஒன்றே கிடையாது.

பரம்பரை அறங்காவலராக இருப்பவர்தான் சுவாமிக்கு மலர் தூவி ஊர்வலத்தைத் தொடங்கி வைப்பார். அப்படிப் பார்த்தால் இந்த ஆண்டு எனது மகள்தான் மலர் தூவியிருக்க வேண்டும். குமரன் சேதுபதியுடன் நல்ல உறவு இருந்ததால் கடந்த ஆண்டுகளில் அவரது குடும்பத்தினரும் மலர் தூவி வந்தனர். ஆனால் இந்த ஆண்டு எங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துவிட்டு, எங்களுடைய அறங்காவலர் உரிமையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

இதனால் பிரச்சனை வேண்டாம் என்று நாங்கள் யாருமே மலர் தூவ வேண்டாம் என்று முடிவு செய்தோம். எங்கள் கோயில் அர்ச்சகர் சங்கர் மட்டும் மலர் தூவி ஊர்வலத்தைத் தொடங்கி வைக்கட்டும் என்று கூறினோம். ஆனால் அவரையும் மிரட்டியுள்ளனர். நீ எப்படி மலர் தூவலாம் என்று கேட்டுள்ளனர். சுவாமியைத் தூக்கிச் செல்லும் கஜேந்திரன் என்ற இளைஞரையும், மற்றவர்களையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இது எங்களுடைய தனிப்பட்ட பிரச்சனை கிடையாது. எங்களுடைய பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை.

அடியாட்களும் கூலிப்படையினரும் இருக்கும்போது அம்மனை வெளியே எடுத்துச் சென்றால் சுவாமிக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? இன்னொரு விஷயத்தை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். எங்களுக்கு போலீசாரின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதை மறுக்க முடியாது. இன்று காலையில் மாவட்ட எஸ்.பி.யைச் சந்தித்தேன். முன்கூட்டியே தெரிவித்திருந்தால் முழுமையான பாதுகாப்பு வழங்கியிருப்போமே என்று அவர் என்னிடம் கேட்டார்.

ஆனால் சம்பவத்தின்போது எங்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கவில்லை. ஊர்வலம் ரத்து செய்யப்பட்டதற்கு இதுவும் முக்கியமான காரணம். ஏற்கெனவே இந்தப் பிரச்சனை இருப்பது எங்களுக்குத் தெரியும். போலீஸ் தரப்பிலிருந்தும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கூடுதல் எஸ்.பி. தரப்பிலிருந்தும் பேசினார்கள். அதற்கான தொலைபேசி அழைப்புப் பதிவுகள் எங்களிடம் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனைத் தரிசிப்பதற்காகக் காத்திருந்தனர். 300 ஆண்டுகளாக நடைபெறும் பாரம்பரிய விழா இது. பக்தர்கள் ஏமாற்றமடைந்தது எங்களுக்கும் வருத்தம்தான். ஆனால் அம்மனை வெளியே எடுத்துச் சென்றபோது எங்களுக்கோ, சுவாமிக்கோ, பொதுமக்களுக்கோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பேற்பார்கள்?

ராஜராஜேஸ்வரி அம்மன் சிலை முழுவதும் தங்கத்தால் ஆனது. விலை உயர்ந்த நகைகளும் அணிவிக்கப்பட்டுள்ளன. அடியாட்களும் கூலிப்படையினரும் இருக்கும்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சுவாமிக்கு ஏதாவது நடந்தாலோ, நகைகள் காணாமல் போனாலோ அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது நாங்கள்தான். அதனால்தான் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அம்மனை வெளியே எடுத்துச் செல்ல வேண்டாம் என்று திடீரென முடிவு செய்தோம். இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட முடிவு கிடையாது. அன்று மாலை 8 மணி வரையிலும் அம்மன் வெளியே ஊர்வலமாகச் செல்லும் என்ற முடிவில்தான் இருந்தோம். அதன் பிறகு நடந்த விரும்பத்தகாத சம்பவங்களால்தான் முடிவை மாற்றினோம்.

கொரோனா காலத்திலும் அரசின் உத்தரவுப்படி அம்மனை வெளியே எடுத்துச் செல்லாமல் அரண்மனை வளாகத்துக்குள்ளேயே அம்புவிடும் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறோம். இந்த ஆண்டும் அம்புவிடும் நிகழ்ச்சி முழுமையாக நடைபெற்றது. மற்ற 7 கோயில்களின் சுவாமிகளும் வெளியே ஊர்வலமாகச் சென்றன. ராஜராஜேஸ்வரி அம்மன் மட்டும்தான் வெளியே செல்லவில்லை. ராமநாதபுரத்தில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாக்களில் இதுவும் ஒன்று என்பது எனக்குத் தெரியும். சிறு வயதிலிருந்தே இந்த விழாவைப் பார்த்து வளர்ந்தவள் நான். இந்த ஆண்டு எதிர்பாராத சூழ்நிலையால் ஊர்வலத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தது. அடுத்த ஆண்டு முன்கூட்டியே உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, பாரம்பரிய விஜயதசமி ஊர்வலம் வழக்கம்போல நடைபெற நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் கூறினார்.

ஒரு காலத்தில் வாரிசுரிமைப் பிரச்சனையால் சிவகங்கை சீமை தனியாக உருவான வரலாறு கொண்ட ராமநாதபுரம் சேதுபதி மன்னர் குடும்பத்தில், தற்போது மீண்டும் நிர்வாக உரிமை தொடர்பான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை அந்த மோதலால் 300 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த விஜயதசமி ஊர்வலம் ரத்து செய்யப்பட்டிருப்பது ராமநாதபுரம் மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share